Published : 18 Nov 2020 01:42 PM
Last Updated : 18 Nov 2020 01:42 PM

பசித்துப் புசித்தால் நோயற்றுப் போகும்: இன்று இயற்கை மருத்துவ தினம்!

நோய் இல்லாப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். அதேநேரம் தாறுமாறாக மாறிக்கிடக்கும் இன்றைய வாழ்க்கை முறையாலும், துரித உணவுக் கலாச்சாரத்தினாலும் நோய் இல்லாத வாழ்வு என்பது பலருக்கும் சவாலாகவே இருக்கிறது. இப்படியான சூழலுக்கு மத்தியில் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்வதன் மூலமும், இயற்கை மருத்துவத்தின் மூலமும் நம் ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிடலாம் என்கிறார் மருத்துவ அலுவலர் சுஜின் ஹெர்பர்ட்.

இன்று (நவ.18) இயற்கை மருத்துவ தினம். இந்த நாளில் இயற்கை மருத்துவத்தின் மகத்துவம் குறித்து குமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ உதவி மருத்துவ அலுவலர் சுஜின் ஹெர்பர்ட் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசினார்.

''1945-ம் வருடம் 90 நாட்கள் இயற்கை மருத்துவ சிகிச்சை பெற்ற மகாத்மா காந்தி நவம்பர் 18-ம் தேதி ஒரு இயற்கை மருத்துவ நிறுவனத்தைத் தொடங்கி வைத்து, ‘நான் இனி 120 வயது வரை உயிர் வாழலாம். இயற்கை மருத்துவம் என் உடல் நிலையை மாற்றியது’ என சூளுரைத்தார். மகாத்மாவின் இந்த மாற்றத்திற்குக் காரணம் 90 நாட்கள் அவர் கடைப்பிடித்த இயற்கை மருத்துவ ஒழுக்க நெறிகள்தான்.

இயற்கை மருத்துவத்தின் ஐந்து ஒழுக்க நெறிகளான 2-3 லிட்டர் நீர் அருந்துதல், 2 முறை உணவு உண்ணுதல், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகள், வாரம் ஒரு நாள் உண்ணா நோன்பு, தினம் இரு முறை தியானம் அல்லது இறை வழிபாடு ஆகியவை ஒரு மனிதனின் உடல் மற்றும் மனதைச் சுத்தப்படுத்தி ஆரோக்கிய உடல் மற்றும் தெளிந்த சிந்தனையை அளிக்கிறது.

நீர் அருந்துதல்:

உடலின் மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது. ‘நீரின்றி அமையாது உடல்’ - உடலின் நீர் எப்பொழுதும் சமநிலையில் இருக்க வேண்டும். இல்லையேல் உடல் வெப்பம் கட்டுக்குள் இருக்காது. ஹார்மோன்கள் சரிவரச் செயல்படாது. சத்துப் பொருட்கள் சரியாகச் செல்களுக்குச் சென்று சேராது. பிராண வாயு உடலின் பகுதிகளுக்குச் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டு இதயத் துடிப்பு அதிகரிக்கும், இதயம் சோர்வடையும். தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் நீர் அருந்துவது மூலம் சிறுநீரகம் சரியாகக் கழிவுகளை வெளியேற்றும், மலச்சிக்கல் நீங்கும், வயிற்றில் அமிலத்தன்மை குறையும். உடல் சூடு தணியும். தேவையான நீர் அருந்தினால் நீர் ஓர் அருமருந்து என உணர முடியும்.

உணவு முறைகள்:

‘பசித்துப் புசி’ என்பதே இயற்கை மருத்துவத்தின் தத்துவம். தினமும் இருமுறை உணவு உண்பது உடல் நலத்திற்கு உகந்தது. இன்றைக்குள்ள முக்கியமான அனைத்து நோய்களும் அதிகம் உண்பதால் உருவானவை. உண்ட உணவு செரிக்கும் முன் மீண்டும் உண்பது வயிற்றில் அமிலத்தை அதிகரிக்கும். கூடவே ஜீரண சக்தியைக் குறைப்பதுடன், குடல் புண்களை உருவாக்கும். உடலில் கொழுப்பு சேர்வதால் உடல் பருமன் அதிகரித்து ரத்தத்திலும் கொழுப்பு சேர்கிறது. ரத்தக் குழாய் அடைப்பு, இதய நோய்களுக்குக் காரணமாகவும் அமைகிறது. அளவான, ஆரோக்கியமான உணவு மட்டுமே நம் உடல் வலிமையைக் கூட்டி நோயற்ற வாழ்வைத் தரும். சத்து நிறைந்த காய், கனிகள், கீரைகளுடன், போதிய பயிறு, சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உணவில் இருத்தல் அவசியம். ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

யோகா மற்றும் உடற்பயிற்சி:

‘அசையா மரம் பட்டுப்போன மரம்’ என்பார்கள். அதேபோல் உடல் அசைவின்றி இருந்தால் அது உயிரற்றதற்குச் சமம். உடலில் அசைவினைப் பொறுத்து இதயம், நுரையீரல், குடல்கள் மற்றும் உள் உறுப்புகள் இயங்கும். உள் உறுப்புகளின் வேலை சீராக வேண்டுமானால் உடற்பயிற்சி மிக அவசியம். உடற்பயிற்சியால் ரத்த ஓட்டம் சீராகும். நுரையீரல் சுருங்கி விரியும் தன்மை அதிகரிக்கும். யோகா பயிற்சி செய்வதால் உடல் மற்றும் மனதிற்கான தொடர்பு அதிகரிக்கும். தசைகள் விரிந்து சுருங்கி பலமடையும். சுவாசம் சீராகும், இதயம் பலம் பெறும், ஜீரணம் எளிதாகும். கழிவுகள் சீராக வெளியேறும், மனத்தெளிவு பிறக்கும். கோபம், பதற்றம் மாறும். தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வதால் நோயின்றி வாழலாம்.

உதவி மருத்துவ அலுவலர் சுஜின் ஹெர்பர்ட்

உண்ணா நோன்பு:

‘உண்ணா நோன்பே சிறந்த மருந்து’- குறுகிய கால நோய்கள் உண்ணா நோன்பு மூலம் இயற்கை மருத்துவத்தில் சரி செய்யப்படுகிறது. உணவுக் கட்டுப்பாட்டில் ஒன்றான நீர் உணவுகள், ஜீரணத்திற்காகவும் மற்ற கழிவு நீக்க வேலைகளுக்காகவும் வீணாகும் சக்தியை நோய் எதிர்ப்புக்கு நேராகத் திருப்பி விடுகிறது. இதன் மூலம் காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்கள் எளிதாகக் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். கொடிய நோய்களான புற்றுநோய், உடல் பருமன், ரத்த நாள அடைப்புகள், கொலஸ்ட்ரால் போன்றவை வராமல் தடுப்பதற்கு வாரம் ஒரு முறை இயற்கை மருத்துவரின் ஆலோசனையின்படி உண்ணாநோன்பு இருத்தல் சாலச் சிறந்தது.

தியானம் மற்றும் இறை வேண்டல்:

மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு இணையாக மன வலிமையும் அவசியம். தினமும் இருமுறை தியானப் பயிற்சிகள் அல்லது இறை வேண்டல் செய்வதன் மூலம் மனம் மற்றும் ஆன்மா தெளிவடையும். வெறுப்பு, பகைமை, கோபம், படபடப்பு மறையும். ஹார்மோன்கள் சீரடையும். இதயம், நுரையீரல் போன்ற உள் உறுப்புகள் நிதானமாக வேலை செய்யும். மொத்தத்தில் உடலும் மனமும் தெளிவடைந்து சீராக நோயின்றி அமையும். மேற்கூறிய ஐந்து இயற்கை மருத்துவ முறைகளைச் சரியாகக் கடைப்பிடிப்பதன் மூலம் நோயில்லா சமுதாயம் படைக்க முடியும்” என்றார் சுஜின் ஹெர்பர்ட்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x