Published : 30 Dec 2019 03:40 PM
Last Updated : 30 Dec 2019 03:40 PM

நள்ளிரவு நடை: பெண்களின் தீராக் கனவை நனவாக்கிய கேரள அரசு!

தொழில்நுட்பமும் நாகரிகமும் போட்டி போட்டு வளரும் இந்தக் காலகட்டத்திலும் நடுநிசியில் ஒரு பெண்ணால் தனியாகத் தெருவில் நடந்து செல்வது மட்டும் கனவாகவே இருக்கிறது.

உடல் முழுக்க நகைகளுடன் நள்ளிரவில் இளம்பெண் நடந்து செல்லக்கூடிய காந்தி சொன்ன சுதந்திரம் மட்டும் இன்னும் கைகூடவே இல்லை. இந்நிலையில் பல்வேறு சமுதாய முன்னெடுப்புகளுக்கு உதாரணமாகத் திகழும் கேரளா, பெண்களுக்கான இரவு நடையைச் சாத்தியப்படுத்தி உள்ளது.

டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு வன்புணர்வு செய்து, கொல்லப்பட்ட நிர்பயா 2012 டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார். அவரின் நினைவாக அனுசரிக்கப்படும் நிர்பயா தினத்தில் (டிச. 29), கேரளப் பெண்களின் இரவு நடை தொடங்கியது.

இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெண்கள், கூட்டமாக நடந்து சென்றனர். அவர்களுக்குப் பின்னால் சிறிய இடைவெளியில் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். கேரள அரசு சார்பில் பல்வேறு பகுதிகளில் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டது. இதன்படி, மாநிலம் முழுவதும் சுமார் 250 பகுதிகளில் 8 ஆயிரம் பெண்கள் இதில் கலந்துகொண்டனர்.

அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளிலும் இந்த நள்ளிரவு நடை மேற்கொள்ளப்பட்டது. இதில் சதியா என்னும் முஸ்லிம் பெண், தனது 3 மாதக் குழந்தையோடு நடந்து வந்து கவனம் ஈர்த்தார். ஜம்ஷீலா என்னும் பெண், வயநாட்டில் இருந்து கோழிக்கோடு வந்தார். ஏராளமான பெண் எம்எல்ஏக்கள், எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். சனிக்கிழமை இரவு 11 மணியில் இருந்து ஞாயிறு காலை 1 மணி வரை இந்த இரவு நடை நீடித்தது.

ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெண்கள், மெழுகுவர்த்தியை ஏந்தி பெண்கள் பாதுகாப்புக்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து ''கேரள அமைச்சர் ஷைலஜா கூறும்போது, நேரக் கட்டுப்பாடுகள் இல்லாமல் பெண்களாலும் எல்லா நேரத்திலும் வெளியே சென்று வரமுடியும் என்ற செய்தியை இரவு நடை சொல்கிறது'' என்றார்.

''இரவு நேரம் என்பதாலேயே வெளியில் செல்லவும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் அச்சப்பட்ட பெண்களுக்கு இதுவொரு ஆகச்சிறந்த முன்னெடுப்பாக அமையும். இந்த முன்னுதாரண நடவடிக்கை, நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும்''என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x