Published : 09 Mar 2022 08:05 AM
Last Updated : 09 Mar 2022 08:05 AM
மிளகை காயகல்ப மூலிகையாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். திரிகடுகத்தில் மிளகிற்கு முக்கிய இடமுண்டு. 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பதிலிருந்து மிளகின் மகத்துவத்தை அறியலாம்.
மிளகு மூச்சுமுட்டு நோய், சுவாசக் குழாய் நோய்களுக்குச் சிறந்தது. தேனுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும். தொண்டை வலிக்குத் தேனுடன் கொடுப்பார்கள். இது வாயு வருவதைத் தடுக்கும். தலைவலிக்கு இதை அரைத்துப் பற்று போடலாம். சில வறண்ட தோல் நோய்களுக்கு, மிளகுத் தைலம் சிறந்தது. இது பித்தத்தை அதிகரிக்கும். கபத்தைக் குறைக்கும். சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். வெயில் காலத்தில் இதைப் பயன்படுத்த வேண்டாம். வயிற்றுப் புண், குடல் புண் உடையவர்கள் இதைப் பயன்படுத்த வேண்டாம். உஷ்ண வீரியமானது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். மரிசாதி தைலம், தாளிஸாதி சூரணம் போன்றவற்றில் எல்லாம் இது சேருகிறது.
மிளகுச் சூரணத்தைத் தேன் மற்றும் நெய்யுடன் சேர்த்துக் கொடுத்தால் காசத்துக்குச் சிறந்தது. மிளகுச் சூரணத்தை மோர் அல்லது தயிருடன் சேர்த்துக் கொடுத்தால் வயிற்றுப் போக்குக்கு நல்லது. மிளகுச் சூரணம், சீரகம் மற்றும் தேனுடன் தினமும் இரண்டு வேளை எடுத்துக்கொள்வது மூல நோய்க்குச் சிறந்த சிகிச்சை.
பல் நோய்களுக்கு மிளகுச் சூரணத்தை லவங்கத்துடன் சேர்த்து வைக்கலாம். மிளகுச் சூரணத்தை உணவுடன் எடுத்துக்கொள்வதால் அது சிரைகளிலும், தமனிகளிலும் ரத்த ஓட்டத் தடை ஏற்படாமல் தடுக்கும். இது ரத்த உறைதலையும் கட்டுப்படுத்தும்.
விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது என்பதைக் குறிக்கவே “பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்றார்கள் முன்னோர்கள்.
மிளகின் வெளிப்புறக் கருப்பு அடுக்கு, கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது. எனவே, மிளகு கலந்த உணவைச் சாப்பிட்டு வருவதன் மூலம் எடையைக் குறைக்கலாம்.
ஆக்சிஜனேற்றியாக செயல்படும் மிளகு புற்றுநோய், இதயநோய், கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும், ஆரம்பக்கட்டப் பிரச்சினையை எதிர்த்துச் செயல்படும்.
சளி, ஜலதோஷம் அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, தினமும் மூன்று வேளைக்கு அரை ஸ்பூன் சாப்பிடுவது நல்லது. இரண்டு நாட்களிலேயே நல்ல மாற்றத்தைக் காணலாம்.
சிலருக்குத் தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாவதை புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்துத் தலையில் புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்த்துவர முடி முளைக்கும்.
மிளகு எல்லாவித விஷங்களுக்கும் சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அருகம்புல்லையும், பத்து மிளகையும் இடித்துத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்திவந்தால், விஷக்கடிகள் முறிந்துவிடும்.
மிளகை ஒரு ஸ்பூன் எடுத்துப் பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்துச் சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.
மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட்டால் தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையைச் சுவாசித்தால் தலைவலி தீரும், சளியும் குணமாகும். பொடிபோல் மூக்கில் உறிஞ்சினாலும் தலைவலி தீரும்.
- ஆயுர்வேத மருத்துவர், கட்டுரையாளர்
`நலம் வாழ` பகுதியிலிருந்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT