Published : 04 Jan 2025 04:39 PM
Last Updated : 04 Jan 2025 04:39 PM
காரைக்குடி: பெண்களுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சையின்போது சில நோயாளிகளுக்கு ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவே பஞ்சு வைக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை முடியும்போது பஞ்சு கண்டிப்பாக அகற்றப்பட்டுவிடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப் பையை அகற்று வதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய அறுவை சிகிச்சையி்ன்போது சில சமயங்களில் கவனக்குறைவாக பஞ்சை வயிற்றுப் பகுதியிலேயே விட்டு விடுவதால், கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது.
சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணின் வயிற்றில் மருத்துவர்கள் பஞ்சை வைத்து தைத்துவிட்டதாக புகார் எழுந்தது. இதுபோன்ற பிரச்சினை பல இடங்களில் எழுப்பப்படுகிறது.
இதுகுறித்து காரைக்குடி தனியார் மருத்துவமனை மருத்துவர் சித்ராதேவியிடம் கேட்டபோது, ஹார்மோன் சீரற்ற சுரப்பால் பெண்களுக்கு கர்ப்பப் பை பிரச்சினை ஏற்படுகிறது. பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு தான் கர்ப்பப்பை பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு ரத்தப் போக்கு அதிகமாகி, ரத்த சோகை மூலம் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு ஹார்மோன் தெரபி உள்ளிட்ட சிகிச்சை அளிப்போம்.
அதிலும் சிலருக்கு கட்டுப்படாமல் உடல்நிலை மோசமானால் கர்ப்பப்பை அகற்றப்படும். சிலருக்கு கர்ப்பப்பை வீக்கம் அதிகமாகி மாதவிடாய் காலங்களில் அதிக வலி இருக்கும். மாதவிடாய் நிற்கும் காலம் வரை வலி இருக்கும். மருந்து, ஊசி மூலம் வலி, வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால், அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம்.
பெரும்பாலும் கர்ப்பப்பையில் கட்டி இருந்தால் புற்றுநோயாக மாறாது. ஆனால் கருமுட்டை பையில் இருந்தால் புற்றுநோயாக மாற அதிக வாய்ப்புள்ளது. இதனால் கர்ப்பப்பையை அகற்றும் போதே, கருமுட்டை பையையும் அகற்றி விடுவோம். ஆனால் 40 வயதுக்கு கீழே உள்ள பெண்களுக்கு சரியான காரணமின்றி அகற்ற கூடாது என சட்டம் உள்ளது.
மேலும் அறுவை சிகிச்சையின்போது பெரும்பாலும் பஞ்சு வைப்பதில்லை. சில சமயங்களில் ரத்தப் போக்கு இருந்தால் நோயாளிக்கு வேறு பாதிப்புகளை தடுக்க கவுன்ட் (எண்ணிக்கை) அடிப்படையில் வைப்பர். அறுவை சிகிச்சை முடிந்ததும், அதே கவுன்டில் பஞ்சை அகற்றிவிட வேண்டும். பெரும்பாலும் பஞ்சை அகற்றாமல் விடுவதில்லை. பஞ்சை அகற்றாவிட்டால் நோயாளிக்கு சில நாட்களில் அறிகுறி தெரிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT