Published : 02 Nov 2019 03:37 PM
Last Updated : 02 Nov 2019 03:37 PM
நாமே பரபரப்பாக்கிக் கொண்ட வாழ்க்கையில் இன்னல்களையும் நாமே வரவழைத்துக் கொள்கிறோம்.
இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் லைஃப்ஸ்டைல் நோய்கள் பலவும் அப்படியாக நம் பரபரப்பினால் நம் பழக்கவழக்கத்தால் அழைக்கப்படுபவையே.
உணவுப் பழக்கவழக்கங்களால் வரும் நோய்கள் ஏராளம் என்றால் சிற்சில கவனக்குறைவுகளால், அசட்டைகளால் வரும் நோய்களும் இருக்கின்றன. அப்படி ஓர் உபாதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
தமிழகத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெரும்பாலான பெண்கள் தலைக்கு குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிலர் கோயிலுக்குச் செல்வதற்காக, சிலர் வாரத்தில் இருமுறை என்ற கணக்குக்கு செவ்வாய், வெள்ளி சரியாக இருக்கும் என்பதற்காக அவ்வாறு பழக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அப்படித்தான் அந்த நடுத்தர வயது கொண்ட பெண்ணும் தவறாமல் வாரத்தில் இருமுறை தலைக்குக் குளித்துவந்தார். அதில் ஒன்றும் பிரச்சினையில்லை.. ஆனால் பிரச்சினை அவர் தலைக்குக் குளித்துவிட்டு அப்படியே தண்ணீர் சொட்டச் சொட்ட அலுவலகம் சென்று வந்ததிலேயே இருந்திருக்கிறது.
சில ஆண்டுகளில் அவருக்குக் கழுத்தின் வலது பக்கத்தில் (தாடைக்கு அடியில்) வீக்கம் ஏற்பட்டது. அது கிட்டத்தட்ட கிரிக்கெட் பந்து அளவுக்கு வளர்ந்தது. கூடவே அவ்வப்போது காய்ச்சல். ஒவ்வொரு மருத்துவராகப் பார்த்து பயாப்ஸி வரை சென்றது.
இறுதியாக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு குடும்ப மருத்துவரிடம் சென்றார் அந்தப் பெண். அவரின் கேஸ் ஹிஸ்டரி எல்லாம் படித்துவிட்டு அப்பெண்ணிடம் சற்றே கூடுதலாக நேரம் ஒதுக்கி அவரின் பழக்கவழக்கங்கள் குறித்து விசாரித்திருக்கிறார் அந்த குடும்ப மருத்துவர். அப்போதுதான் தலைக்கு எத்தனை முறை குளிப்பீர்கள் எனக் கேட்டுள்ளார்.
அந்தப் பெண்ணோ வாரம் இருமுறை என்றதோடு ஆனால், குளித்துவிட்டு துவட்டமாட்டேன் அப்படியே அலுவலகம் புறப்பட்டுவிடுவேன் என்ற முக்கியத் தகவலை சொல்லியிருக்கிறார்.
அதன் பின்னர் ஸ்கேன் பரிசோதனைகளுக்குப் பிறகு அந்த நீர்க்கட்டியை மருத்துவர் பாதுகாப்பாக அகற்றியிருக்கிறார்.
கிரிக்கெட் பந்து அளவுக்கு கட்டியுடன் 1 மாதத்துக்கும் மேலாக அந்தப் பெண் பட்ட அவதிக்குக் காரணம் அசட்டை.
நம்மூரில் இப்படியாக தலையை சரியாகக் காயவைக்காமல் செல்லும் பெண்களை அதிகளவில் பார்க்கலாம். அவர்களுக்கான விழிப்புணர்வு குறித்து மருத்துவர் ஒருவரிடம் பேசினோம். காரைக்குடியில் பொது மருத்துவராக இருக்கும் மணிவண்ணன் சில ஆலோசனைகளை வழங்கினார். இவர் சூழலியல் ஆர்வலரும்கூட.
மருத்துவர் எம்.மணிவண்ணன் கூறியதாவது:
தலைக் குளித்துவிட்டு ஈரத்தைக் காயவைக்காமல் இருப்பது நாளடைவில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தக் கூடியது.
நம் மூளையைச் சுற்றி சிறிய நீர்ப்பைகள் இருக்கும். அவை வெளியில் இருக்கும் தட்பவெப்பம் நம் மூளையை பாதிக்காத வகையில் ஒரே வெப்பநிலையில் வைத்திருக்கும்.
நாம் தலைக்குக் குளித்துவிட்டு தண்ணீரை நன்றாக துவட்டி காயவைக்காமல் விடும்போது அது தலைக்குள் இறங்கும். அது நீர்ப்பைகளைத் தாக்கி சைனஸிட்டிஸை உண்டாக்கும். தலைவலி, மூக்கடைப்பு, தும்மல், அலர்ஜி எனத் தொடர்ந்து உபாதைகள் ஏற்படும்.
காது, மூக்கு, தொண்டை எல்லாம் ஒரே ட்ராக்டில் இருப்பதால் தலையில் கோர்த்துக் கொள்ளும் தண்ணீர் இந்த மூன்று பாகங்களிலுமே தொந்தரவை ஏற்படுத்தும். சைனஸிட்டிஸ், காது வலி, காதில் சீல் வடிதல் என ஒவ்வொன்றாக ஏற்பட்டு 50 வயதில் செவிட்டுத் தன்மை ஏற்படக் கூட வாய்ப்பை உருவாக்கும்.
பொதுவாக ஒரு வாரத்தில் இத்தனை நாட்கள் தலைக்கு குளிக்கலாம் என்றெல்லாம் எந்த விதிவிலக்கும் அல்ல. நாம் வெப்பமண்டலத்தில் வாழ்கிறோம், புற மாசும் அதிகமாக இருக்கிறது. அதனால், அடிக்கடி தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. நாம் செய்யும் தவறு காய வைப்பாமல் இருப்பது மட்டுமே. எனவே, தலைக்குக் குளிக்கும் நாளில் சற்று முன்னதாகவே எழுந்து குறைந்தது அரை மணி கேசப் பராமாரிப்பு என்பதற்காகப் பயன்படுத்தினால் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். வாய்ப்பிருந்தால் மாடியில் வெயிலில் காய வைக்கலாம். காலை வெயில் வைட்டமின் டி இளநரைக்கு நல்ல மருந்து. இல்லாவிட்டால், மின்விசிறிக் காற்றில் காயவைக்கலாம். ஹேர் ட்ரையர் உபயோகப்படுத்துவது மிகமிகத் தவறானது. தலைமுடி உடனே காய்ந்தாலும்கூட தொடர்ச்சியாக ஹேர் ட்ரையர் பயன்படுத்தினால் முடியின் வேர் பாதிக்கப்பட்டு முடி உதிர்தல் ஏற்படும்.
தலைக்கு ஷாம்பூ பயன்படுத்துவது மிகவும் கேடானது. ரசாயனங்களால் நிரம்பிய ஷாம்பூவுக்குப் பதிலாக சீயக்காய்ப் பொடி பயன்படுத்தலாம். சிலருக்கு சீயக்காய் அலர்ஜி ஏற்படுவதுண்டு. அத்தகைய ஒவ்வாமை இருப்பவர்கள் பாசிப்பயறு பொடி, வெந்தயம் என மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம்.
சிறு அசட்டை பெரிய அசவுகரியத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் ஆரோக்கியத்தைப் பேணுவதில் அக்கறை கொள்வோம். அதுவும் வேலைக்குச் செல்லும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது தொழிலில் இடையூறு இல்லாமல் முன்னேற அவசியமானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT