Last Updated : 01 Apr, 2022 07:06 PM

1  

Published : 01 Apr 2022 07:06 PM
Last Updated : 01 Apr 2022 07:06 PM

மனித மனங்களை குறுக்குகிறதா மிகப் பெரிய எண்கள்? - கோவிட் மரணங்களை முன்வைத்து ஓர் உளவியல் பார்வை

உலகின் பல்வேறு பழக்கவழக்கங்களை கோவிட் பெருந்தொற்று மாற்றியுள்ளது. பல புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. பெருந்தொற்றின் மூன்று அலைகளாலும் பாதிக்கப்பட்டு, இறந்தவர்களின் எண்ணிக்கை 61 லட்சத்தைக் கடந்துவிட்டது. உண்மையில் இந்த மரணங்களின் எண்ணிக்கைகள் மனிதர்களுக்கு எதை உணர்த்துகின்றன. மனித மூளை அவற்றை எவ்வாறு புரிந்து கொள்கிறது. கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

கரோனா பெருந்தொற்றுக் காரணமாக உலக அளவில் இதுவரை, 6.41 மில்லியன் - அதாவது 60 லட்சத்து 41 ஆயிரம் (2022 மார்ச் 31 நிலவரப்படி) மக்கள் மரணமடைந்திருக்கிறார்கள். உண்மையில் பெரும்பாலானா மக்களால் இந்த எண்ணிக்கையை காட்சிப்படுத்திப் பார்ப்பது என்பது முடியாத காரியம். ஏனெனில், அவ்வளவு பெரிய எண்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு மனித மூளை வடிவமைக்கப்படவில்லை. மனித மூளை, எண்களை எவ்வாறு புரிந்து கொள்கிறது என்பது குறித்து உலக அளவில் இன்னும் பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இருந்த போதிலும், மனிதர்கள் அதிக அளவிலான எண்களை கையாளுவதில் சிக்கலைச் சந்திக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. ஒவ்வொரு நாட்டிலும் கோவிட் - 19 அலைகள் அதன் உச்சத்தில் இருந்தபோது, தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் மரணமடைந்தார்கள். அந்த ஆயிரக்கணக்கான என்ற எண்ணிக்கையை மனிதர்கள் எவ்வாறு புரிந்துகொண்டிருப்பார்கள் என்ற கேள்வி எழும் நிலையில், மில்லியன் என்ற எண்ணிக்கையை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

ஓப்பீடுவதே மூளையின் வேலை: மூளை முழுவதும் ஒன்றொடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ள நியூரான்களின் கட்டமைப்பைப் பயன்படுத்தி, மனிதர்கள் எண்களை புரிந்துகொள்கிறார்கள். இந்த இணைப்பு பாதைகள் காதுகளுக்கு மேலே உள்ள மூளையின் நான்கு பெரும் பகுதிகளில் ஒன்றான சுவர் மடல் (parietal lobe) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. சுவர் மடல்கள் நேரம், காலம், தூரம் போன்ற அளவுகள் அல்லது எண்ணிக்கைகளை புரிந்து செயலாற்றுவதற்கும், பிற எண்களை புரிந்துகொள்வதற்கும் அடித்தளமிடுகிறது.

எண்ணிக்கைகளைக் குறிக்க மனிதர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றும் எழுத்துருக்கள் எல்லாம் மனித கலாச்சாரத்தின் கண்டுபிடிப்புகள்தான் என்றாலும், அவற்றின் அளவுகளை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. மற்ற விலங்குகளான மீன், குரங்கு, பறவையினங்களைப் போலவே மனிதர்களாலும் பிறந்த சில மணி நேரத்திலேயே எண்களை பிரித்து அறிந்துகொள்ள முடியும். பெரிய எண்களை விட சிறிய எண்களை குழந்தைகள், பெரியவர்கள், எலிகளாலும் கூட எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். 62 - 65 எண்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாட்டை விட 2 - 5 எண்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாட்டை வேகமாக எல்லோராலும் இனம் காண முடிகிறது.

அன்றாட வாழ்க்கையில் சிறிய அளவிலான எண்களையே நாம் அதிகம் பயன்படுத்துவதால் சிறிய அளவுகளை மனித மூளையால் எளிதில் அடையாளம் காண்டுகொள்ள முடிகிறது. வெவ்வேறு அளவிலான புள்ளிகளை வழங்கும்போது, சிறியவர்கள் மற்றும் பெரியவர்களால், மூன்று அல்லது நான்குக்கும் குறைவாக உள்ள புள்ளிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதைவிட அதிகமாக எண்ணிக்கை உயரும்போது மக்கள் பெரிய எண்களுக்கு மாற்றாக சிறிய எண்களின் வழியாக அதைப் புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றனர்.

பெரிய எண்ணிக்கைகள் மோசமானவை: 5-ஐ விட கூடுதலாக உள்ள எண்ணிக்கைகள் எளிதில் புரிந்துகொள்வதற்கு சிரமானவைகளாகவே இருக்கின்றன. இதனால் பெரிய எண்ணிக்கைகளை மனித மூளை கையாளும்போது வேறு சில வழிமுறைகளை மனித மூளை சார்ந்திருக்கிறது.

மனித மனம், இடமிருந்து வலமாக சிறிய மற்றும் பெரிய எண்களை ஒழுங்கமைத்து ஒரு கற்பனையான காலக்கோட்டை உருவாக்கும்போது மூளை தவறான முறையை முன்மொழிவதாக நிரூபிக்கப்பட்ட கோட்பாடு ஒன்று கூறுகிறது. இந்தக் கற்பனையான காலக்கோட்டை பயன்படுத்தும்போது மக்கள் பெரிய அளவைக் குறைத்து மதிப்பிட்டும், சிறிய அளவை மிகைப்படுத்தியும் தவறு செய்கிறார்கள். உதாரணமாக, புவியியல் மற்றும் உயிரியியல் படிக்கும் மாணவர்கள் பூமியில் முதல் உயிரினம் தோன்றுதற்கும், டைனோசர்கள் வாழ்ந்ததற்கும் இடையில் உள்ள காலத்தை குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. அது பில்லியன் கணக்கான ஆண்டுகள் என்பதற்கு பதிலாக, டைனோசர்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகள் வாழ்ந்ததாக மிகைப்படுத்தப்படுகிறது.

பெரிய எண்களின் மதிப்பை மக்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்று மற்றுமொரு ஆராய்ச்சி துல்லியமாக காட்டுகிறது. பெரும்பாலன மக்கள் 1 மில்லியன் என்பதை, எண்களின் வரிசையில் 1,000-க்கும் 1 பில்லியனுக்கும் இடையில் வைக்கின்றனர். உண்மையில் ஒரு பில்லியன் என்பது மில்லியனை விட ஆயிரம் மடங்கு பெரியது. இது மக்கள் ஆயிரம், பில்லியன் என்பதை எவ்வாறு காட்சிப்படுத்துகிறார்கள் என்று காட்டுகிறது. மக்களைப் பொறுத்தவரையில் அவற்றின் உண்மை மதிப்பை விட எண்ணிக்கைகளை "பெரிய" "மிகப்பெரிய" என்ற அளவிலேயே புரிந்து வைத்திருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், மக்கள் அவர்கள் தினமும் பயன்படுத்தும் எண்களில் இருந்து வெளியே இருக்கும் 6.41 மில்லியன் என்பதை எவ்வாறு புரிந்து கொள்வார்கள்?

பெருந்தொற்று பாதிப்பினால் உண்டான தீங்குகள், மரணங்களை எளிதாக விளக்க அவற்றை எண்களில் குறிப்பிடுவது மிகச்சிறந்த வழிமுறைதான் என்றாலும், 6 மில்லியன்களுக்கும் அதிகமான மக்கள் இறந்துவிட்டார்கள் என்ற எண்ணிக்கையை மனித மூளையால் அதன் அத்தனை தாக்கங்களுடன் புரிந்துகொள்ள முடியாது. மக்களின் மரணங்களை மிகப்பெரிய எண்களால் சுருக்குவதன் மூலம், மக்கள் மனதின் வரம்புகளுக்கு பலியாகி விடுகின்றனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்போது, இறந்துபோனது ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்த மனிதன் என்பது மறந்து, இறந்தவரும் ஓர் எண்ணிக்கையாக கருதப்படும் வாய்ப்புகளே அதிகம்.

பல்வேறு முகக்கவசத்தின் திறன்கள், கோவிட் -19 பிரிசோதனைகளின் துல்லியம், மாநில அளவிலான பாதிப்புகளின் எண்ணிக்கை, உலகளாவிய இறப்பு விகிதம் என இந்த பெருந்தொற்று தரவுகள் அனைத்து சிக்கலான மனித மூளையால் புரிந்துகொள்ளமுடியாத எண்களால் நிறைந்துள்ளது. இந்த எண்ணிக்கைகளும், தரவுகளும் எவ்வாறு அளிக்கப்படுகின்றன என்பதும் முக்கியமான ஒன்று.

ஒருவேளை இந்த வகையான எண்களை புரிந்துகொள்ளும் வகையில் மனித மூளை வடிவமைக்கப்பட்டிருந்தால், நம்மால் வேறு வகையான முடிவுகளை எடுத்து, அவற்றை செயல்படுத்தி இருக்க முடியும். இப்போது நம்மால் செய்ய முடிந்தது எல்லாம், 61 லட்சம் என்ற எண்ணிக்கைக்குப் பின்னால் மறைந்து போன ஆன்மாக்கள் சாந்தியடைய பிரார்த்தனை செய்வது மட்டும்தான்.

| ஸ்டாண்ஃபோர்டு பல்கலை.யின் ஆய்வாளர்கள் லிண்ட்சே ஹசக், எலிசபெத் ஒய்.டமூரியன் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது. | தகவல் உறுதுணை: தி கான்வர்சேஷன் |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x