Last Updated : 02 Apr, 2025 07:53 PM

 

Published : 02 Apr 2025 07:53 PM
Last Updated : 02 Apr 2025 07:53 PM

புவிசார் குறியீடு பெற்ற தோவாளை மாணிக்க மாலைக்கு கூடும் மவுசு - பின்புலம் என்ன? 

நாகர்கோவில்: புவிசார் குறியீடு பெற்ற தோவாளை மாணிக்க மாலை 130 ஆண்டுகளுக்கு மேலாக திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி உற்சவரை அலங்கரித்து வரும் பெருமையை பெற்றுள்ளது. இதேபோல் முக்கிய கோயில் விழாக்களிலும், உலக தலைவர்களை வரவேற்பதிலும் மாணிக்க மாலைக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் நாளுக்கு நாள் இதன் மவுசு அதிகரித்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தயாராகும் கோயில் நகைகள், கிராம்பு, மார்த்தாண்டம் தேன், மட்டி வாழை போன்றவை புவிசார் குறியீடு பெற்றவை. தற்போது இங்குள்ள தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மலர் மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது இதுவே முதல்முறையாகும். திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்தே தோவாளையில் குடிசை தொழிலாக தொடுக்கப்படும் மாணிக்க மாலைகள்தான் அரசவை நிகழ்ச்சிகளிலும், இறைவன் சன்னதியில் முக்கிய விழாக்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

அதிக நேர வேலைப்பாடுகள் கொண்ட இந்த மாணிக்க மாலையை பெரிய விழாக்களில் உலக தலைவர்களை வரவேற்பதில் இருந்து திருமண வீடுகளில் மணமக்களுக்கும் பல்வேறு கலைநயத்துடன் அணிவிக்கப்பட்டு வருகின்றன. தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால், முக்கிய விழாக்களின் அங்கமாக மாணிக்க மாலை இடம்பெறும் என தோவாளை மாலை கட்டும் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இது தொடர்பாக 5 தலைமுறையாக மாணிக்க மாலை தயார் செய்து வரும் தோவாளை முத்தும்பெருமாளை சந்தித்தோம்.

தனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் மாணிக்க மாலையை தயார் செய்து கொண்டிருந்த அவர் கூறுகையில், ''மாணிக்கமாலை மன்னர்கால சிறப்பு விழாக்கள், ஓணம் பண்டிகை, மற்றும் கேரளாவில் உள்ள பாரம்பரிய கோயில்களுக்கு எங்கள் வீட்டில் ஆர்டர் செய்து தான் வாங்கி செல்வார்கள். மாணிக்க மாலை தொழிலை நம்பி தான் எங்கள் குடும்பம் உள்ளது. பெரிய வருமானத்தை எதிர்பார்க்காமல், தினசரி ஒரு தொழில் நடக்கும் வகையில் இதை செய்து வருகிறோம். எனது தந்தை மாடசாமி பண்டாரம் மாணிக்கமாலையை சிறப்ப செய்ததற்காக வெங்கட்ராமன் குடியரசு தலைவராக இருந்தபோது அவரிடம் இருந்து ஜனாதிபதி விருது பெற்றுள்ளார்.

தோவாளை தட்பவெப்பத்திற்கு கிடைக்கும் வெள்ளை, சிவப்பு அரளியுடன், பச்சை நிறத்திற்காக நொச்சி இலைகளை கொண்டு பகளம் எனப்படும் அடுக்குகளுடன் இந்த மாணிக்க மாலையை கட்டுகிறோம். இவற்றை கட்டுவதற்கு குளத்தில் வளரும் சம்பை நார், மற்றும் வாழை நார்களை பயன்படுத்துகிறோம். நாட்களுக்கு மேல் மாணிக்க மாலை வாடாமல் இருப்பதால் வெளிநாடுகளில் உள்ள விழாக்களுக்கும் வியாபாரிகள் ஆர்டர் செய்து அனுப்ப வருகின்றனர்.

தோவாளையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த மாணிக்க மாலை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளோம். ஒரு சராசரி மாணிக்க மாலை செய்ய 4 மணி நேரத்திற்கு மேல் ஆகும். குறைந்தது 2000 ரூபாயில் இருந்து 10000 ரூபாய்க்கு மேல் இவை விற்பனை ஆகிறது. அதேநேரம் இதற்கான தயாரிப்பு காலம் அதிகம். இந்தியாவில் பிற பகுதிகளில் இந்த மாலைகள் கிடைப்பதில்லை. அவ்வாறு இருந்தாலும் தோவாளையில் இருந்து சென்ற இந்த மாலை கட்டும் தொழிலை செய்தவர்களே அதில் ஈடுபட்டு வருகின்றனர்'' என்றார்.

மாணிக்க மாலை கட்டும் வனிதாஸ்ரீ கூறுகையில், ''திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் உற்சவ பெருமாளுக்கு கடந்த 130 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் தயார் செய்து கொடுக்கும் மாணிக்க மாலையே அணிவிக்கப்படுகிறது. பெருமாளின் அலங்காரத்திற்கு தனித்துவமாக இருப்பதால் விழா காலத்திற்கும் ஏற்றவாறு முன்கூட்டியே எங்களிடம் ஆர்டர் செய்து கோயிலுக்கு வாங்குகின்றனர்.

தற்போது பத்மநாபசுவாமி கோயில் விழா துவங்கியுள்ள நிலையில் வருகிற 5 மற்றும் 8, 9, 10ந் தேதிகளில் பிரத்யேகமாக மாணிக்க மாலைகள் தாயார் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. இதைப்போல் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோயில், திருநெல்வேலி நம்மி கோயில், மற்றும் பெருமாள், சிவன் கோயில் விழாக்களுக்கு திருமேனிகள், சங்கு, சக்கரம், நந்தி திருவுருவங்களை மாணிக்க மாலையில் அலங்காரம் செய்து கொடுத்து வருகிறோம்.

சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வந்தபோது அலங்காரப் பொருட்கள் வரிசையில் மாணிக்க மாலையை வைத்திருந்தேன். இதை நமது பிரதமர் மோடியும், சீன அதிபரும் வெகுவாக பாராட்டினர். இதைப்போல் இந்தியா வரும் உலக தலைவர்களை தற்போது மாணிக்க மாலை போட்டு வரவேற்பது ஆடம்பரமான வரவேற்பாக உள்ளது. மாணிக்கமாலையை உயர்கல்வி பாடத்திட்டத்தில் சேர்த்து, கைவினை தொழில் பிரிவையும் ஏற்படுத்த வேண்டும். மாணிக்கமாலை செய்யும் தொழிலாளர்களை அரசு கடனுதவிகள் மற்றும் சலுகைகள் தந்து ஊக்குவிக்க வேண்டும்'' என்றார்.

தோவாளையை சேர்ந்த தாணு கூறுகையில், ''புவிசார் குறியீடு பெற்ற மாணிக்க மாலையை உலகம் முழுவதும் விழாக்களில் பயன்படுத்தும் வகையில் அதன் உற்பத்தியையும், அதிக அளவில் மாணிக்க மாலை செய்வதையும் அரசு ஊக்கப்படுத்த தோவாளை மலர் வியாபாரிகள் மற்றும் மக்கள் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கஉள்ளோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x