Published : 20 Sep 2019 12:20 PM
Last Updated : 20 Sep 2019 12:20 PM

'போஷன் அபியான்' ஊட்டச்சத்து திட்டத்தின் இலக்கை இந்தியா எட்டுமா?

தேசிய ஊட்டச்சத்து திட்டம் அல்லது போஷன் அபியான் என்றழைக்கப்படும் மத்திய அரசுத் திட்டத்தின் இலக்கை, இந்தியாவால் எட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில், இந்திய பொது சுகாதார நிறுவனம் ஆகியவற்றுடன் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஆகியவை இணைந்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன.

இதன்படி, உலகத்தின் மிகப்பெரிய ஊட்டச்சத்து திட்டம் 'போஷன் அபியான்'. இதன்மூலம் 10 கோடி மக்கள் பயன்பெறுவர் என்று பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டு, 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் இலக்குகள் வளர்ச்சிக் குறைவு (stunting), போதிய எடை இல்லாமை, பிறக்கும்போது எடை குறைவாக இருப்பது ஆகியவற்றை ஒவ்வோர் ஆண்டும் 2 சதவீதம் அளவுக்குக் குறைப்பதாகும். ரத்த சோகையை ஒவ்வோர் ஆண்டும் 3% என்ற அளவில் 2022-க்குள் குறைக்கப்பட வேண்டும்.

போஷன் அபியானின் சிறப்பு இலக்காக, வளர்ச்சிக் குறைபாட்டை 25 சதவீதமாக 2022-ம் ஆண்டுக்குள் முழுமையாகக் குறைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், இந்த இலக்கு பூர்த்தி செய்யப்படவில்லை.

வளர்ச்சிக் குறைபாட்டை 25 சதவீதம் என்ற அளவில் குறைக்க முடியாமல், 34.6% என்ற விகிதத்தில் உள்ளது. அதேபோல எடைக் குறைவு என்ற காரணியில் 22.7 சதவீதத்துக்குப் பதிலாக 4.8% அதிகமாக, 27.5% குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிறக்கும்போதே எடை குறைவாக இருக்கும் குழந்தைகளின் சதவீதம் 11.4 சதவீதத்துக்குப் பதிலாக 8.9% அதிகரித்து, 20.3% ஆக உள்ளது. ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலக்கும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. இதன்படி, 44.7% ஆக இருக்க வேண்டிய ரத்த சோகை குழந்தைகளின் விகிதம், 11.7% அதிகமாக, 56.4 சதவீதமாக உள்ளது.

இவையெல்லாவற்றையும் விட, ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான போஷன் அபியான் திட்ட இலக்குக்கும், நடைமுறைக்கும் 13.8% இடைவெளி உள்ளது. அதாவது 39.4 % ஆக இருக்க வேண்டிய ரத்த சோகையால் அவதிப்படும் பெண்களின் விகிதம், 13.8% அதிகமாக, 53.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

இதுகுறித்து 'தி இந்து'விடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினரான வினோத் பால், ''போஷன் அபியான் திட்டம் ஆண்டுக்கு 2% என்ற அளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை குறைக்கத் திட்டமிட்டது. ஆனால் இந்த விகிதம் 1% என்ற அளவில் சாத்தியமாகியுள்ளது. தற்போது நிலவும் சூழலில், இதுகுறித்து கவலைகொள்ளத் தேவையில்லை. இந்த விகிதம் விரைவில் அதிகரிக்கும்'' என்று தெரிவித்தார்.

2015-16 இல் வெளியான தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 38.4% வளர்ச்சிக் குறைபாடு கொண்டவர்கள்; 35.7% எடை குறைந்தவர்கள்; 18% குழந்தைகள் எடை குறைவாக ( 2.5 கிலோவிற்கும் குறைவாக) பிறந்தவர்கள்; 6-59 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளில் 58% பேர் மற்றும் 14-49 வயதுடைய பெண்களில் 53% பேருக்கு ரத்த சோகை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x