Published : 05 Mar 2025 04:44 PM
Last Updated : 05 Mar 2025 04:44 PM
மலைப் பகுதியை ரசித்துக்கொண்டே தேநீர் பருகுவது, கடற்கரையில் அமர்ந்துகொண்டு மீன் உணவு வகைகளைச் சாப்பிடுவது என்பதெல்லாம் சுற்றுலாப் பயணிகளின் விருப்பப் பட்டியல்களில் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் அருவிக்கு அருகில் நின்றுகொண்டு, அதன் சாரல் மெலிதாகத் தேகத்தில் விழ, ஆவி பறக்கும் காடை முட்டைக்கறியைச் சாப்பிடுவது சுகமான அனுபவம்! அதற்காக நீங்கள் பயணப்பட வேண்டியது மூணாறுக்கு அருகிலிருக்கும் லக்கம் அருவிக்கு.
உடுமலைப்பேட்டையிலிருந்து மூணாறு செல்லும் வழியில் இருக்கிறது. மூணாறுக்கும் இதற்கும் சுமார் 25 கி.மீ. தொலைவு.
மலைச்சாலைக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது அழகுச் சொட்டும் லக்கம் அருவி! அவ்வழியே பயணப்படுபவர்களின் மனமோ, லக்கம் அருவியின் பேரழகை நின்று ரசிக்காமல் பயணத்தைத் தொடர விரும்பாது. அருவியை மையப்படுத்தி சாலை நெடுகிலும் பல்வேறு சிற்றுண்டி கடைகள் வரிசைகட்டி நிற்கின்றன. அங்கு ஒரு கடையில் கேரளத்து மசாலா போட்டு அவித்த காடை முட்டையை மெருகேற்றிக் கொடுக்கப்படும் ‘காடை முட்டைக்கறி’ எனும் ஊட்டமிக்கச் சிற்றுண்டி ஸ்பெஷல். அதற்கு ஏகப்பட்ட பயணிகள் ரசிகர்களாக இருக்கிறார்கள்!
காடை முட்டைக்கறி: தோசைக்கல்லில் சீவி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், புதினாவைத் தூவி கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி, லேசாகக் கிளறிக்கொள்கிறார்கள். ஒருபுறம் அவிந்துகொண்டிருக்கிற ஐந்தாறு காடை முட்டைகளை எடுத்து இரண்டாக நறுக்கி கலவையில் போடுகிறார்கள். கேரளத்து மசாலாவைத் தூவி நன்றாகக் கிளறி எடுக்க, காடை முட்டைக்கறி சுண்டி இழுக்கிறது. அதை வாழை இலையில் ஆவி பறக்கப் பரிமாறுகிறார்கள்.
குளிர்ச்சியை உள்வாங்கிக்கொண்டே, லக்கம் அருவியின் சாரலில் நனைந்துகொண்டே சூடான காடை முட்டைக் கறியைப் பசியுடன் சாப்பிடும்போது, கரைந்து இரைகுழலுக்குள் இறங்குகிறது. வெங்காயத்தின் சாரம் சுவையைக் கூட்ட, சேர்க்கப்பட்ட மசாலா கலவையோ சில அடிகள் வரை நறுமணம் பரப்புகிறது.
அந்தப் பகுதியில் வீட்டிலேயே அரைத்துத் தயாரிக்கப்படும் இயற்கை மசாலா கலவையைப் பயன்படுத்துவதுதான் காடை முட்டைக்கறியின் தனித்த சுவைக்குக் காரணம் என்கிறார் கடை உரிமையாளர். மேற்கு மலைத் தொடரில் விளையும் மசாலாப் பொருள்களின் தன்மையிலும், வீரியத்திலும் சுவையிலும் எப்போதுமே தனித்துவம் உண்டு.
நன்மைகள்
காடை முட்டைக்கோ ஒவ்வாமை அறிகுறி தடுக்கும் செயல்பாடு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புரதத் தேவையையும் நிறைவாகப் பூர்த்தி செய்யும். எதிர்-ஆக்ஸிகரணி தன்மையும், உடலில் உண்டாகும் நுண்ணிய வீக்கங்களைக் குறைக்கும் சிறப்பு குணமும் காடை முட்டைக்கு இருப்பதாகச் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
மலைகிராமத்து வழக்கு: திருமணமானவர்களுக்குக் காடை முட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைக் கொடுக்கும் வழக்கம் மலைக்கிராமங்களில் உண்டு! அதில் கிடைக்கும் ஃபோலேட் சத்தும் இதற்கான காரணமாக இருக்கலாம். உடலுக்கு ஊட்டம் வேண்டும் என்று நினைப்பவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள் காடை முட்டையை அடிக்கடி முயற்சி செய்யலாம். அங்கே கிடைக்கும் அவித்த சோளத்துக்குக் காடை முட்டைக் கறி சிறந்த காம்போ என உள்ளூர் மக்கள் புதுமையான சுவையை அறிமுகம் செய்ய, சோளத்தையும் காடை முட்டைக்கறியையும் ஒன்றாக முயற்சி செய்பவர்களும் இருக்கிறார்கள்!
லக்கம் அருவியைப் பார்க்கலாம் என்று ஆசையோடு செல்கிறவர்களை வாசனையின் மூலம் வாஞ்சையோடு அழைக்கிறது காடை முட்டைக்கறி! சிலர் சிற்றுண்டியை வாங்கிக்கொண்டு அருகிலே இருக்கும் லக்கம் அருவியின் மடியில் அமர்ந்து சாப்பிடவும் செய்கிறார்கள்.
லக்கம் அருவிக்குப் பயணம் மேற்கொண்டால் காடை முட்டைக்கறியோடு அப்பகுதியில் உள்ள பல்வேறு பறவை இனங்களையும் பார்க்க முடியும்! மலபார் அணில்கள் மரங்களில் உறவாடுவதை வெகு அருகிலேயே பார்க்கலாம். பயணத்தை முழுமையாக்க வேறென்ன வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் வரை அங்கே செலவிடலாம்!
- கட்டுரையாளர், சித்த மருத்துவர். | தொடர்புக்கு: drvikramkumarsiddha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...