Published : 14 Oct 2019 05:43 PM
Last Updated : 14 Oct 2019 05:43 PM
ஓராயிரம் வார்த்தைகளால் விளக்க முடியாததை ஒற்றைப் புகைப்படம் சொல்லிவிடும் என்பார்கள். மொழி தேவைப்படாத அழகியலில் புகைப்படக் கலையும் ஒன்று. அதை உருவாக்கும் பிரம்மாக்கள், புகைப்படக்காரர்கள்.
அப்படிப்பட்ட ஒரு கலைஞரின் புகைப்படக் கண்காட்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அக்.13, 14-ம் தேதிகளில் நடைபெற்றது. நாகர்கோயிலைச் சேர்ந்த ஜாக்சன் ஹெர்பி என்பவரின் புகைப்படங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
கண்காட்சியில், கன்னியாகுமரியின் அடையாளமாய் நெடுதுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலை, ஏழ்மையைப் பொருட்டாகவே கருதாமல், குதூகலமாய்த் துள்ளிக் குதிக்கும் சிறுவர்கள், கைகளையே காலாக்கி நகரும் முதியவர், ஒக்கி புயலின் கோரத் தாண்டவங்கள், சாய்ந்து கிடக்கும் வாழை மரங்கள், இடுப்பில் குழந்தையோடும் தலையில் விறகுக் கட்டோடும் நடக்கும் பெண், பெண் விவசாயி நெல் நாற்றுக் கட்டுகளை அடுத்தவரிடம் வீசும் காட்சி, ஜோடியாகச் செல்லும் முதிய தம்பதி என அவரின் புகைப்படங்களும் அவை சொல்லும் சேதிகளும் நீண்டுகொண்டே செல்கின்றன.
போராட்டங்களும் வலிகளும் நிறைந்த தனது பயணம் குறித்து விரிவாகவே பேசுகிறார் ஜாக்சன். ''சின்ன வயசுல பெருசா படிப்பு ஏறலை. சொந்தக்காரர் மூலமா லோக்கல் டிவில வேலை பார்த்தேன். அப்படியே சென்னை வந்து தினத்தந்தி, தினகரன் பத்திரிகைகளுக்கு மாறினேன். ஊர்ப்பாசம் போகலை. நாகர்கோவிலுக்கே போய், தினமுரசுல வேலை பார்த்துட்டு இருக்கேன். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கும் போட்டோக்களைக் கொடுப்பேன்.
எப்போ, எங்க, என்ன மாதிரி போட்டோ எடுக்கணும்னாலும் தயாரா இருக்கறதைத்தான் என்னோட பலமா நினைக்கிறேன். ஒரு நல்ல போட்டோவாவது கிடைக்கணும்னு ஏராளமான இரவுகள் தூங்காம பைக்கை எடுத்துட்டு சுத்தி இருக்கேன். முந்தின நாள், நாகர்கோவில் பஸ் ஸ்டேண்ட்ல கணவன் மனைவிகூட சண்டை போட்டு மண்டைய உடைச்சுட்டார். அடுத்த நாள் எதேச்சையா போறேன். அப்போ அம்மா கட்டு போட்டு, படுத்திருக்க பையன் காத்து வீசிட்டு இருக்கான். அந்த நிமிஷத்தை என்னோட மரணம் வரைக்கும் மறக்க முடியாது'' என்று கண் கலங்குகிறார்.
ஒக்கி புயல் பாதிப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டதில் தொடங்கி மக்கள் போராட்டம், ரயில் மறியல், அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை எனக் கடைசியாய் பிரதமர் வந்த வரை அனைத்தையும் தன்னுடைய கேமராவில் பதிவு செய்திருக்கிறார் ஜாக்சன்.
''ஒக்கி அப்போ, எங்க மாவட்டமே கடுமையாக பாதிப்புக்கு உள்ளாச்சு. அதை அத்தனையும் பதிவு பண்ணனும்; அது மூலமாக மக்களுக்கு எதாவது நடக்கணும்னு வெறித்தனமா உழைச்சேன்'' என்கிறார்.
புகைப்படத்துக்கு நினைத்த கோணம் வேண்டும் என்றால் செல்போன் டவரோ, குட்டிச்சுவரோ, தண்ணீர்த் தொட்டியோ ஏறிவிடுவேன் என்று புன்னகைக்கும் அவர், ''ஒரு மழை நாள்ல நாய்க்குட்டி தன்னோட 11 குட்டிகளையும் எடுத்துக்கொண்டு போய் மறைவான பகுதில வச்சிட்டு இருந்தது. அப்போ எடுத்த படம்தான் இது'' என்று காட்டுகிறார்.
திடீரென நினைவு வந்தவராய், நம்மிடம் ஒரு காணொலியைக் காண்பிக்கிறார். அதில், தமிழகம் கொண்டு வரப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி கடலில் இறங்கிக் கரைக்கிறார். அப்போது புகைப்படக்காரர்கள் அனைவரும் மேலே இருந்து படங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். யாரும் எதிர்பாராத விதமாகக் கடலுக்குள் குதித்த ஜாக்சன், பொன்.ராதாகிருஷ்ணனின் முன்புறம் சென்று புகைப்படங்களை எடுத்துக் குவிக்கிறார். கடல் அலைகள் சீறி மேலெழும்புகிறது. ஆனாலும் சமாளித்து நிற்கிறார்.
''நம்ம ஊரைப் பத்தி நாம பேசாம வேற யார் பேசுவா? அதனாலதான், கன்னியாகுமரி சார்ந்த புகைப்படங்கள் மட்டும் இந்தக் கண்காட்சில இருக்கும். குறிப்பிட்ட சில சமூகத்தைச் சேர்ந்தவங்க இறந்தா, அவங்க பூர்வீக இடத்துலதான் அடக்கம் பண்ணுவாங்க. அங்க போக சாலையோ, வழியோ இருக்காது. வயல் வழியா உடலை எடுத்துட்டுப் போவாங்க. அப்படி ஒரு தருணத்துல எடுத்த போட்டோ இது'' என்கிறார் ஜாக்சன்.
''என்னோட எல்லா வளர்ச்சிக்கும் அப்பாதான் முதல் காரணம். நான் ஆசைப்பட்டேன் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக, இருந்த கொஞ்ச இடத்தையும் வித்து, எனக்கு கேமரா வாங்கிக் கொடுத்தார். அவர் இறந்து ஒரு மாசம்தான் ஆகுது. அவர் நினைவாதான் இந்தக் கண்காட்சிக்கே ஏற்பாடு செஞ்சோம். ஜோதி நிர்மலா ஐஏஎஸ் இல்லைன்னா நான் இன்னிக்கு இந்த இடத்துல நின்றிருக்க மாட்டேன்.
இன்னும் முக்கியமான, சவாலான தருணங்களை கேமரால சிறைபிடிக்கணும். புகைப்படக் கலை இன்னும் வளரணும். அதுக்கு எல்லா புகைப்படக் கலைஞர்களும் தங்களோட படைப்புகளை ஆவணப்படுத்தணும்'' என்றுகூறி வழியனுப்பி வைக்கிறார் ஜாக்சன் ஹெர்பி.
- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT