Published : 31 Mar 2025 05:20 PM
Last Updated : 31 Mar 2025 05:20 PM

111 வயது பாம்பன் ரயில் பாலத்துக்கு பிரியாவிடை!

பாம்பன் பழைய ரயில் பாலம் மற்றும் புதிய ரயில் பாலம். (கோப்பு படம்)

ராமேசுவரம்: 15-ம் நூற்றாண்டில் ராமேசுவரத்தைச் சுற்றி கடல் இருந்தாலும் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையில் குதிரை தாண்டும் தூரத்தில் பாம்பன் கால்வாய் அமைந்திருந்தது. கி.பி.1480-ம் ஆண்டு ஏற்பட்ட மிகக் கொடிய புயல் காரணமாக அந்தக் கால்வாய் பெரியதாக ஆனது. தொடர்ந்து ஏற்பட்ட புயல்களின் காரணமாக கடல்நீர் நிலையாக ஏற்பட்டு ராமேசுவரம் தனித் தீவாக உருவானதாக தமிழக அரசால் 1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் பாலம்: “கி.பி.1639-ல் திருமலை நாயக்கரின் தளபதி இராமபையன் மற்றும் தளவாய் சேதுபதி இடையே போர் நடந்தது. அப்போது, பாம்பனில் தளவாய் சேதுபதி ஒளிந்து கொண்டார். அவரைப் பிடிக்க மண்டபம் பாம்பன் இடையே தனது படை வீரர்களைக் கொண்டு மரத்திலான பாலம் கட்டிச் சென்று தளபதி இராமபையன், தளவாய் சேதுபதியை கைது செய்துள்ளார். இவ்வாறு மண்டபம் பாம்பன் இடையே முதன்முதலாக தளபதி இராமபையனால் சிறிய அளவிலான ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட பாலம்: 19-ம் நூற்றாண்டிலேயே 2 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலும் கடலில் ரயில் பாலம் கட்ட ஆங்கிலேயர்களால் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு கைவிடப்பட்டது. கி.பி.1837-ல், குருசடைத் தீவு பகுதியிலிருந்து பாம்பனுக்கு அருகே கடலில் இங்கிலாந்து பொறியியல் நிபுணர்கள் ஒரு கால்வாய் வெட்டி சிறிய ரக கப்பல்கள் செல்ல வழி வகுத்தனர்.

பின்னர் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையே கீழே கப்பலும் மேலே ரயிலும் செல்லக்கூடிய ஒரு பாலத்தைக் கட்டுவதென்றும், இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கும் சிறு கப்பல் போக்குவரத்து நடத்தவும் கி.பி.1911-ல் ஆங்கிலேய அரசு ஒப்புதல் அளித்தது. கி.பி. 1911 ஜூன் மாதம் வேலை தொடங்கி கி.பி.1913 ஜூலை மாதம் வேலை முடிவடைந்தது.

நாற்பது அடி நீளமுள்ள 145 தூண்களைக் கொண்ட பாம்பன் பாலத்தின் மொத்த நீளம் 2.3 கி.மீ தூரம் ஆகும். இந்திய நாட்டின் நிலப்பகுதியையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் இந்தப் பாலம் மணற்கல்லுடன் கூடிய கடல் பாறையில் 6,740 அடி நீளத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

இந்த இடத்தில் தண்ணீரின் ஆழம் பாறைக்கு மேல் 6 அல்லது 7 அடிதான். கப்பல்கள் செல்ல வழி விடும் தூக்குப்பாலம் 214 அடி நீளமுள்ளது. இப்பாலம் கட்ட 4,000 டன் சிமென்ட் 1,36,000 கனசதுரஅடி களிமண் 1,800 கனசதுரஅடி மணல் 80,000 கன சதுரஅடி அளவுள்ள பெரும்பாறைகள்,2,600 டன் இரும்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

போட் மெயில்: பாம்பன் பாலத்தில் முதல் ரயில் 1914 பிப்ரவரி 24 அன்று இயக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காகவே ஆரம்ப காலங்களில் பயன்பட்ட இப்பாலம் சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை ரயிலில் பயணம் செய்து, பின்பு தனுஷ்கோடி முதல் தலைமன்னாருக்கு சிறு கப்பல் மூலம் பயணித்து, அங்கிருந்து மீண்டும் கொழும்புவுக்கு செல்லுமாறு ரயில் சேவை அமைக்கப்பட்டது.இதை போட் மெயில் சேவை என ஆங்கிலேயர் அழைத்தனர்.

புயலில் சேதமடைந்த பாலம்: 1964-ம் ஆண்டு தனுஷ்கோடியை புயல் தாக்கியபோது இப்பாலம் சேதமடைந்தது. உடனே 45 நாட்கள் பராமரிப்புக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது. 2007-ல் மதுரை முதல் ராமேசுவரம் வரை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டபோது, பாம்பன் பாலத்தின் குறுகிய தண்டவாளங்கள் நீக்கப்பட்டு அகல ரயில் பாதையாக நமது பொறியாளர்களால் மாற்றியமைக்கப்பட்டது.

பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவுற்றதை சிறப்பிக்கும் வகையில் பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா தொடக்க விழா கடந்த 28.01.2014 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இப்படி நூற்றாண்டு பாரம்பரியத்தையும், பல வரலாற்றுச் சுவடுகளையும் கொண்ட பாம்பன் ரயில் பாலத்துக்கு விடைகொடுக்கும் நேரம் வந்துவிட்டது. காலத்தின் தேவைக்கேற்ப புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனை ஏப்ரல் 6 ராமநவமி நாளன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x