Published : 26 Feb 2019 10:33 AM
Last Updated : 26 Feb 2019 10:33 AM
குழந்தைகளிடம் நாம் சொல்வதுதான். “பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே வீட்டுப்பாடங்களை எல்லாம் முடித்துவிடு. நிம்மதியாக இருக்கலாம். விளையாடலாம்”.
ஆனால், இந்த அடிப்படையை நம்மில் எத்தனை பேர் பின்பற்றுகிறோம்?
“உங்களுக்குச் செய்யப் பிடிக்காத, ஆனால், செய்தே தீரவேண்டிய வேலைகள் என்னென்ன?”. இந்தக் கேள்விக்கு ஒரு பட்டியலைப் பதிலாகக் கொடுங்கள். சிறிய விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்கள்வரை இந்தப் பட்டியலில் அடங்கட்டும். பின்னர் இந்தப் பட்டியலை நிதானமாகப் படித்துப் பாருங்கள். அவற்றை நீங்கள் தள்ளிப் போடுவதன் காரணம் பெரும்பாலும் ஒன்றாகத்தான் இருக்கும்.
“அவற்றைச் செய்ய உங்களுக்குப் பிடிக்கவில்லை”. ஆக, இயலாமை என்பதைவிட உங்கள் மனநிலை காரணமாகத்தான் அவற்றை நீங்கள் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்.
ஆனால், இப்படித் தள்ளிப் போட்டுக்கொண்டிருக்கும் வேலை உங்களுக்குத் தொடர்ந்து ஒரு நெருடலை அளித்துக்கொண்டே இருக்கும். அதாவது, தொடர்ந்து ஒரு பாறையைக் கட்டி இழுத்துக்கொண்டே இருப்பதைப் போல உணர்வீர்கள். இதுபோன்ற பாறைகளை உடைக்க ஒரு வழிதான் இருக்கிறது.
தினமும் காலையில் எழுந்ததும் அன்று செய்ய வேண்டிய பணிகளை மனதுக்குள் பட்டியலிடுங்கள். அவற்றில் எதைச் செய்ய உங்களுக்குப் பிடிக்கவில்லையோ அதை முதலில் செய்துவிடுங்கள், அதன் பிறகு பொழுது இன்பமாகக் கழியும்.
அந்தப் பணியைச் செய்வதற்கு உங்களுக்கு நீங்களே சிறுசிறு வெகுமதி அளித்துக் கொள்ளலாம். ‘அந்த வேலையைச் செய்தவுடன் எனக்குப் பிடித்த இசையைக் கேட்பேன்’, ‘அந்த வேலையைச் செய்து முடித்தவுடன் எனக்குப் பிடித்த நண்பருடன் தொலைபேசியில் பேசுவேன்’ என்பதுபோல இந்த வெகுமதிகள் இருக்கலாம்.
“எனக்குப் பிடிக்காத வேலைகளைச் செய்யாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தால் விளைவுகள் என்னவாக இருக்கும்?” என்பதை யோசியுங்கள். நான் கூறும் நியாயத்தை உணர்வீர்கள். சிறிய தீப்பொறியை அந்தக் கட்டத்திலேயே அணைத்துவிடுவது நல்லது. காட்டுத் தீயாக வளரவிடாதீர்கள்.
(நிறைவடைந்தது)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT