Published : 23 Dec 2024 04:54 PM
Last Updated : 23 Dec 2024 04:54 PM

மெட்ரோ ரயில் நிலைய முத்தம் - ஆதரிக்கும் இளம் தலைமுறையும், எதிர்க்கும் கலாச்சார காவலர்களும்!

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள காலிகாட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம் ஜோடி ஒன்று மெய் மறந்து முத்தமிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அது அங்கு பேசுபொருளாகியுள்ளது.

இந்தியாவில் கொல்கத்தா நகரம் ‘மகிழ்ச்சி நகரம்’ (சிட்டி ஆஃப் ஜாய்) என்று அறியப்படுகிறது. ஆனால், இங்கே ஓர் இளம் ஜோடி பொது இடத்தில் முத்தம் கொடுத்துக் கொண்டால் அது மகிழ்ச்சி என்ற வரம்புக்குள் வராது என்கின்றனர் நகரத்தின் சிலர். கொல்கத்தாவில் உள்ள காலிகாட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம் ஜோடி ஒன்று மெய் மறந்து முத்தமிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அது அங்கு பேசுபொருளாகியுள்ளது. இத்தகைய செயல்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து, நடன மற்றும் சினிமாத் துறையைச் சேர்ந்த மமதா சங்கர், “பொது இடங்களில் இத்தகைய செயல்களை ஊக்குவித்தால் அது இளம் தலைமுறை மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். நாகரிகத்தைப் பேணுவது அவசியம். காதல் அவசியம் தான். ஆனால் அது கண்ணியத்துடன் வெளிப்படுத்தப்படும்போது மட்டுமே அர்த்தமுள்ளதாகிறது. இக்காலக் குழந்தைகளை செல்போன்களின் மூலம் ஆபாசங்களுக்கு அறிமுகமாகிவிடுகின்றனர். மேலை நாடுகளில் இருந்து தவறான பழக்கங்களை தழுவிக் கொள்கின்றனர். இவைதான் பாலியல் வன்கொடுமைகள் நடக்கக் காரணமாகிவிடுகிறது” என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் ஆசிரியராக பணிபுரியும் 27 வயது இளைஞர் ஒருவர் இது குறித்து கூறும்போது, “அன்பை பொது இடத்தில் பரிமாறிக் கொள்வது என்பது இயல்பானதே. இது போன்ற சம்பவங்களை விமரசனம் செய்வதை நிறுத்த வேண்டும். இதே நகரத்தில் மக்கள் பொது இடங்களில் புகைக்கின்றனர், துப்புகின்றனர், மலம் கழிக்கின்றனம், சிறுநீர் கழிக்கின்றனர். ஆனால் காதலர்கள் கை கோத்து நடந்தாலும், இளம் ஜோடி முத்தம் கொடுத்துக் கொண்டாலோ மட்டும் அது செய்யத்தகாத செய்கையாக ஏன் பார்க்கப்படுகிறது. இவ்வாறாக எதிர்ப்பை தெரிவிப்பவர்கள் பலரும் பாலியல் வாழ்க்கையில் சுதந்திரம் அற்றவர்களாகவே இருக்கின்றனர்.

மேலும் இந்திய மக்களுக்கு விழி வழி கிளர்ச்சியில் ஒருவித மகிழ்ச்சி இருக்கிறது. அதனால் தான் வெளிப்படையாக அன்பு பரிமாறப்படுவதைக் காண்பதில் ஏற்பில்லை” என்று விமர்சித்துள்ளார். இன்னொரு இளைஞர், “முதலில் காதலர்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்ததே அபத்தம், தவறு.” எனக் கூறுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x