Published : 11 Mar 2022 08:11 PM
Last Updated : 11 Mar 2022 08:11 PM

இருமல் முதல் தொண்டை பிரச்சினைகள் வரை: மகத்துவம் வாய்ந்த திப்பிலி - ஆயுர்வேத குறிப்புகள்

திப்பிலியின் வேரைத் திப்பிலி மூலம் என்று அழைப்பார்கள். திப்பிலி என்றும், மாதவி என்றும் இதற்குப் பெயர். `கணா’ என்றும் சொல்வது உண்டு. உலர்ந்தால் உஷ்ணவீர்யமாக மாறும். இருமல், சளி, கபம், அதிகரித்த மூட்டு வாதம் போன்றவற்றுக்குச் சிறந்தது.

இதனைப் பத்து பத்தாகக் கூட்டிக் குறைக்கும் முறை உண்டு. இதற்குத் திப்பிலி வர்த்தமானப் பிரயோகம் என்று பெயர். பழங்காலத்தில் இவ்வாறு செய்கிறபோது, செம்மறி ஆட்டுப் பாலைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

திப்பிலி ரசாயனம் இருமல், சளிக்கு ஒரு சிறந்த மருந்து. இதனால் செய்யப்படும் தைலம் மூல நோய்களுக்கும், குடலில் வாயு சேர்ந்த நிலைகளிலும், வஸ்தி (எனிமா) செய்யவும் பயன்படுகிறது. இதை 15 நாட்களுக்கு மேல் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை.

திப்பிலியின் காய்களில் வெற்றிலை போன்ற காரத்தன்மை அடங்கியுள்ளதால் வாசனை இருக்கும். கருமிளகைக் காட்டிலும் திப்பிலியின் காய்களில் காரத்தன்மை மிகுந்திருக்கும். மிளகு மற்றும் வெற்றிலை வகையைச் சார்ந்த இது `பைப்பர் லாங்கம்’ (Piper longum) என்ற தாவரப் பெயரால் அழைக்கப்படுகிறது.

திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டுவர இருமல், தொண்டை கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.

திப்பிலி 50 கிராம், கரிசலாங்கண்ணி இலை 25 கிராம் ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் போட்டுச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்து, அதன் எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து, அதே அளவு சர்க்கரை கூட்டி ஐந்து கிராம் அளவு இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல், களைப்பு நீங்கும்.

திப்பிலி 10 கிராம், தேற்றான் விதை ஐந்து கிராம் சேர்த்துப் பொடியாக்கிக் கழுநீரில் ஐந்து கிராம் போட்டு ஏழு நாளைக்குக் காலையில் குடித்துவர வெள்ளை, பெரும்பாடு நீங்கும்.

திப்பிலி பொடி, கடுக்காய் பொடி சமஅளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இரண்டு வேளை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குச் சாப்பிட்டுவர, இளைப்பு நோய் குணமாகும்.

- ’நலம் வாழ’ பகுதியில் இருந்து.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x