Published : 01 Jan 2019 11:24 AM
Last Updated : 01 Jan 2019 11:24 AM
பிரிட்டிஷார் நம் நாட்டை ஆண்ட காலகட்டத்தில் நடைபெற்றதாக ‘லகான்' என்ற இந்தித் திரைப்படக் கதை அமைக்கப்பட்டிருந்தது. ராஜஸ்தானிலுள்ள ஒரு கிராமத்தில் தண்ணீர் மட்டம் மிகவும் கீழே போய்விட, தங்கள் கிராமத்துக்கான தண்ணீர் வரியை ரத்து செய்யச் சொல்லி கெஞ்சுகிறார்கள் கிராமத்து மக்கள். பிரிட்டிஷ் துரையோ கிண்டலுடன், “சில மாதங்கள் கழித்து எங்கள் கிரிக்கெட் அணியுடன் உங்கள் கிராமத்திலுள்ளவர்கள் கிரிக்கெட் விளையாடுங்கள். நீங்கள் ஜெயித்தால் வரியை ரத்து செய்கிறோம்” என்கிறார்.
வேறு வழியில்லாமல் கிராம மக்களில் 11 பேர் கிரிக்கெட் பயிற்சி எடுத்துக்கொள்ளத் தொடங்குகிறார்கள். அதன் ஒரு பகுதியாகச் சிலர் கோழி பிடிப்பதில் அதிக அளவு ஈடுபடுவதைத் திரையில் காட்டுவார்கள். இந்தப் பயிற்சியின் காரணமாகப் பந்தை ‘கேட்ச்’ செய்வது எளிதாக இருக்கும் என்பதைப் புரியவைக்கிறார்கள். தெரிந்த ஒன்றை அடிப்படையாகக் கொண்டு தெரியாத ஒன்றை அறியவைப்பது புத்திசாலித்தனம்.
ஆப்கானிஸ்தான் குறித்து இதே நாளிதழில் சர்வதேசம் பக்கத்தில் தொடர்ந்து எழுதியபோது ஒருவர், “உங்கள் முன்னுரையைப் படித்ததால்தான் இந்தத் தொடரைப் படித்தேன். மற்றபடி உலகநாடுகள் பற்றி அறிவதில் எனக்கு அவ்வளவாக ஆர்வமும் இல்லை, அறிவும் இல்லை” என்றார்.
அதாவது, மகாபாரத சகுனியின் காந்தார தேசம் தற்போதைய ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதி என்றும், பாகிஸ்தானுடன் நம் ராணுவம் கடும் போரிட்டு வென்ற கந்தஹார் ஆப்கானிஸ்தானில் உள்ளது என்றும் நான் தொடக்கத்தில் எழுதியதுதான் அவருக்கு சுவாரசியத்தைத் தந்திருக்கிறது. அதாவது, தெரிந்த ஒன்றின் மூலம் தெரியாததை அறிய வைக்கும் முயற்சி.
ஓலா அல்லது ஊபரில் சென்டிரல் ஸ்டேஷன் என்று போட்டால் கண்ணப்பர் திடல் பெரியமேட் என்ற ஒரு முகவரியும் ஜெட்காபுரம் பெரியமேட் என்று ஒரு முகவரியும், NGO இணைப்பு, பார்க் டவுன் என்ற முகவரியும் வரும். ரயில்வே நிலையத்துக்குப் போக நினைக்கும் பலருக்கும் இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் ஏற்படுவது வழக்கம். சென்டிரல் ரயில்வே நிலையம் - வால்டாக்ஸ் சாலை நுழைவு என்றும் சென்ட்ரல் ரயில்வே நிலையம் - மூர்மார்க்கெட் பகுதி நுழைவு என்றும் காணப்பட்டால் தேர்ந்தெடுப்பது எளிதாக இருக்கும்.
தெரிந்த ஒருவர் கூறினார், “அண்ணா நூற்றாண்டு நூலகம்” என்று டிக்கெட் கேட்டபோது நடத்துநர் விழிக்க, “கோட்டூர் லைப்ரரி” என்று கூறியபோதுதான் புரிந்துகொண்டாராம்.
தேர்ந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுப்பது மேற்கூறிய பாதையைத்தான். ஏற்கெனவே தெரிந்தவற்றின் மூலம் தெரியாததைப் பதிய வைக்கும் முயற்சி.
(மாற்றம் வரும்) | ஓவியம்: பாலசுப்பிரமணியன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT