Published : 31 Dec 2019 11:23 PM
Last Updated : 31 Dec 2019 11:23 PM
உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தினம் ஆங்கிலப் புத்தாண்டு. இந்த நாளை மத, இன, மொழி வேறுபாடில்லாமல் மக்கள் சிறப்பாக வரவேற்று மகிழ்கின்றனர்.
உலகத்திலேயே நியூசிலாந்து நாட்டின் சமோவா பகுதியில்தான் முதன்முதலில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. இந்திய நேரப்படி, டிச. 31-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அங்கே புத்தாண்டு பிறந்துவிடுகிறது. அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் மாலை 6.30 மணியளவில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
பட்டாசுகளை வெடித்தும் வான வேடிக்கைகளை நிகழ்த்தியும் மக்கள் புத்தாண்டை வரவேற்கின்றனர். இனிப்புகளைப் பரிமாறியும் பூக்களை வழங்கியும் புத்தாண்டு தருணங்கள் நினைவில் இருத்தப்படுகின்றன.
உலகெங்கும் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இதற்குப் பின்னால் ஒரு சுவாரசிய வரலாறு இருக்கிறது.
புத்தாண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் அப்போது ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டாகக் கொண்டாடப்படவில்லை. அந்தக் காலகட்டத்தில் ரோமானிய காலண்டரில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. மார்ஷியஸ் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட மார்ச் மாதம் முதல் மாதமாக இருந்தது. அதனால் மார்ச்சில்தான் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
அதைத் தொடர்ந்து ரோமானிய மன்னரான போம்பிலியஸ் இரண்டு மாதங்களைச் சேர்த்து மொத்தம் 12 மாதங்களாக்கினார். ஜனஸ் என்னும் ரோமானியக் கடவுளின் நினைவாக ஜனவரியஸ், பிப்ரவரியஸ் மாதங்கள் சேர்க்கப்பட்டன.
ஜூலியன் காலண்டர்
புகழ்பெற்ற மன்னரான ஜூலியஸ் சீசர், ஜூலியன் காலண்டரை உருவாக்கினார். அதில்தான் ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது உலகம் முழுவதும் பெரும்பாலானோர் பின்பற்றும் கிரிகோரியன் காலண்டரை ஒத்திருந்தது. கடவுள் ஜனஸைக் கவுரவிக்கும் விதமாக ரோமானியர்கள் அம்மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்தனர். புத்தாடை உடுத்தி மகிழ்ந்தனர். பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர்.
எனினும் யேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ம் தேதியையே (கிறிஸ்துமஸ்) புத்தாண்டாகக் கொண்டாட வேண்டுமென இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அந்நாட்டு மக்கள் டிசம்பர் 25-ம் தேதியைக் கொண்டாடத் தொடங்கினர்.
கிரிகோரியன் காலண்டர்
குழப்பம் நீடித்த நிலையில் கடைசியாக கி.பி. 1500-களில் போப் கிரிகோரி என்பவர், லீப் ஆண்டை உருவாக்கி புதிய காலண்டரை உருவாக்கினார். இதைத்தொடர்ந்து கிரிகோரியன் காலண்டர் நடைமுறைக்கு வந்தது. இதைத்தான் இன்று நாம் பின்பற்றி, புத்தாண்டைக் கொண்டாடி வருகிறோம்.
புத்தாண்டு சபதம்
இது இன்றோ, நேற்றோ தொடங்கியதில்லை. புத்தாண்டு சபதம் மேற்கொள்வது ஆதிகாலத்தில் இருந்தே வழக்கமாக இருந்திருக்கிறது. பாபிலோனியர்கள் புத்தாண்டில் பழைய கடன்களை அடைப்போம் என்றும் கடன் வாங்கிய பொருட்களைத் திருப்பித் தருவோம் என்றும் உறுதி பூண்டனர்.
நாமும் எத்தனையோ சபதங்களை ஏற்றிருப்போம், சில நாட்கள் முயற்சித்து கைவிட்டும் இருப்போம். இந்தப் புத்தாண்டில் இருந்தாவது எடுத்த சபதத்தை நிறைவேற்றுவோம். முடியவில்லையா? எந்த சபதமும் செய்ய மாட்டேன் என்றாவது சபதம் எடுப்போம்.
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...