Published : 28 Sep 2024 04:46 PM
Last Updated : 28 Sep 2024 04:46 PM

ரூ.5,000 மதிப்பிலான பைக்கை ஒப்படைத்தால் ரூ.10,000 சன்மானம் - மதுரை போஸ்டர் நெகிழ்ச்சிக் கதை

திருடுபோன பைக்கை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் அறிவித்து மாநகராட்சி பணியாளர் ஒட்டியுள்ள போஸ்டர்.

மதுரை: மதுரையில் தாயின் நினைவாக பாசத்தோடு பராமரித்து, ஓட்டி வந்த பைக் திருடு போன நிலையில், அதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் மட்டுமே என்றாலும், கண்டுபிடித்து தருபவருக்கு ரூ. 10 ஆயிரம் சன்மானம் தருவதாக உரிமையாளரான மாநகராட்சி ஊழியர் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

மதுரை காளவாசல் பொன்மேனி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(42). மாநகராட்சி ஊழியர். கார்த்திகேயனின் தாயார் கருப்பாயி சீட்டு கட்டிய பணத்தில் 2002-ல் மகனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார். இதனால் தாய்க்கு நிகராக பைக்கையும் பாசத்தோடு பராமரித்தார். இந்நிலையில், 2021-ம் ஆண்டு கரோனா காலத்தில் கருப்பாயி உயிரிழந்தார்.

இதனால் பைக்கையே தாயாக நினைத்து, இன்னும் பாசத்தோடு பராமரிக்கத்துவங்கினார். மிகவும் பழைய வாகனமாக இருந்தாலும், அதை மாற்றாமல் தாயின் நினைவாகவே பயன்படுத்தி வந்தார். இச்சூழலில், கடந்த செப். 12 ம் தேதி மதுரை பைபாஸ் சாலை பகுதியில் நிறுத்தப்படிருந்த பைக் திருடு போனது. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸில் கார்த்திகேயன் புகார் செய்தார். 15 நாட்களாகியும் பைக் கிடைக்கவில்லை.

பைக்கின் தற்போதைய விலை ரூ. 5 ஆயிரம் மட்டுமே. என்றாலும், தனது தாயாரின் நினைவாக வைத்திருந்தது திருடு போனதால் பைக் கிடைத்தால் ரூ.10 ஆயிரம் தருவதாகவும் பலரிடமும் தெரிவித்தார். இது குறித்து மாநகர் முழுவதும் பைக்கின் புகைப்படத்துடன் சுவரொட்டி ஒட்டி, பைக் கிடைத்தால் ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கார்த்திகேயன் கூறுகையில், தாயாக நேசித்த பைக் தொலைந்தது முதல் மிகுந்த மன வலியுடன இருக்கிறேன். பைக்கை திருடியவரே கொண்டு வந்து கொடுத்தாலும் ரூ.10 ஆயிரம் கொடுப்பேன். எனக்கு பைக்தான் முக்கியம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x