Published : 21 Nov 2024 08:49 AM
Last Updated : 21 Nov 2024 08:49 AM
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து கவனம் பெறும் பெருநகரம் கோயம்புத்தூர். கோவை என்றால் சிறுவாணித் தண்ணீரும், மரியாதைக் கலந்த பேச்சும்தான் பெரும்பாலானோரின் நினைவுக்கு வரும். ஆனால், இணையவாசிகளால் ‘கோவையன்ஸ்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் கோவை மக்களின் ‘ஆன்லைன் அட்ராசிட்டி’யோ தனி ரகம்!
பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கலை என எந்தப் படிப்பானாலும் கோவையில் அந்தப் படிப்புகளுக்கான தரமான கல்லூரிகளைப் பார்க்க முடியும். இதில் மாநிலத்தின், நாட்டின் சிறந்த கல்லூரிகள் எனப் பெயர் பெற்ற கல்வி நிலையங்களும் அடங்கும். வெயில், மழை எதுவானாலும் ஆண்டு முழுவதும் சீரான வானிலையைக் கொண்ட ‘அதிசய பூமி’ கோவை என்பதாலேயே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து கல்வி பயில்கிறார்கள்.
சென்னையில் வெள்ளமோ, கடலூரில் புயலோ மாநிலத்தின் மற்ற பகுதிகளில் ஆண்டுக்கொரு முறை இயற்கைச் சீற்றம் ஏற்படுவது வழக்கம். அப்போது முதல் ஆளாக நிவாரணப் பொருள்களை அனுப்பி வைக்கும் கோவை மக்களின் அன்பை சொல்லில் அடக்க முடியாது. ஆனால், பொருள்களை அனுப்பிவைத்த மறுநொடியே சமூக வலைதளப் பக்கங்களில், ‘எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையே’, ‘கோவை எனும் சொர்க்கம்’, ‘கோவை வானிலைக்கு ஈடு உண்டோ’ என ரைட்-அப்புகளைப் பதிவிட்டு எரிச்சல் ஏற்றுவது கோவையன்ஸின் குசும்புக்குச் சான்று!
நண்பர்களுடன் அட்டிசேர 15 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, 3 மணி நேர பயணம் மேற்கொண்டு ஊட்டியில் ‘டீ’ குடிக்கச் செல்வது கோவையன்ஸ் வழக்கம். தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்கவும் ‘இதோ இருக்கு பாலக்காடு’ என எல்லைக் கடந்து கேரளம் சென்று திரைப்படம் பார்ப்பவர்கள்தான் கோவை மாநகர ரசிகர்கள்.
இப்படி சில விஷயங்களுக்காகப் பக்கத்து ஊர்களுக்கு ‘அசால்ட்டாகச்’ செல்லும் கோவைவாசிகளுக்குப் பணி நிமித்தமாக சென்னை வரும்போது மட்டும் சமாளிக்க முடியாமல் போய்விடும். ப்ச்! சென்னை வானிலை, வாகன நெரிசல், தண்ணீர், உணவு, மக்களை வசைப்பாடிக் கொண்டே இருக்கும் கோவையன்ஸின் புலம்பல்களுக்கு ‘சோகங்கள் ப்ரோ!’
‘பெரிய பகவதி’ (தலைநகரம்) சென்னை என்றால் ‘சின்ன பகவதி’ (துணை தலைநகரம்) கோவையாகத்தான் இருக்க வேண்டுமென இணையதளத்தில் சண்டைகளெல்லாம் அரங்கேறும். இந்தப் போட்டியில் ஏற்கெனவே வரிசையில் நிற்கும் திருச்சி, மதுரைவாசிகளுக்குப் பதில் சொல்லப்போவது யாரோ?!
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், பல காலம்தொட்டு கோவை மாநகரம் பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறது. கல்வி, மருத்துவம், வணிகம், தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு எனப் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, ஊட்டி என அண்டை ஊர்களிலிருந்தும் கோவையை நோக்கி மக்கள் வருவதால், கடந்த சில ஆண்டுகளாகவே கோவை சாலைகளில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. எனினும் இயற்கையின் ஆசியும், நகர வளர்ச்சியும் ஒரு சேர வாய்க்கப்பெற்ற ‘கோவையன்ஸ்னா சும்மாவா?’ - ராகா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment