Published : 23 Nov 2024 08:52 PM
Last Updated : 23 Nov 2024 08:52 PM
மதுரை: நடுமலையில் காணப்படும் 1300 முதல் 1100 ஆண்டுகள் பழமையான கோயில் குறித்து தொல்லியல்துறை விரிவாக ஆய்வு செய்து, நடுமலை கன்னிமார் கோயிலை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கூலானிபட்டியில் சுமார் முப்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது நடுமலை. கிட்டத்தட்ட 100 அடி உயரமுள்ள இம்மலையின் தெற்கு பகுதியான கன்னிமார் பாறை உச்சியில் கன்னிமார் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலில் 1200 ஆண்டுகள் பழமையான தவ்வை சிலையும், 700 ஆண்டுகள் பழமையான வட்ட வடிவ ஆவுடையார், நந்தி, பெண் சிற்பம் உள்ளிட்ட சிற்பங்கள் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை குழுவினரால் நவ. 22-ம் தேதி அன்று கண்டறியப்பட்டுள்ளது. அரிட்டாபட்டி மலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ள கூலானிப்பட்டி நடுமலையில் இந்த பழமையான சிற்பங்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பத்துறை ஆய்வாளர் ப. தேவி அறிவு செல்வம் கூறுகையில் “தமிழகத்தில் கி.பி 9-ம் நூற்றாண்டு வரை வழிபாட்டில் இருந்த தாய் தெய்வங்களில் ஒன்றான தவ்வை என்னும் மூதேவிக்கான கோயில் மதுரையில் திருப்பரங்குன்றம் முருகன் குடைவரைக் கோயிலில் தனி குடைவரையில் சன்னதியாக இருக்கிறது. மேலும், மதுரை சுற்று வட்டாரங்களில் ஆனையூர், செல்லப்பனேந்தல் போன்ற இடங்களிலும் சிறப்பான வழிபாட்டில் உள்ளது. அவ்வாறான கிபி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை சிற்பம் கன்னிமார் கோயில் வளாகத்தில் தலை இல்லாமல் அமர்ந்த நிலையில் மாந்தன் மாந்தியுடன் இருக்கிறார்.
பிற்கால பாண்டியர்கள் கால வட்ட வடிவ ஆவுடையார் பாகம் மட்டும் மண்ணில் புதைந்த நிலையில் இருக்கிறது. அருகே கருங்கல்லில் செதுக்கப்பட்ட நந்தியும், கூம்பு வடிவில் மூன்றரை அடி உயரம் இரண்டடி நீளம் உள்ள பலகை கல்லில் நின்ற நிலையிலான பெண் சிற்பம் புடைப்புச் சிற்பமாக உள்ளது. சிற்பத்தின் கால் பகுதியானது தனியாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றி தற்போது சிமெண்ட் போட்டு பூசி உள்ளார்கள். நான்கு கரங்கள் கொண்ட இச்சிற்பத்தின் கீழ் இடது கை தொடையில் வைத்தும், கீழ் வலது கை,மேல் இரு கைகள், முழுவதும் சிதைந்து உள்ளதால் ஆடை ஆபரணங்கள், கை அமைதிகளின் விவரங்களை அறிய முடியவில்லை’’ என்றார்.
பண்பாட்டு சூழலியல் ஆய்வாளர் தமிழ்தாசன் கூறுகையில்,“இக்குன்றில் காலடி நீளம், அகலம், ஆழம் கொண்ட மருந்து குழி என்று சொல்லப்படும் சிறிய பள்ளமும் உள்ளது. இங்கே 7 ஆம் நூற்றாண்டில் இருந்து 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பங்கள் கிடைப்பதை அடிப்படையாக கொண்டு இப்பகுதியில் தொன்மையான கோயில் ஒன்று வழிபாட்டில் சிறப்புடன் இருந்ததை தெரிந்து கொள்ள முடிகிறது. நடுமலையில் காணப்படும் 1300 முதல் 1100 ஆண்டுகள் பழமையான கோயிலின் இதர உறுப்புகள் குறித்து தொல்லியல்துறை விரிவாக ஆய்வு செய்து, நடுமலை கன்னிமார் கோயிலை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
தென் இந்தியாவை பொறுத்தவரை அதிக எண்ணிக்கையிலான தொல்லியல் எச்சங்களை தமிழ்நாடு கொண்டுள்ளது. ஆனால் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில்தான் அதிகளவு தொல்லியல் சின்னங்கள் பட்டியிலிடப்பட்டு முதன்மையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிக தொல்லியல் சின்னங்கள் இருந்தும் அது பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட்டு, பட்டியலிடப்பட்டு, பராமரிக்கப்படுவதில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT