Published : 16 Oct 2024 04:48 AM
Last Updated : 16 Oct 2024 04:48 AM
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வடக்கு பரவூரை சேர்ந்தவர் சந்தியா. இவரும் இவரது கணவரும் வீடு கட்டுவதற்காக 2019-ம் ஆண்டு மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கடன் பெற்றனர்.
கரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவரால் அந்த வீட்டைகட்டி முடிக்க முடியவில்லை. இதனிடையே 2021-ம் ஆண்டு சந்தியாவின் கணவர் வீட்டை விட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் தனது இரண்டு குழந்தைகளை தனியே வளர்க்கும் நிலைக்கு சந்தியா தள்ளப்பட்டார்.
இந்த சூழலில் அவரால் கடனை அடைக்க முடியவில்லை. இதனால், வட்டியோடு சேர்த்து அவர் செலுத்த வேண்டிய தொகை ரூ.8 லட்சமாக உயர்ந்தது. இந்நிலையில் கடந்த வாரம், மணப்புரம் பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் சந்தியாவின் வீட்டுக்குள் நுழைந்து அவரையும் அவரது குழந்தைகளையும் வெளியேற்றினர்.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து கேரளாவில் பிறந்தவரும், ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லூலு குழுமத்தின் தலைவருமான தொழிலதிபர் யூசுப் அலி, அந்தப் பெண்ணின் கடனை அடைக்கவும், அவரது எதிர்காலத்துக்காக அவரது கணக்கில் ரூ.10 லட்சம் வரவு வைக்கவும் தன் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, கேரளாவில் உள்ள அவரது ஊழியர்கள் சந்தியாவின் கடனை அடைத்து அவரது வீட்டை மீட்டனர். மேலும், அவரது கணக்கில் ரூ.10 லட்சம் வரவு வைத்துள்ளனர். யூசுப் அலியின் இந்த உதவிக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT