Published : 23 Sep 2019 03:31 PM
Last Updated : 23 Sep 2019 03:31 PM

கல்விக்கு வயது தடையில்லை: 83 வயதில் எம்.ஏ. முடித்த பஞ்சாப் முதியவர்; குவியும் பாராட்டுகள்

சோஹன் சிங் கில்

பஞ்சாப்

கல்விக்கு வயது தடையில்லை என நிரூபிக்கும் வகையில், பஞ்சாபில் 83 வயது நிரம்பிய முதியவர் ஒருவர், தன் வயது மூப்பைப் பொருட்டாகக் கருதாமல் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் 83 வயதான சோஹன் சிங் கில். இவர், கடந்த 1957-ம் ஆண்டு மஹில்பூரில் உள்ள கல்சா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். இதையடுத்து, அமிர்தசரஸில் உள்ள கல்லூரியொன்றில் கற்பித்தல் பயிற்சி குறித்த படிப்பை மேற்கொண்டார்.

இந்நிலையில், 83 வயதான சோஹன் சிங், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தொலைதூரக் கல்வி மூலம் ஆங்கிலத்தில் முதுகலைப் படிக்க விண்ணப்பித்தார். சமீபத்தில், முதுகலைப் படிப்பை முடித்த சோஹன் சிங், ஜலந்தர் பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.

இதுதொடர்பாக சோஹன் சிங் கூறுகையில், "நான், கற்பித்தல் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், என் கல்லூரியின் துணை முதல்வர் வார்யம் சிங் தான், நான் முதுகலை பட்டப் படிப்பை முடித்துவிட்டு, விரிவுரையாளராக வேண்டும் என வலியுறுத்தினார். நானும் அதனை விரும்பினேன். ஆனால், அதற்குள் ஆப்பிரிக்காவின் கென்யாவில் எனக்கு ஆசிரியராக வேலை கிடைத்தது. அதன்பிறகு, 1991-ல் நான் இந்தியா திரும்பினேன். 2017-ம் ஆண்டு வரை பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளேன். ஆனால், முதுகலைப் படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பம் என் மனதில் எப்போதும் இருந்தது" என்றார்.

முதுகலையில் பட்டம் பெற்றுள்ள சோஹன் சிங்குக்கு ஆங்கிலம் விருப்பப் பாடம். கென்யாவில் பணிபுரிந்ததால், ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதற்கு உதவியாக இருந்துள்ளது. ஐஈஎல்டிஎஸ் என்று சுருக்கமாக அறியப்படும் அனைத்துலக ஆங்கில மொழிக்கான தேர்வுக்காக பலருக்கு சோஹன் சிங் பயிற்சி அளித்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற பலரும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளில் பெரும் ஆர்வம் உடையவரான சோஹன் சிங், குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுத வேண்டும் என, தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளர்.

83 வயதில் முதுகலைப் பட்டம் முடித்துள்ள சோஹன் சிங்கைப் பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, மத்திய உணவுத் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், சிரோமணி அகாலி தளக் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்டோரும் பாராட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x