Published : 03 Aug 2018 10:50 AM
Last Updated : 03 Aug 2018 10:50 AM
கராத்தே, குங்பூ, ஜூடோ மாதிரியான தற்காப்புக் கலைகள் நமக்குத் தெரியுமோ இல்லையோ. இந்த அடிதடி விளையாட்டுகளின் பெயர்கள் நமக்கு அத்துப்படி! ஆனால், ‘டேக்வாண்டோ’ என்ற தற்காப்புக் கலையை எத்தனை பேருக்குத் தெரியும்? இத்தனைக்கும் கராத்தே இதுவரை ஒலிம்பிக்கில் இடம்பெறவில்லை. ஆனால், டேக்வாண்டோ கடந்த 30 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் இடம்பெற்றுவருகிறது.
அப்படிப்பட்ட டேக்வாண்டோ விளையாட்டைத் தேசிய அளவில் விளையாடிப் பதக்கங்களை அள்ளி வந்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு யுவதிகள். பஞ்சாபில் ஜலந்தர் நகரில் அண்மையில் ‘5-வது மாணவர்கள் ஒலிம்பிக்ஸ் தேசிய விளையாட்டு போட்டி’கள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு சார்பில் டேக்வாண்டோவில் போட்டியிட்டு ஏழு தங்கப் பதக்கங்கள், மூன்று வெள்ளிப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள். அதெப்படி இத்தனை பதக்கங்களை வெல்ல முடியும் என்கிறீர்களா?
பதக்க வேட்டை
வயதுவாரியாகவும் உடல் எடையை அடிப்படையாகவும் கொண்டு வெவ்வேறு பிரிவுகளில் டேக்வாண்டோ நடத்தப்படுகிறது. டேக்வாண்டோ மட்டுமல்ல; குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜூடோ, சதுரங்கம், கேரம், யோகா, கராத்தே ஆகிய போட்டிகள் அனைத்தும் வயது மற்றும் உடல் எடையைத் தகுதிகளாக வைத்துத்தான் நடத்தப்படுகின்றன. இப்படியாக நடத்தப்பட்ட இந்த விளையாட்டுப் போட்டியில் 100 தங்கம், 100 வெள்ளி, 100 வெண்கலப் பதக்கங்கள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன.
கே.ஜி. முதல் பி.ஜி.வரை படிக்கும் மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர். பத்து விதமான போட்டிகளில், 1,500-க்கும் மேற்பட்டோரும் டேக்வாண்டோவில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றனர். அதில் தஞ்சை மாணவிகளான குரலரசி, ஷண்முகப்பிரியா, உதயமதி, துர்கா, சீதா லட்சுமி, அகிலா, மஞ்சு, ஆகியோர் தங்கமும் தனலட்சுமி, சங்கவி, அகல்யா ஆகியோர் வெள்ளியும் ஐஸ்வர்யா வெண்கலப் பதக்கமும் வென்றிருக்கிறார்கள். இவர்களில் தங்கம் வென்று முதலிடத்தைப் பிடித்தவர்கள் தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் ‘மாணவர்கள் ஒலிம்பிக்ஸ் சர்வதேச விளையாட்டுப் போட்டி’யில் பங்கேற்பதற்கான பயிற்சியில் முழுமூச்சாக இறங்கிவிட்டார்கள்.
வேலை கிடைக்கும்
சிறு நகரங்களைச் சேர்ந்த இந்த மாணவிகள், கால் பலத்தைப் பிரயோகித்து ஆடப்படும் கடுமையான விளையாட்டான டேக்வாண்டோவில் தங்கத் தாரகைகளானது எப்படி?
“ஒரத்தநாடுல இருந்து கிட்டத்தட்ட 25 கிலோ மீட்டர் பஸ்ஸூல தினமும் பயணம் செஞ்சுதான் தஞ்சாவூர்ல இருக்க எங்களுடைய கல்லூரிக்கு வந்து படிச்சிட்டிருக்கேன். விளையாட்டுல ஆர்வம் இருந்தாலும் குடும்பச் சூழல் அதுக்கு இடம் கொடுக்கல. ஊக்குவிக்கவும் ஆளில்லை. நான் மட்டுமில்ல, போட்டியில் பங்கேற்ற எல்லாப் பொண்ணுங்களுமே இப்படித்தான் குக்கிராமங்கள்ல இருந்து வந்துதான் கல்லூரியிலப் படிச்சிட்டிருக்கோம்.
எங்களுடைய விளையாட்டுத் திறமைய கண்டுபிடிச்சு அது மூலமா சாதனை, வேலைவாய்ப்பு போன்ற எதிர்காலம் இருக்குன்னு எங்களுக்கும் எங்களுடைய பெற்றோருக்கும் புரிய வைச்சது பயிற்சியாளர் சுந்தரமூர்த்திதான்” என்று பேசத் தொடங்கினார் குழுத் தலைவி குரலரசி.
உளவியல் விளையாட்டு
அவரைத் தொடர்ந்த அகிலா, “எப்படியாவது வாழ்க்கையோட அடுத்த கட்டத்த எட்டிப்பிடிக்கணுங்கிற துடிப்பு இருந்தாலும், தேசிய அளவுல வட மாநிலத்தவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாட முடியுமானு சின்னதா பயம் இருந்துச்சு. ஆனா டேக்வாண்டோ விளையாட்டுல தசை பலத்தைவிட எலும்பு வலிமைதான் முக்கியம். இதைவிட முக்கியம் விளையாட்டோட சூட்சுமம். வட மாநிலத்தவங்களைவிட உருவத்தில் நம்ம ஊரு பொண்ணுங்க சிறுசா தெரிஞ்சாலும் அதுவே நம்முடைய பலம்.
இந்த விளையாட்டுல காலைத் தூக்கித் தலையில தட்டுனாலும் முகத்துல தட்டுனாலும் 3 புள்ளிகள். அதே சுழற்றியடித்தால் 5 புள்ளிகள். நெஞ்சில நேரடியாகத் தட்டினால் 1 புள்ளி, சுழற்றித் தட்டினால் 4 புள்ளி. இதுல விவகாரம் அவங்களோட உடலோடு இல்லாம உளவியலோட விளையாடுறதுலதான் இருக்கு. நம்மளோட உயரத்துக்கு அவங்க தலையில தட்டுறது கஷ்டம்.
ஆனால், கன்னத்துல தட்டுனா புள்ளியும் கிடைக்கும் சட்டுனு அவங் களைச் சுலபமா தடுமாறவும் செய்ய முடியும். இப்படித்தான் வெற்றியை வசப்படுத்தினோம்” என்கிறார்.
பளபளக்கும் பதக்கங்களுடன் உற்சாகமாக நின்றாலும் தங்களுடைய பொருளாதாரப் பின்னடைவுகளைத் தாண்டி சர்வதேச அளவில் நடைபெறவிருக்கும் அடுத்த கட்டப் போட்டிக்கான பயணச் செலவு முதல் அனைத்தையும் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்கிற கவலை ரேகையும் இவர்களுடைய முகத்தில் இழையோடவே செய்கிறது.
ஆனால், எதுவாக இருந்தாலும் ‘‘நாங்க சமாளிப்போம்’” என்று கோரஸாகச் சொல்கிறார்கள் தங்களுடைய குறையையும் நிறையாக மாற்றும் பெண் ரூபத்திலான இந்த ‘செங்கிஸ் கான்’கள்.
படங்கள்: எல். சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT