Published : 30 Dec 2024 06:05 PM
Last Updated : 30 Dec 2024 06:05 PM
பூப்பெய்தல், தாய்மை அடைதல் என ஒரு பெண் வாழ்வில் உடல் சார்ந்து நிகழும் மாற்றங்களுக்கு சடங்குகளும், சம்பிரதாயங்களும் செய்து அதன் மீது தீட்டென்றும், புனிதமென்றும் கற்பிதங்கள் கற்பிக்கும் சமூகத்தில்தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முற்போக்கு பேசும் ஊடகங்கள் கூட எங்கோ ஒரு கிராமத்தில் பூப்புனித நீராட்டு விழா, திருமணத்துக்கு செய்யப்படும் பிரம்மாண்ட சீர் வரிசைகள் பற்றிய செய்தியை ஒளிபரப்பி அறிந்தோ அறியாமலோ பெண்ணடிமைத் தனத்தை ஊக்குவித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
இவை போதாதென்று செல்லப் பிராணிகளுக்கும் மஞ்சள் நீராட்டு விழாவும், வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் போடும் அளவில் தான் சமூகம் இருக்கிறது. கற்பு, பெண் உடல் மீது கட்டமைக்கப்பட்ட புனித பிம்பங்கள், மாதவிடாய் தொடர்பான கட்டுக்கதைகள் ஆகியனவற்றின் மீதான ஆரோக்கிய விவாதங்களும் இல்லாமல் இல்லை. அதேவேளையில் தாய்மை அடைதல் மீதான பார்வை மீதும் கவனம் தேவை என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார் திரைப் பிரபலம் ஒருவர். சவாலான கதைகளை, கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும், எதிலும் சற்று வித்தியாசமான பார்வையை முன்வைக்கும் நடிகை ராதிகா ஆப்தேவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றே இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது.
ராதிகா ஆப்தேவின் பதிவில் என்ன இருக்கிறது? - “நான் இந்த ஃபோட்டோஷூட்டை குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக நடத்தினேன். உண்மை என்னவென்றால், கர்ப்ப காலத்தில் இருந்த என் உடல் தோற்றத்தை உள்ளபடியே ஏற்றுக்கொள்ள நான் போராடினேன். ஏனெனில், அதற்கு முன்னதாக என்னை நானே அவ்வளவு பருமனாகப் பார்த்ததில்லை. என் உடல் வீங்கிப் போய் இருந்தது. எனது இடுப்பு எலும்புப் பகுதியில் கடுமையான வலி இருந்தது. தூக்கமின்மையால் நான் பட்ட அவதி கர்ப்ப காலம் மீதான என் பார்வையையே மாற்றியது.
இப்போது குழந்தை பிறந்து இரண்டே வாரங்கள்தான் ஆகின்றன, இப்போது என் உடல் இன்னும் வேறு மாதிரியாக இருக்கிறது. புதிய சவால்கள், புதிய கண்டுபிடிப்புகள், புதிய பார்வைகள் உதித்துள்ளன. இந்தத் தருணத்தில், என் கர்ப்பா கால புகைப்படங்களை எல்லாம் கனிவோடு அணுகுகிறேன். என் மீதே நான் கடினமாக நடந்து கொண்டதற்காக வருத்தப்படுகிறேன். இப்போது என்னால் அந்த மாற்றங்களில் இருந்த அழகைக் காண முடிகிறது. இந்தப் புகைப்படங்களை நிச்சயமாக என் காலம் முழுவதும் நான் பத்திரப்படுத்துவேன்.
எனக்குத் தெரிந்து நிறைய பெண்கள் கடினமான கர்ப்ப காலத்தை கடந்திருக்கின்றனர். உண்மையில், இது மாதவிடாய் காலத்தில் மெனோபாஸை எதிர்கொள்வதற்கு இணையானது. கர்ப்ப கால ஹார்மோன்களை லேசாக எண்ணிவிடக் கூடாது. நாம் எல்லோரும் மாதவிடாய் பற்றியும், மெனோபாஸ் பற்றியும் பேசுகிறோம். ஆனால் கர்ப்ப காலத்தின் மீது மட்டும் உன்னத ஒளி பாய்ச்சுகிறோம். குழந்தையைப் பெற்றெடுத்தல் என்பது நிச்சயமாக அற்புதமானதுதான். ஆனால் கர்ப்ப காலத்தின் கடினங்களைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?! இது எனக்கு முட்டாள்தனமானத் தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்.
ராதிகா ஆப்தேவின் இந்தப் பதிவை வாசிக்கும் போதே சமீபத்தில் ’வெஜைனல் பெர்த்’ (Vaginal Birth) மூலம் தாயான பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் எழுப்பிய கேள்விகளையும் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது, “சுகப் பிரசவம் என்று இதற்குப் பெயர் வைத்தது யார்? எந்த விதத்தில் இது சுகமான பிரசவமாக இருக்கிறது என்று அந்தப் பெயரை வைத்தார்கள். பிரசவ வலி மிகக் கொடூரமாக இருந்தது. சிசேரியனுக்கு இந்த வலி எவ்விதத்திலும் குறைவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
குழந்தை சற்றே பெரிதாக இருந்தால் வெளியே வர பிறப்புறப்பில் சிறிய கீறல் போட்டு பின்னர் தையல் வேறு போடுகிறார்கள். அந்தத் தையலால் ஏற்படும் வலியைச் சொல்ல முடியாது. இவ்வளவு கொடுமைகள் இருக்கும்போது அதை ‘சுகப் பிரசவம் தான ஏன் அலட்டிக்குற?’ என்று கேட்போர்களை என்ன செய்யலாம். இதை சுகப் பிரசவம் என்று சொல்லாதீர்கள். அறுவை சிகிச்சை இல்லாமல் இயற்கையான முறையில் குழந்தை பெறுதல் என்று வேண்டுமானாலும் சொல்லுங்கள்” என்று அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்.
ராதிகாவின் பதிவு, இந்தப் பெண்ணின் பகிர்வும் சரி இரண்டுமே கர்ப்ப காலத்தின், பிரசவத்தின் மீதான உன்னத ஒளியின் மீதான சாட்டையடிதான். பிரசவ காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் உடலில் வெவ்வேறு விதமான தாக்கங்கள் இருக்கலாம், சிலருக்கு வாந்தி, குமட்டல் இருக்கலாம். சிலருக்கு சில ஒவ்வாமை ஏற்படலாம். சிலருக்கு காரணமே இல்லாமல் மனச்சோர்வு ஏற்படலாம். இவை எல்லாவற்றையும் மருத்துவ உலக இயல்பானதே எனக் கூறுகிறது.
கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியமான மனநலம் பெரும்பாலும் புறக்கணிக்கப்டக் கூடாது. அது பிறக்கும் குழந்தைக்கு மனநலப் பிரச்சினைகள், கவனம் செலுத்துதலில் பிரச்சினை, பெற்றோர் கூறுவதைக் கவனிக்காத தன்மை, அதீத செயல்பாட்டுக் கோளாறு, அறிவாற்றல் வளர்ச்சி பலவீனமடைதல் போன்றவற்றை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கின்றனர். சில மருத்துவர்கள் கர்ப்பிணியோடு, அவரின் கணவர், மாமியார் என எல்லோரையும் தெரபிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர்.
இதனால் இப்போதெல்லாம் ஓரளவுக்கு பெண்கள் கர்ப்ப காலத்தில் அவரவர் வசதிக்கு, விருப்பத்துக்கு ஏற்ப உடற்பயிற்சிகள், யோகா, தெரபி என செல்கின்றனர். சிலர் தனித்துவமாக ஊட்டச்சத்து நிபுணரையும் பணியமர்த்திக் கொள்கிறார்கள். கர்ப்ப காலம் பெண்ணின் சுமை அல்ல, குடும்பம் முழுவதும் சேர்ந்து கடக்க வேண்டிய காலம் என்பது தான் இதன் அர்த்தம். ஒருவகையில் கோ பேரன்டிங் என்பது பாலின சமத்துவம். அது குழந்தை பிறப்பதற்கு முன்பிருந்தே தொடங்குவது தான் சிறந்த நடைமுறையாக இருக்க முடியும்.
ஆனால், இவற்றையெல்லாம் குடும்பத்தினரும், சுற்றத்தினரும் விமர்சிக்கும் விதம் அநாகரிகமானது. அந்தக் காலத்தில் நாங்களெல்லாம் வயகாட்டில் வேலை பார்க்கும்போதே பிள்ளைய பெத்துப்போம் என்ற கதையில் ஆரம்பித்து அலட்டிகுறா என்ற விமர்சனங்கள் வரை கொண்டு வருவர்.
அத்தகையோருக்கு தான் ராதிகா ஆப்தேவின் இன்ஸ்டா போஸ்ட் மிக முக்கிய கேள்வியை முன்வைக்கிறது. “கர்ப்ப காலத்தின் கடினங்களைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?! இது எனக்கு முட்டாள்தனமானத் தெரிகிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
போஸ்ட் பார்டம் டிப்ரஷன் (Post Partum Depression)... - குழந்தையை சுமக்கும்போதும், குழந்தைப் பேறுக்குப் பின்னரும் பெண்ணின் உடலில் பெரியளவில் மாற்றங்கள் எற்படும். உடலில் மட்டுமல்ல மனதளவிலும் பெரிய அழுத்தங்கள் ஏற்படும். எப்போதும் குழந்தையை மட்டுமே கவனித்துக் கொள்ள நேரிடுவதால் நான் யார்? நான் இதற்காகத் தான் இருக்கிறேனா? என்ற கேள்விகள் எழும். குடும்பத்தினர் அனைவரின் கவனமும் புதிய வரவான குழந்தையின் மீது மட்டுமே இருக்க தன்னை குழந்தைப் பேறுக்கான இயந்திரமாக பாவித்துதான் அனைவருமே பழகினார்களா என்ற கோவம் வரும்.
பிரசவித்த தாய்க்கு உணவு கொடுக்கும்போது கூட, இதை சாபிட்டால் குழந்தைக்கு நல்லது, இதை சாப்பிட்டால் பால் ஊறும், இதை சாப்பிட்டால் குழந்தைக்கு ஆகாது என்று சொல்வார்கள். உடல் ரீதியாக சில விஷயங்கள் சரியென்றாலும் கூட குழந்தைக்காக, குழந்தைகாக என்ற ரிபீட் மோட் போதனைகள் அழுத்தத்தை ஏற்படுத்தும். பெரும்பாலான பெண்கள் இதிலிருந்து தங்களை மீள் கட்டமைப்பு செய்து கொள்கிறார்கள் என்றாலும் கூட. அந்த மீள் கட்டமைப்பு சுமையை ஒட்டுமொத்தமாக பெண்களுக்குக் கடத்தாமல் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்க வேண்டும். அதற்கான அறைகூவல் தான் ராதிகாவின் பகிர்வு.
பெண் சிசு கொலை தடுப்பது தொடங்கி மாதவிடாய் கட்டுக்கதைகளை தகர்த்தல், பெண் கல்வி, பாலின சமத்துவம், இணையைத் தேடும் உரிமை, பணியிடத்தில் ஒரே மாதிரியான வேலைக்கு ஒரே மாதிரியான ஊதியத்தைப் பெறுதல், ஆடை சுதந்திரம், தனித்து வாழும் சுதந்திரம், குழந்தை பெற்றுக் கொள்வதில் முடிவெடுக்கும் உரிமை எனப் பல விஷயங்களில் பெண்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. அதில் புத்தொளி பாய்ச்சப்பட்டிருக்கும் கர்ப்ப கால கடினங்களைப் பற்றியும் இனி பொது வெளியில் அதிகம் பேசினால் அதன் மீது பொதுபுத்தியில் படிந்துள்ள பார்வைகளை மாற்றுவதோடு தீர்வுகளையும் காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT