Published : 20 Mar 2025 06:55 PM
Last Updated : 20 Mar 2025 06:55 PM
சென்னை: “வயதான காலத்தில் தங்களை கஷ்டப்பட வைக்காமல் மகனோ, மகளோ நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில்தான் பெற்றோர் சொத்துகளை தானப் பத்திரமாக எழுதி கொடுக்கின்றனர். ஒருவேளை அவர்களின் நிபந்ததனையற்ற இந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றால், அதற்காக அந்தப் பத்திரத்தை ரத்து செய்யக் கோரி புகார் அளிக்க அவர்களுக்கு முழு உரிமை உள்ளது” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நாகலட்சுமி (90) தனது பெயரில் உள்ள சொத்துகளை தனது மகன் கேசவன் பெயருக்கு தானப் பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். ஆனால் மகனும், மருமகளும் தன்னை முறையாக கவனிக்கவில்லை என அவர் அளித்த புகாரின் பேரில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் அந்த தானப் பத்திரத்தை ரத்து செய்து நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் கடந்த 2021-ம் ஆண்டு ஜன.25-ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கேசவன் இறந்து விட்டதால் வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை எதிர்த்து நாகலட்சுமியின் மருமகள் மாலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தானப் பத்திரத்தை ரத்து செய்ததில் எந்த தவறும் இல்லை எனக் கூறி மனுவை கடந்தாண்டு தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து மாலா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், “தற்போது 90 வயது மூதாட்டியாக உள்ள நாகலட்சுமி தனது சொத்துகளை தனது மூன்று மகள்களுக்கு எழுதி கொடுக்காமல் கடைசி காலத்தில் மகன் கவனித்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் அவரது பெயருக்கு தானப் பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். மகன் மீது வைத்த பாசம், மகனின் எதிர்காலம் கருதியே தானப் பத்திரம் எழுதி கொடுத்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மகன் இறந்த பிறகு மருமகள் தன்னை பராமரிக்காததால் தானப் பத்திரத்தை ரத்து செய்துள்ளார்.
பொதுவாக பெற்றோர் தங்களை இறுதி காலத்தில் கஷ்டப்பட வைக்காமல் நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் இதுபோல தாங்கள் சம்பாதித்த சொத்துகளை மகனுக்கோ, மகளுக்கோ இஷ்டதானமாக, தானப் பத்திரமாக எழுதி கொடுக்கின்றனர். ஒருவேளை அவர்களின் நிபந்ததனையற்ற இந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றால், அதற்காக அந்தப் பத்திரத்தை ரத்து செய்யக் கோரி புகார் அளிக்கவும் அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. இதற்காக முன்கூட்டியே அந்த பத்திரத்தில் நிபந்தனைகளை எழுத வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.
அதேபோல குழந்தைகள் மீது வைத்துள்ள அன்பு, பாசத்தையும் பத்திரம் வாயிலாக வெளிக்காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. மூத்த குடிமக்கள் கண்ணியமாக வாழ சட்டம் வழிவகை செய்துள்ளது. எனவே நாகலட்சுமி எழுதி கொடுத்த தானப் பத்திரத்தை ரத்து செய்து வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவிலும், அதை உறுதி செய்த தனி நீதிபதியின் உத்தரவிலும் எந்த தவறும் இல்லை,” எனக் கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...