Published : 19 Mar 2025 03:08 PM
Last Updated : 19 Mar 2025 03:08 PM

உணவு சுற்றுலா: ஊட்டி வர்க்கி

நீலகிரி மலைப் பகுதிக்குப் பயணம் மேற்கொள்பவர்களின் சிந்தனையில் இடம்பிடிக்கும் நொறுக்குத்தீனி ஊட்டி வர்க்கி. ஊட்டி எனும் பெயரைச் சொல்லும் போதே வர்க்கி எனும் பின்னொட்டும் சேர்ந்துகொள்ளும் அளவுக்கு, ஊட்டியும் வர்க்கியும் பின்னிப் பிணைந்துவிட்டன.

குளிருக்குச் சூடான தேநீரில் வர்க்கியை நனைத்துச் சாப்பிடுவது என்பது நீலகிரி மக்களுக்குப் பிடித்தது. உலகளவில் ஊட்டி வர்க்கிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் நொறுக்குத்தீனிகளுள் ஊட்டி வர்க்கியும் ஒன்று.

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதி முழுவதும் வர்க்கி கடைகள் அணிவகுத்திருக்கின்றன. கோத்தகிரிக்குச் சென்றபோது வர்க்கியின் தயாரிப்பு முறையைத் தெரிந்துகொள்ள, பாரம்பரிய முறையில் வர்க்கி தயாரிக்கும் இடத்துக்குச் சென்றோம்.

இங்கிலிஷ் பேக்கரி

நீலகிரியில் இருக்கும் 75 வருட பழமையான வர்க்கி தயாரிக்கும் இடங்களில் ‘இங்கிலிஷ் பேக்கரியும்’ ஒன்று. ஆங்கிலேயர்கள் நம்மிடமிருந்து வெளியேறியபோது தொடங்கப்பட்ட பேக்கரி என்பதால் ‘இங்கிலிஷ் பேக்கரி’ என்று பெயர். வட்ட வடிவிலான அமைப்புக்குள் விறகுகளைக் கொண்டு தீ மூட்டி, அதற்குள் வர்க்கிகளைச் செலுத்தி, வேகவைக்கும் பாரம்பரிய முறையை அங்கு பார்க்க முடிந்தது.

மூலப் பொருள்கள் என்னென்ன?

மைதா, சர்க்கரை, எண்ணெய், நெய் ஆகியவை வர்க்கி தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள். இவற்றை மொத்தமாகப் பிசைந்து மாவாகக் கல்லில் பரப்பி, சிறு சிறு பகுதிகளாக வெட்டிக்கொள்கிறார்கள். பின்னர் முக்கோண வடிவத்தில் வர்க்கிகளைத் தயாரிக்க மாவைச் சுழற்றி வீசி நேர்த்தியாக வடிவமைத்துக் கொள்கிறார்கள்.
தட்டுகளில் பரப்பி வைக்கப்பட்ட வர்க்கிகள் நீண்ட இரும்புக் கருவியின் மூலம் மிகப் பெரிய அடுப்புக்குள் செலுத்தப்படுகின்றன. பாதி வெந்ததும் வர்க்கிகள் வெளியே எடுக்கப்பட்டு ஆற வைக்கப்படுகிறது. சில மணி நேரம் கழித்து மீண்டும் அவற்றை அடுப்புக்குள் வைத்து, முழுமையாக வேகவைக்கப்பட்டு, வர்க்கியாக எடுக்கிறார்கள்.
சரியான பதத்தில் அடுப்பிலிருந்து வர்க்கிகளை வெளியே எடுக்கத் தவறினால், நொறுவல் பதம் கிடைக்காது. நெருப்பில் நீண்ட நேரம் வைத்திருந்தால் தீய்ந்த வாசனை வந்துவிடும். காலை ஐந்து மணிக்குத் தொடங்கும் வர்க்கிக்கான வேலைகள் மாலை மூன்று மணிக்கு முடிவடையும்.

வர்க்கியின் சுவையும் மொறுவல் தன்மையும் நீண்ட நாள்கள் நிலைத்திருப்பதற்கு விறகடுப்பில் செய்யப்படும் உத்தியே காரணம் என்கிறார் அதன் உரிமையாளர். ஓவெனில் தயாரிக்கப்படும் வர்க்கிகள் சில நாள்களில் நொறுவல் தன்மையை இழக்க வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மலை முகட்டில் நின்று கொண்டு வாங்கிய வர்க்கிகளை, கட்டஞ்சாயாவில் மூழ்க வைத்து சாப்பிட்டது குளிர்ச்சிக்கு இதமான அனுபவமாக இருந்தது.

வர்க்கிகளை அப்படியே கடித்துச் சாப்பிடும் போது ஒரு சுவை! தேநீரில் மூழ்க வைத்துச் சாப்பிடும் போது வேறொரு சுவை. பாலில் ஊற வைத்துச் சாப்பிடும்போது வேறு ஒரு சுவை.வர்க்கிகளை இறுக்கமான புட்டியில் மூடிப் பத்திரப்படுத்தினால், சில மாதங்கள் வரை தன்மை மாறாமல் இருக்கும். சுவையாக இருக்கிறது என்பதற்காக அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் உடலுக்குக் கூடுதல் கலோரிகளைக் கொடுக்கும். கவனம்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர். | drvikramkumarsiddha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x