Published : 04 Feb 2020 11:27 AM
Last Updated : 04 Feb 2020 11:27 AM
சீனாவில் நாய் முகமூடிகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கு கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அச்சமே காரணமாகக் கூறப்படுகிறது.
சீனாவின் ஹூபே மாகாணம், வுஹான் நகரில் உயிரைக் குடிக்கும் கரோனா வைரஸ் உருவானது. அந்த வைரஸ் சீனா மட்டுமின்றி, 27 நாடுகளுக்கு வேகமாகப் பரவியுள்ளது.
இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, 425 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளனர். திபெத், நேபாளம், இந்தியா, ஹாங்காங், என ஏராளமான நாடுகள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, கேரளாவில் 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சீனாவில் வசிக்கும் அனைவரும் வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க முகமூடி அணிந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் சீனாவில் செல்லப்பிராணிகளாக நாயை வளர்க்கும் உரிமையாளர்கள், அவற்றையும் வைரஸில் இருந்து பாதுகாக்க விரும்பினர். இதனால் நாய்களுக்கும் முகமூடி அணிந்துவிட ஆரம்பித்துள்ளனர். இதனால் நாய் முகமூடிகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. பெய்ஜிங் முகமூடி உரிமையாளர் ஒருவர், கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், நாய் முகமூடிகளின் விலை 10 மடங்கு அதிகரித்துள்ளது என்கிறார்.
ஆரம்பத்தில் மாசுக் காற்றில் இருந்து செல்லப் பிராணிகளைப் பாதுகாக்கவே இந்த முகமூடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. புகையில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் கீழே கிடக்கும் உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது, தரையை நக்குவது உள்ளிட்டவற்றைத் தடுக்கவுமே இவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் கரோனா பாதிப்பில் இருந்து நாய்களைக் காப்பாற்ற, நாய் முகமூடிகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். செல்லப்பிராணிகள் மூலம் தங்களுக்கும் கரோனா தொற்றிவிடக் கூடாது என்ற எண்ணத்திலும் நாய்களுக்கு முகமூடிகள் அணிவிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
எனினும் சீன மக்கள், நான்கு கால் நண்பர்களுக்கும் முகமூடி வாங்கி அணிவித்து விடுவது இணைய வெளியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT