Last Updated : 03 Dec, 2024 08:15 PM

 

Published : 03 Dec 2024 08:15 PM
Last Updated : 03 Dec 2024 08:15 PM

ஆதரவற்றோரின் பசியாற்றும் குமரி - வெள்ளிச்சந்தை போலீஸாருக்கு குவியும் பாராட்டு!

வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காட்டில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், அனாதைகளுக்கு உணவு விநியோகம் செய்யும் எஸ்.ஐ. ராஜேந்திரன்.

நாகர்கோவில்: ஆதாரவின்றி தவித்து வருவோர் பசியாறுவதற்கான உதவிகளை தொடர்ச்சியாக செய்து வரும் போலீஸாரின் உதவிக்கரம் நெகிழ வைத்துள்ளது. வெள்ளிச்சந்தை எஸ்ஐ ராஜேந்திரன் தலைமையில் போலீஸார் மேற்கொள்ளும் இந்த மனிதாபிமான செயலுக்கு பாராட்டு குவிகிறது.

விஞ்ஞானம், நவீன வளர்ச்சி என முன்னேற்றங்கள் எத்தனைத்தான் இருந்தாலும், பிள்ளைகள் கைவிட்டதால் ஆதரவின்றி தவிக்கும் வயதான பெற்றோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர், கணவன் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பெண்கள் என கிராமந்தோறும் ஆதரவற்ற பலரை காணமுடிகிறது. அன்றாட விருப்பு, வெறுப்புகளின்றி ஒருவேளை உணவுக்காக இவர்கள் திண்டாடும் அவலம் உள்ளது.

குமரி மாவட்டத்தில் இவர்களை பராமரிக்க அரசு காப்பகங்கள் இருந்தபோதிலும், பலர் கவனிப்பாரின்றி அலைவதை காணமுடிகிறது. இதற்காக எவ்வித பிரதிபலனும் பாராமல் மனித நேயத்தோடு பல காப்பகங்களும், முதியோர் இல்லங்களும் செயல்படுகின்றன. குறிப்பாக வெள்ளிச்சந்தை காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட ஈத்தங்காட்டில் மக்கள், உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள அன்பாலயா இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை மனிதநேயம் படைத்தவர்கள் தாராளமாக உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது பிறந்த நாள் மற்றும் பண்டிகை தினங்களில் சமூக சிந்தனையாளர் பலர் இந்த இல்லத்திற்கு சென்று உணவு பரிமாறி அவர்களோடு மகிழ்வர். இவர்களுக்கு நிரந்தரமாக உணவு மற்றும் மருத்துவ உதவிகள் கிடைக்க வேண்டும் என வெள்ளிச்சந்தை காவல் நிலைய போலீஸார் தொடர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த காவல் நிலையத்திற்குட்பட்ட சேவை மனப்பான்மை உடையவர்களை அணுகி உணவு மற்றும் உடை போன்றவற்றை பெற்று வழங்கி வருகின்றனர். சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது ஒருபுறமிருக்க, ஆதரவற்றோருக்கு அன்பு செலுத்தி அவர்களுக்கு உதவி செய்வதை ஒருங்கிணைப்பது மனநிறைவு அளிப்பதாக வெள்ளச்சந்தை எஸ்ஐ ராஜேந்திரன் தெரிவித்தார்.

இவர் குழந்தைகளால் கைவிடப்பட்ட இரு பெற்றோரை சமீபத்தில் இந்த இல்லத்தில் சேர்த்து பராமரித்து வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ''வயோதிகம் அனைவருக்கும் வருவது. இதைப்போல் திறன்குறைவு படைத்த மனநலன் பாதிக்கப்படுவதும் எதிர்பாராதது. இவர்களை உறவினர்களும், பெற்ற குழந்தைகளும் கைவிடுவது ஏற்றுகொள்ள முடியாதது.

இதனால்தான் வெள்ளிச்சந்தை காவல் நிலைய பகுதிகளில் இதுபோன்று தவிக்கும் முதியவர்களை கண்டறிந்து அனாதை இல்லத்தில் சேர்ப்பதுடன் மட்டுமின்றி, அவர்களுக்கு முறையான உணவு, பராமரிப்புகள் மேற்கொள்ளப்படுகிறதா எனவும் கண்காணிக்கிறோம். அத்துடன் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் மூலம் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறோம்'' என்றார். காவல் துறையில் முதியோர்களை பராமரிக்கும் வெள்ளிச்சந்தை போலீஸாருக்கு பொதுநல ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x