Published : 05 Jul 2018 03:09 PM
Last Updated : 05 Jul 2018 03:09 PM
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெற்றி பேட்மிண்டன், கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும் அவற்றைச் சார்ந்துள்ள வீரர்களுக்கும் புத்துயிர் அளித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த ப்ரோ கபடி லீக் தொடருக்கான வீரர்கள் ஏலமே இதற்குச் சான்று. எந்த ஒரு கபடி வீரரும் ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதில்லை என்ற குறையை, ஹரியாணாவின் மோனு கோயத் போக்கியிருக்கிறார்.
கிரிக்கெட்டைக் கொண்டாடும் இந்த தேசத்தில், கிரிக்கெட் மட்டுமல்லாமல், பிற விளையாட்டுகளுக்கும், அதில் உள்ள வீரர்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்பதற்கு ப்ரோ கபடி லீக் தொடரில் விளையாடும் மோனு கோயத் உதாரணமாகியிருக்கிறார்.
படிப் படியாகக் கபடி
ஹரியாணாவின் ஹிஸ்ஸார் மாவட்டத்தில் உள்ள ஹன்சி பகுதியில் பிறந்து வளர்ந்த மோனுவுடைய தந்தை ஒரு விவசாயி. எப்போதும் துறுதுறுப்பாக இருக்கும் மோனுவை, அவருடைய மாமா விஜேந்தர் சிங் தான் கபடி போட்டியில் சேர்த்துவிட்டார். 9 வயதிலேயே கபடிக் களத்தில் கால்பதித்துவிட்ட மோனு 11 வயதிலேயே தேர்ந்த கபடி வீரரானார். ஹரியாணா போன்ற விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலத்தில், விளையாட்டுப் பிரிவில் கல்வி பயின்ற மோனுவுக்கு, ராணுவத்தில் ஹவில்தார் பதவியையும் இந்தக் கபடிப் போட்டிதான் வாங்கிக் கொடுத்தது.
ராணுவ வீரர்கள் அணியில் இருப்பவர்கள், ப்ரோ கபடி லீக் தொடரில் பங்கேற்கக் கூடாது என்ற விதிமுறையால், முதல் 3 தொடர்களிலும் இடம்பெறாத மோனு, அதன் பின்னர் விதிகளில் செய்யப்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து ப்ரோ கபடியில் கால்பதித்தார். பெங்கால் வாரியர்ஸ் அணிக்காக முதன்முதலில் விளையாடிய மோனு, 13 போட்டிகளில் 59 புள்ளிகளைக் குவித்து அசத்தினார். ஆனாலும், அவரது அணிக்கு அந்த சீசனில் கடைசி இடமே கிடைத்தது. 4-வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற பாட்னா பைரேட்ஸ் அணி, மோனுவின் பலத்தை நன்கு உணர்ந்திருந்ததால், ஐந்தாவது சீசனில் அவரை ரூ.44.5 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.
அதுவரை கபடி களத்தில் ஒரு வீரராக மட்டுமே அடையாளம் காணப்பட்ட மோனு, தனது மிரட்டலான ஆட்டத் திறமையால், நட்சத்திர வீரராக உருவெடுத்தார். ஐந்தாவது சீசனில் விளையாடி 26 போட்டிகளில் மொத்தம் 191 புள்ளிகளை வென்று எதிரணியினருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினார் மோனு. இந்த நிலையில் தான் சமீபத்தில் நடந்து முடிந்த ப்ரோ கபடி வீரர்களுக்கான ஏலத்தில் ஒரு கோடியே 51 லட்சம் ரூபாய்க்கு மோனுவை, உச்சபட்ச விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணி. ப்ரோ கபடி லீக் தொடரில், ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு ஒரு வீரர் ஏலத்தில் எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்ற சாதனையும் மோனுவுக்கு போனஸ் பரிசாகக் கிடைத்திருக்கிறது.
சிகரம் தொட்ட மோனு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் நியூசிலாந்து வீரர் டிம் சௌதி, இங்கிலாந்தின் ஜேசன் ராய், சாம் பில்லிங்ஸ் ஆகியோரைவிட அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறார் மோனு. இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்தியைவிட காஸ்ட்லியான வீரராக உருவெடுத்திருக்கும் மோனு, கிரிக்கெட் அல்லாத விளையாட்டை மையமாக கொண்ட வீரர்கள் பட்டியலில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறார். 2 முறை ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில்குமார் கூட, ப்ரோ வ்ரெஸ்லிங் லீக் தொடரில் 55 லட்சம் ரூபாய்க்குத்தான் ஏலம் எடுக்கப்பட்டார். இந்திய பேட்மிண்டன் லீக் தொடரில் காஸ்ட்லி வீரராகக் கருதப்படும் பிரன்னோயைவிட, மோனுவின் விலை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு விளையாட்டையும் அர்ப்பணிப்பு உணர்வுடனும், ஆத்மார்த்த மன நிம்மதியுடனும் விளையாடினால், எந்த உயரத்தையும் எட்ட முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணமாகியிருக்கிறார் ஹரியாணாவின் மோனு கோயத்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT