Last Updated : 18 Jun, 2019 11:23 AM

 

Published : 18 Jun 2019 11:23 AM
Last Updated : 18 Jun 2019 11:23 AM

யுவராஜ் எனும் கிரிக்கெட் யுகம்!

சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகள் நீடித்திருந்த யுவராஜ் சிங் ஓய்வு பெற்றுவிட்டார். யுவராஜ் சிங் என்றாலே ஒரே ஓவரில் விளாசிய 6 சிக்ஸர்கள், 2011 உலகக் கோப்பை நாயகன், புற்று நோயிலிருந்து மீண்டு கிரிக்கெட்டுக்கு வந்த தன்னம்பிக்கை நாயகன் போன்ற சில நினைவுகள் மட்டுமே வந்துசெல்லும். ஆனால், கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் இன்னும் சில அழுத்தமான தடங்களைப் பதித்திருக்கிறார்.

# சிறுவயதிலிருந்தே ஸ்கேட்டிங் வீரராக விரும்பியவர் யுவராஜ். 14-வயதுக்குட்பட்ட தேசிய ஸ்கேட்டிங்  சாம்பியன் பட்டம் வென்றவரும்கூட. அவருடைய தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ் சிங் கேட்டுகொண்டதால் கிரிக்கெட் பக்கம் வந்தவர்.

# ஒரு நாள் கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் ஜெர்சி எண் 12. அந்த எண் அவருக்கு எப்படி வந்தது? 1981-ல் சண்டிகர் செக்டர் 12 மருத்துவமனையில் டிசம்பர் (12-ம் மாதம்) 12-ம் தேதி மதியம் 12 மணிக்குப் பிறந்தவர் யுவராஜ். அந்த ராசியால் ஜெர்சி எண் 12 ஆனது.

 

# டி20 கிரிக்கெட்டின்  ‘சூப்பர்மேன்’ என்றழைக்கப்படும் யுவராஜ், டி20 போட்டியில் நீளமான சிக்ஸரை விளாசியவர் என்ற பெயர் எடுத்தவர். 119 மீட்டர் தொலைவுக்கு அந்த சிக்ஸரை விளாசினார்.

2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசியதில் இந்த நீளமான சிக்ஸரும் அடங்கும்.

# 2008-ல் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட்டில் 387 ரன்னை இந்தியா துரத்தியபோது யுவராஜ் சிங் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது இந்தியாவின் வெற்றிக்கு உதவியது. இந்தியாவின் துரத்தலில் 5-வது விக்கெட்டுக்கு அமைந்த மிகப் பெரிய பார்ட்னர்ஷிப் இதுதான்.

# உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் 50 ரன்களையும் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஒரே வீரர் யுவராஜ்தான். 2011-ல் பெங்களூருவில் அயர்லாந்துக்கு எதிராக இதைச் சாதித்தார்.

# 2011 உலகக் கோப்பையை  வெல்லக் காரணமான நாயகன் யுவராஜ். ஆரம்ப கட்ட புற்றுநோயும் ரத்த வாத்தியும் இருந்தபோதும்கூட உலகக் கோப்பையை வென்ற பிறகே சிகிச்சைக்குச் சென்றார்.

# சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு புகழ்பெற்ற இங்கிலாந்தின் யார்க்‌ஷையர் கவுண்டி அணிக்கு ஒப்பந்தமான ஒரே வீரர் யுவராஜ் சிங். சில வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே கிடைத்த பெருமையில் யுவராஜும் அடக்கம்.

# இந்தியாவில் யுவராஜ் சிங்குக்கு ஏராளமான விசிறிகள் இருக்கிறார்கள். ஆனால், யுவராஜ் சிங் சச்சின் டெண்டுல்கரின் மிகப் பெரிய விசிறி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x