Published : 27 Nov 2018 10:14 AM
Last Updated : 27 Nov 2018 10:14 AM
சில வருடங்களுக்கு முன் நண்பர் குடும்பத்துடன் நானும் ஒரு திரையரங்குக்குச் சென்றிருந்தேன். பின்புற வரிசை ஒன்றில் உட்கார்ந்திருந்தோம். அப்போது பல வரிசைகளுக்கு முன்புறமிருந்த ஒரு பெண் என் நண்பரின் மனைவியைப் பார்த்துக் கையசைப்பது தெரிந்தது.
அந்தப் பெண் எனக்கும் ஏற்கெனவே அறிமுகமானவர்தான். மேலே குறிப்பிட்ட நண்பரின் வீட்டில் வேலை செய்பவர். குறைந்த கட்டண இருக்கையில் அவள் தன் குடும்பத்தோடு உட்கார்ந்திருந்தாள்.
பதிலுக்கு நண்பரின் மனைவியும் கையசைத்தார். அவர் முகத்தில் ஏதாவது சங்கடம் புலப்படுகிறதோ என்று பார்த்தேன். அப்படி எதுவும் தென்படவில்லை என்பதோடு அவர் அடுத்ததாகச் செய்தது மேலும் வியப்பை அளித்தது.
திரைப்படம் தொடங்க இன்னும் பத்து நிமிடங்கள் உள்ளன எனும் நிலையில் “ஒரு நிமிஷம்”’ என்று என் நண்பரிடம் கூறிவிட்டுத் தன் இருக்கையிலிருந்து எழுந்தார் அந்தப் பெண்மணி. முன்புறம் நடந்தார். அந்தப் பணிப் பெண்ணுடன் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டுத் திரும்பினார்.
திரும்பி வந்தவுடன் நண்பர் தன் முகக் குறிப்பால் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதைப் புரிந்துகொண்ட அவர் மனைவி, ‘’இதிலே நம்ம கவுரவம் எதுவும் குறைந்து போகாது. நானே போய்ப் பேசியதில் பானுமதிக்கு (அதுதான் அந்தப் பணிப் பெண்ணின் பெயர்) மிகவும் பெருமை. அது அவள் முகத்திலேயே தெரிந்தது. அதுவும் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் இருக்கும்போது நான் போய்ப் பேசியதில் மேலும் மகிழ்ச்சி’’ என்றாள்.
எது எப்படியோ பானுமதி அவர்கள் வீட்டில் இன்னமும்கூட உற்சாகத்துடன் பணிபுரிகிறார்.
பிறரைப் பாராட்டுவது என்பதே அரிதாகிவிட்ட இந்த நாளில் மறந்துபோன அந்த விஷயத்தை மீண்டும் மனத்தில் கொள்வோம். வெற்றி பெற்றவரிடம் ‘congrats’ என்று இயந்திரத்தனமாக ஒரு வார்த்தை கூறுவது பாராட்டு அல்ல.
பாராட்டுவதில் நாம் வேறு சிலவற்றையும் நினைவில் கொள்ள வேண்டும். அந்தப் பாராட்டு நிஜமானதாகவே இருக்க வேண்டும். அதே நேரம் அந்தப் பாராட்டு கொஞ்சம் அதிகப்படியாக இருக்கலாம், தவறில்லை.
முக்கியமாக அக்கறையையும் பாராட்டையும் ஒருவருக்குத் தெரிவிக்கும்போது பிறர் நடுவே அதைச் செய்தால், அது அதிகப் பலனை அளிக்கும். என் நண்பரின் மனைவி அந்த விஷயத்தில் மிகக் சரியாகவே செயல்பட்டிருக்கிறார்.
- அருண் சரண்யா
(மாற்றம் வரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT