Published : 02 Nov 2024 02:02 AM
Last Updated : 02 Nov 2024 02:02 AM
சண்டிகர்: கோட்டையை சிறப்பாக கட்டிக்கொடுத்த கான்டிராக்டருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்தை தொழிலதிபர் ஒருவர் பரிசாக வழங்கியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குர்தீப் தேவ் பத். பஞ்சாபில் இவருக்குச் சொந்தமான ஏராளமான பங்களாக்கள், வீடுகள், பண்ணை வீடுகள், எஸ்டேட்டுகள் உள்ளன. இந்நிலையில் தனது நிலத்தில் ஒரு கோட்டையைக் கட்டுவதற்கான பணிகளை, ரஜிந்தர் சிங் ரூப்ரா என்ற காண்டிராக்டரிடம் குர்தீப் தேவ் ஒப்படைத்தார் குர்தீப் தேவ். இதைத் தொடர்ந்து தன்னுடைய திறமையான தொழிலாளர்கள், தோட்டக்கலை நிபுணர்கள், கட்டிடக் கலை நிபுணர்கள் உதவியுடன் அருமையான பூங்காங்கள், கலையம்சமுடன் கூடிய கோட்டையை கட்டித் தந்துள்ளார் ரஜிந்தர் சிங்.
இதைப் பார்த்து அதிசயித்த குர்தீப் தேவ், ஷாகோட் பகுதியைச் சேர்ந்த காண்டிராக்டர் ரஜிந்தருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்தை பரிசா வழங்கியுள்ளார். இந்தத் தகவல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ஜிராக்பூர் பகுதியில் உள்ள குர்தீப் தேவுக்கு சொந்தமான நிலத்தில் இந்த கோட்டை எழுப்பப்பட்டுள்ளது. சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோட்டை அருமையாக கட்டப்பட்டுள்ளது. அதனால் மனமகிழ்ந்த குர்தீப் தேவ், இந்தப் பரிசை வழங்கியுள்ளார். 18 கேரட் தங்கத்தால் ஆன இந்த ரோலக்ஸ் கடிகாரம் ஆய்ஸ்டர் வகை பிரேஸ்லெட்டுடன் மிகவும் அழகுற அமைந்துள்ளது.
தினமும் 200 தொழிலாளர்களின் உழைப்பில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து குர்தீப் தேவ் கூறும்போது, “இந்த கோட்டை போன்ற வீடு, வீடு மட்டுமல்ல. மிகவும் ஆடம்பரமாகவும், கவனமாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான் கொடுத்த காலக்கெடுவுக்குள் அவர் நேர்த்தியாகவும், எதிர்பார்த்ததை விட அழகாகவும் காண்டிராக்டர் வழங்கியுள்ளார். அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அவர், எனது குடும்பத்தாரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளார். அதனால் இந்த பரிசை அவருக்கு வழங்கியுள்ளேன்" என்றார்.
இந்த கோட்டையைச் சுற்றில் மிகப்பெரிய மதில் சுவர் அமைந்துள்ளது. கோட்டையின் உள்ளே அழகிய பூங்காக்கள், கோட்டைக்குள் விசாலமான அறைகள், பிரத்யேகமான அணிகலன்கள் அமைந்துள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டைகளைப் போன்று இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT