Published : 18 Jun 2019 11:24 AM
Last Updated : 18 Jun 2019 11:24 AM
காபி பானையிலிருந்து வெப் கேமராவை கொண்டுவந்தது போலவே வலையில் முதல் ஒளிப்படம் பதிவேற்றப்பட்டதும் தற்செயலாகவே நடந்தது.
வலைக்கு முன் இணையம் பெரும்பாலும் வரி வடிவில்தான் இருந்தது. வலை பிறந்தபோதும் தொடக்கத்தில் இந்த நிலைதான் இருந்தது. டிம் பெர்னர்ஸ் லீ உருவாக்கிய முதல் பிரவுசர், வரைகலைத் தன்மையோடு அனைத்து சாத்தியங்களைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் அது வரி வடிவத்துக்கானதாக இருந்தது.
1992-ம் ஆண்டில் வலையில் ‘ஜிஃப்’ வடிவில் ஒளிப்படங்களை இடம்பெறச் செய்வதற்கான வசதியை லீ உருவாக்கிக்கொண்டிருந்தார். இதைப் பரிசோதித்துப் பார்க்க விரும்பியபோது, அவர் கையில் கிடைத்த இசைக்குழு ஒன்றின் வண்ணப்படத்தை வலையில் ஏற்றினார். இந்தப் படமே வலையில் இடம்பெற்ற முதல் படம்.
இணையம்போலவே வலையும்கூட தொடக்க காலத்தில் பெரும்பாலும் ஆய்வு நோக்கிலேயே பயன்பட்டது. எனவே, அதன் வரி வடிவத் தன்மையை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால், ஒளிப்படங்களை இடம்பெற வைக்கும் தன்மை உள்ளிட்ட அம்சங்கள் வலை, ஆய்வு உலகுக்கு வெளியே பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தயாரானதை உணர்த்தியது.
இந்தக் காலகட்டத்தில்தான் மொசைக் பிரவுசர் அறிமுகமானது. மொசைக்குக்கு முன்பே சில பிரவுசர்கள் அறிமுகமாகியிருந்தன. லீ உருவாக்கிய முதல் பிரவுசர் தவிர, எர்வைஸ், வயோலா டபிள்யூடபிள்யூடபிள்யூ (ViolaWWW) உள்ளிட்ட பிரவுசர்கள் அறிமுகமாகியிருந்தன. இவை வலையை அணுக வழி செய்தாலும் கொஞ்சம் சிக்கலானதாக இருந்தன.
இதுபோன்ற சூழலில்தான், மொசைக் பிரவுசர் 1993-ல் அறிமுகமானது. கல்லூரி மாணவரான மார்க் ஆண்டர்சன் தன் நண்பர் எரிக் பினாவுடன் இணைந்து இந்த பிரவுசரை உருவாக்கினார்.
இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ஆண்டர்சன், அங்கிருந்த நேஷனல் சென்டர் ஃபார் சூப்பர் கம்ப்யூட்டிங் அப்ளிகேஷன்ஸ் (என்.சி.எஸ்.ஏ) பகுதிநேர ஆய்வாளராகவும் இருந்தார்.
1992-ல் இந்த மையத்தின் விஞ்ஞானிகள், வயோலா பிரவுசரை மாணவர் குழுவுக்குக் காண்பித்து, இணையத்தின் புதிய அங்கமாக உருவாகிக்கொண்டிருந்த வலையைப் பற்றியும் விவரித்தனர். இந்த அறிமுகத்தால் ஈர்க்கப்பட்ட ஆண்டர்சன், பினா, தங்கள் பங்குக்கு ஒரு பிரவுசரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் உருவாக்கிய பிரவுசர் என்.சி.எஸ்.ஏ. சார்பில் அறிமுகமானது.
முந்தைய பிரவுசர்களைவிட இது பயன்படுத்த எளிதாக இருந்தது. எந்தத் தகவலை எப்படி அணுகுவது என யாரோ கையைப் பிடித்து அழைத்துச்செல்வதுபோல அமைந்திருந்தது.
மைய பக்கம், ஒரு தகவலிலிருந்து முன்னோக்கி அல்லது பின்னோக்கிச் செல்வதற்கான வசதி உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. முக்கியமாக உருவப்படங்களை ஒருங்கிணைக்கும் வசதி இருந்தது.
முந்தைய பிரவுசர்களில் ஒளிப்படங்களைப் பார்க்கலாம் என்றாலும், அவை தனி விண்டோவில் தோன்றின. ஆனால், மொசைக் படங்களைத் தகவல்களுடன் சேர்ந்து தோன்ற வழிசெய்தது. சுருக்கமாகச் சொல்வதானால், மொசைக் பிரவுசர் பயனாளிகளுக்கு நெருக்கமாக இருந்தது. வலைக்கு அது பேருதவியாகவும் அமைந்தது.
(வலை வீசுவோம்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு: enarasimhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT