Published : 02 Apr 2019 10:58 AM
Last Updated : 02 Apr 2019 10:58 AM
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இன்று பஞ்சமில்லை. கருவாக இருக்கும் யோசனைகள் செயல்வடிவம் பெறுவதற்கு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள்தாம் கைகொடுக்கின்றன. அந்த வகையில் ஒரு புதுமையான நிறுவனம் தொடர்பான பணிகளை ஒருங்கிணைத்திருக்கிறார்கள் தமிழகத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள். ஆலோசனை மையத்தையே ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமாகத் தொடங்கியிருக்கும் அவர்கள் லோகநாதன், சபரிஷ். இருவரும் ‘ஸ்டிரைட்ஸ் பார்ட்னர்ஸ்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி ஓரிடத்தில் இருந்தபடியே வெவ்வேறு நாடுகளிலும் பணிகளைச் செய்துவருகிறார்கள்.
பொதுவாக, சார்டட் அக்கவுன்டன்ட் என்று சொன்னாலே ஆடிட்டிங் பணியைச் செய்பவர்கள் என்றுதான் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு நிறுவனத்தைப் புதிதாகத் தொடங்குவது முதல், அதைப் பதிவு செய்து சட்டபூர்வமாக அனுமதி பெறுவதுவரை அனைத்துமே இந்தப் பணியில் அடக்கம். ஒரு நாட்டில் இருந்துகொண்டு அந்த நாட்டுச் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு இந்தப் பணிகளை எந்த ஆடிட்டரும் செய்துவிட முடியும். ஆனால், ஒரு நாட்டைச் சேர்ந்தவர் இன்னொரு நாட்டில் எப்படி நிறுவன அமைப்பு மற்றும் நிதி நிலை அறிக்கை தொடர்பான பணிகளை மேற்கொள்ள முடியும்?
“பொதுவாக இந்தியாவில் ஆடிட்டிங் பணிகள் வேறு. சிங்கப்பூரில் வேறு. நிறுவனத் தொடக்கம் முதல் அனைத்துவிதமான ஆண்டு நிதிநிலை அறிக்கை, நிறுவன அறிக்கை தாக்கல் போன்றவற்றை இந்தியாவிலிருந்தபடியே மேற்கொள்ள முடியும். இதற்கு எங்களுடைய செயற்கை நுண்ணறிவுதளம் உதவியாக இருக்கிறது. நிறுவனங்கள் சார்பில் கொடுக்கப்படும் எல்லாத் தகவல்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் ஒரு மணி நேரத்தில் எல்லாப் பணிகளையும் செய்துவிட முடியும்” என்கிறார் இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் சபரீஷ்.
மிகச் சுலபமான நடைமுறைகளால் தற்போது சிங்கப்பூர் சார்ந்த பணிகளை மட்டும் இவர்கள் மேற்கொண்டுவருகிறார்கள். படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் இதை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்திய ஆடிட்டிங் லைசென்ஸ் தவிர சிங்கப்பூரில் கம்பெனி விவகாரங்கள், வருமான வரி ஆலோசனை லைசென்ஸ் உள்ளதால் இரு நாட்டு சட்டமுறைகளுக்கு உட்பட்டு ஆலோசனை அளிக்க முடிகிறது என்கிறார் இந்நிறுவனத்தின் தலைவர் லோகநாதன்.
“எந்தவிதமான சந்தேகம் எழுந்தாலும் அதற்குத் தீர்வு அளிக்கும் வகையில் கேள்விகளைத் தொகுத்து இணையதளத்தில் ‘சாட்போட்’ என்ற பிரிவில் பதிவேற்றியிருக்கிறோம். இந்த இணையதளம் இளைய தலைமுறை ஆடிட்டர்களுக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும். அவர்களுடன் கைகோத்து ஈடுபடும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறோம்.
ஓர் ஆலோசனை மையத்தையே தானியங்கி மையமாக நடத்திவருகிறோம். எதிர்காலத்தில் ஆடிட்டிங் பணி இப்படித்தான் மாறப்போகிறது. இந்த யோசனையின் அடிப்படையில்தான் இந்த கான்செப்டில் நிறுவனத்தைத் தொடங்கினோம்” என்கிறார் லோகநாதன்.
மேலும் தொடர்புக்கு: https://gstraits.com/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT