Last Updated : 19 Feb, 2019 10:36 AM

 

Published : 19 Feb 2019 10:36 AM
Last Updated : 19 Feb 2019 10:36 AM

விக்கிபீடியாவுக்கு உதவத் தயாரா?

‘விக்கிபீடியா’ 18-வது ஆண்டில் அடி எடுத்துவைத்திருக்கிறது. விக்கிபீடியா தன்னார்வலர் களின் பங்களிப்பால் உருவாகி வளர்ந்திருக்கும் தளம் என்பதால், இதில் நீங்களும் பங்கேற்கலாம். விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுதுவது, ஏற்கெனவே உள்ள கட்டுரைகளில் திருத்தம் செய்வது உள்ளிட்ட பங்களிப்பு தவிர, உங்களால் இயன்ற ஒளிப்படங்களையும் விக்கிபீடியாவில்  பதிவேற்றி உதவலாம். இதற்கான வாய்ப்பை ‘விக்கிஷூட்மீ’ கொடுத்திருக்கிறது.

விக்கிபீடியா தளத்தை நிர்வகிக்கும் தாய் அமைப்பான விக்கிமீடியா அறக்கட்டளை சார்பில் ‘விக்கிஷூட்மீ’ தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தின் நோக்கம், விக்கிபீடியா வசம், ஒளிப்படங்கள் குறைவாக அல்லது இல்லாமல் உள்ள இடங்களைச் சுட்டிக்காட்டி, அந்தக் குறையைப் போக்கும் வகையில் ஒளிப்படங்களைப் பதிவேற்றுவது. நீங்களும் இதில் பங்கேற்கலாம்.

‘விக்கிஷூட்மீ’ இணையதளத்தில் நுழைந்தால், அதில் உலக வரைபடம் தோன்றுவதைப் பார்க்கலாம். இதில் உங்கள் இருப்பிடத்தைக் கண்டறிய அனுமதி கேட்கும். இதற்கு அனுமதி கொடுத்தவுடன் நீங்கள் வசிக்கும் பகுதியைச் சுற்றியுள்ள இடங்கள் வரைபடத்தில் முதன்மையாகத் தோன்றும்.

அந்தப் படத்தில் உள்ள இடங்களின் மீது பச்சை, சிவப்பு உள்ளிட்ட நிறங்களில் வட்டங்கள் தோன்றுவதைப் பார்க்கலாம். குறிப்பிட்ட அந்த இடம் தொடர்பாக விக்கிபீடியா கட்டுரைகளில் ஒளிப்படம் இருக்கிறதா, இல்லையா என்பதை இந்த வளையங்கள் உணர்த்தும். பச்சை வட்டம் எனில் படங்கள் இருப்பதாகப் பொருள். சிவப்பு வட்டம் எனில் போதிய ஒளிப்படங்கள் இல்லை எனப் பொருள். நீல, மஞ்சள் நிற வட்டங்களும் தோன்றுகின்றன. நீல நிற வட்டம், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை படங்களைக் குறிக்கிறது. மஞ்சள் வட்டம் விக்கிபீடியா கட்டுரை மொழியை குறிக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியது சிவப்பு வட்டங்களை ‘கிளிக்’ செய்து, அதன் விவரத்தைப் பார்த்து, உங்களால் முடியும் எனில் அந்த இடத்துக்கான ஒளிப்படத்தைப் பதிவேற்றுவதே. 

இந்தப் படத்தில் காண்பிக்கப்படாத ஒரு பகுதியைத் தோன்றச் செய்து அதற்கான விவரத்தையும் சமர்ப்பிக்கலாம். உங்கள் மொபைல் போனிலேயே படத்தை எடுத்து சமர்பிக்கலாம். வரைபடத்தை ‘மவுஸ்’ மூலம் தள்ளிக்கொண்டே வந்தால் மற்ற பகுதிகளையும் பார்க்கலாம்.

விவரங்களுக்கு: https://meta.wikimedia.org/wiki/WikiShootMe

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x