Published : 02 Nov 2018 11:26 AM
Last Updated : 02 Nov 2018 11:26 AM
மேளதாளம் முழங்க, ஊர் மக்கள் கூடிப் பாடி ஆட, இளம் பெண் ஒருவரை மூங்கில் பல்லக்கில் தூக்கிவர சில தினங்களுக்கு முன்பு மிசோரம் மாநிலத்தின் கொலாசிப் மாவட்டம் திருவிழா கோலம்பூண்டது. தலைநகர் ஐஸ்வாலில் இருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொலாசிப் மாவட்டம்.
இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் லல்ரெம்ஸியாமி. பதினெட்டு வயதாகும் இவர், ஹாக்கி விளையாட்டு வீராங்கனை. அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலும் தலா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் இவர்.
அவருடைய வெற்றியைக் கொண்டாடும் விதமாக மிசோரம் மாநிலத்தின் பாரம்பரிய முறைப்படி அவரை மூங்கில் பல்லக்கில் உட்கார வைத்துத் தூக்கிச் சென்று ஆடிப்பாடித் திளைத்தனர் அவ்வூர் மக்கள்.
தமிழகத்தில் முதல் மரியாதை செலுத்தப் பரிவட்டம் கட்டுவதுபோல மிசோரமைப் பொறுத்தவரை தங்களுடைய ஊருக்குப் பேரும் புகழும் தேடித் தருபவர்களுக்கு அளிக்கப்படும் உயரிய கவுரவம் பல்லக்கு பவனி. இதற்கு முன்னதாக 2014-ல் அம்மாநில அளவிலான பாட்டுப் போட்டி ஒன்றில் கிரேஸ் என்ற பெண் வெற்றி வாகைச் சூடியபோது இதே மரியாதை அவருக்கும் வழங்கப்பட்டது.
அப்படி என்ன ஹாக்கிப் போட்டியில் இந்தப் பெண் சாதித்துவிட்டார்? மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றிருப்பது இதுவே முதல் முறை.
‘ஹாட்ரிக்’ நாயகி
சக விளையாட்டு வீராங்கனைகளால் ‘சியாமி’ என்றழைக்கப்படும் லல்ரெம்ஸியாமி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 11 வயதில் மிசோரம் மாநிலத்தின் ஹாக்கி அகாடமியில் இணைந்து பயிற்சி பெறத் தொடங்கினார். டெல்லியில் உள்ள தேசிய ஹாக்கி அகாடமியில் 2016-ல் சேர்ந்தார். ஆரம்பத்தில் இந்தி மொழி தெரியாத காரணத்தால் சில புறக்கணிப்புகளைச் சந்தித்தார். பின்னர் விடாமுயற்சியால் ஹாக்கி பயிற்சியிலும் இந்தியிலும் ஒரு சேரப் புகுந்துவிளையாடினார்.
2016-ல் நடைபெற்ற ஆசியக் கோப்பையிலும் ஆசிய இளையோர் ஒலிம்பிக் விளையாட்டிலும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் பங்கேற்றார். 2016 ஆசிய இளையோர் ஒலிம்பிக் விளையாட்டில் ஐந்து சுற்றுகளில் 7 கோல்கள் அடித்துக் கவனம் பெற்றார். அடுத்த கட்டத்துக்கு முன்னேறி 2017-ல் ஜப்பானில் நடைபெற்ற பெண்கள் ஹாக்கி ஆசியக் கோப்பையில் வயது வந்தோருக்கான பிரிவிலும் பங்கேற்றுத் தங்கப் பதக்கம் வென்று ஜொலித்தார். இதையடுத்து 2018 ஆசியக் கோப்பைப் போட்டியில் பங்கேற்று ஐந்து மேட்ச்களில் இரண்டு கோல்கள் அடித்தார். இறுதிச் சுற்றில் அபாரமாக விளையாடி இந்தியா வெள்ளிப் பதக்கம் வெல்லப் பெரும்பங்காற்றினார். இதற்காக ‘யூ-21 உதயமாகும் நட்சத்திர விருது’ பெற்றார்.
இது மட்டுமல்ல, 2018 பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பையிலும் அட்டகாசமாக விளையாடினார். அண்மையில் இந்தோனேசியாவின் ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 கோல்கள் அடித்தார். அவற்றில் ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்து, இந்தியாவுக்கு மீண்டும் வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்து கவனம் ஈர்த்தார்.
அண்மையில் அர்ஜெண்டினாவில் நடைபெற்ற 2018 இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலும் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்து வெள்ளித் தாரகையாகப் பல்லக்கில் பவனி வந்தார்.
இது அதிர்ஷ்டத்தால் கிடைத்த பல்லக்கு அல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT