Last Updated : 16 Apr, 2019 09:08 AM

 

Published : 16 Apr 2019 09:08 AM
Last Updated : 16 Apr 2019 09:08 AM

வலை 3.0: தவமாய்க் கிடைத்த இணையம்!

இணையத்தில் நுழைவதும் இணைய சேவைகளில் நுழைவதும் இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. இணைய சேவைகளைப் பெறுவதிலும் வேகத்தை எதிர்பார்க்கிறோம். ஆனால், ஆரம்ப கால இணையம் அப்படி வேகமாக இருந்ததில்லை. இணைப்பு கிடைப்பதற்கும் தகவல்களைப் பெறுவதற்கும் தவம் கிடக்க வேண்டிய நிலைகூட இருந்திருக்கிறது.

இந்தத் தாமதத்தையும் காத்திருப்பையும் யாரும் பொருட்படுத்தியதில்லை. ஏனென்றால், இணையம் எனும் வலைப்பின்னலை அணுகுவதே அன்று பெரிய விஷயம். முதன்முதலில் இணையத்தில் நுழையும் வாய்ப்பு 1969-ல் உலகுக்குக் கிடைத்தது. அந்த ஆண்டுதான் இணையத்தின் ஆரம்ப வடிவான ‘அர்பாநெட்’ அமைக்கப்பட்டது.

இணையம் உருவாக்கப்படுவதற்கான கருத்தாக்கங்களும் ஆரம்ப கட்ட ஆய்வுகளும் பல்வேறு புள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு ஒன்றோடொன்று இணையத் தொடங்கிய நிலையில், அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் அர்பா பிரிவு, வெவ்வேறு பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்களுடன் இணைந்து ஆய்வு, தகவல் பரிமாற்றத்துக்கான வலைப்பின்னலை உருவாக்கியது. இந்த வலைப்பின்னலே ‘அர்பாநெட்’ என அழைக்கப்பட்டது.

அர்பாநெட்தான் பின்னர் இணையமாக உருவானது. ஆனாலும், இந்தக் காலகட்டத்தில் இணையத்தைக் குறிக்கும் ‘இண்டெர்நெட்’ எனும் வார்த்தைகூட உருவாக்கப்பட்டிருக்கவில்லை. பரவலாக அறியப்பட்டதுபோல, அணு ஆயுத தாக்குதல் நிகழ்ந்தாலும் நிலைகுலைந்துவிடாமல் தாக்குப் பிடித்து செயல்படக்கூடிய தகவல் தொடர்பு வலைப்பின்னலாகவே ‘அர்பாநெட்’ உருவாக்கப்பட்டது.

ராணுவப் பயன்பாட்டுக்கான ஆய்வு நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஆனாலும், இணையத்தின் வளர்ச்சியும் அதற்கு உதவிய கண்டுபிடிப்புகளும் தனியார்ப் பங்களிப்பு, கல்வித்துறை சார்ந்த ஆய்வாளர்களின் ஈடுபாடு சுயேச்சையான பங்களிப்பாளர்களின் கூட்டு முயற்சியாலேயே நிகழ்ந்தன. இணையத்தின் தனித்தன்மைக்கும் இதுவே மூலகாரணம்.

நான்கு பங்கேற்பு முனைகள் கொண்டதாக அர்பாநெட் உருவானது. கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் (யு.சி.எல்.ஏ), கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (எஸ்.ஆர்.ஐ), யுசிசாண்டா பார்பரா, உட்டா பல்கலைக்கழகம் ஆகிய நான்கு கணினி வலைப்பின்னல் முனைகள் இணைந்திருந்தன. புவியியல்

ரீதியாக வெகு தொலைவில் இந்த முனைகள் அமைந்திருந்த நிலையில், 1969 அக்டோபர் மாதம், கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர் சார்லி கிளைன் என்பவர் இந்த வலைப்பின்னல் வழியிலான முதல் செய்தியை அனுப்பினார்.

300 கி.மீ. தொலைவிலிருந்த ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்த கணினியை அணுக மாணவர் கிளைன் தனது கணினியிலிருந்து லாகின் எனும் ஆங்கில வார்த்தையை டைப் செய்தார்.

இந்த வார்த்தைக்கான முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்களை டைப் செய்த உடனே, சிஸ்டம் கிராஷாகி அந்த முயற்சி தடைப்பட்டது. பின்னர் இரண்டாம் முறை லாகின் வெற்றிகரமாக நிறைவேறியது.

(வலை வீசுவோம்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: enarasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x