Published : 25 Sep 2024 04:51 AM
Last Updated : 25 Sep 2024 04:51 AM

8 மாதங்களில் 40,000 கி.மீ. தூரம் கப்பலில் உலகம் சுற்றப் போகும் 2 பெண் கடற்படை அதிகாரிகள்

கடல் சாகசப் பயணம் மேற்கொள்ளவுள்ள லெப்டினன்ட் கமாண்டர்கள் ரூபா, தில்னா.

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த 2 பெண் கடற்படைஅதிகாரிகள், 8 மாதங்களில் 40 ஆயிரம்கிலோ மீட்டர் தூரத்துக்கு கடலில் உலகை சுற்றி வரும் பயணத்துக்கு தயாராகியுள்ளனர்.

‘சாகர் பரிக்கிரமா 2’ என்ற திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர்கள் ரூபா, தில்னா ஆகியோர் உலகைச்சுற்றி வரவுள்ளனர். இதற்கு முன்பு 2017-ல் சாகர் பரிக்கிரமா-1 திட்டத்தின் கடற்படையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் குழுவினர் உலகைகப்பலில் சுற்றி வந்தனர். அதைத் தொடர்ந்துதற்போது இந்த பயணத்தை 2 பெண் அதிகாரிகள் மட்டும் தனியாக செய்யவுள்ளனர். வரும் அக்டோபர் 2-ம் தேதி தங்களது பயணத்தைரூபா, தில்னா இருவரும் தொடங்கவுள்ளனர்.

இதில் ரூபா புதுச்சேரியைச் சேர்ந்தவர். தில்னா, கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ்வி தாரிணியில் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். கடும் குளிர்,வெப்பம், கடல் சீற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுடன் இவர்களது கடல் பயணம் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் நன்னம்பிக்கை முனை, லீயூவின் முனை, ஹார்ன் முனைப் பகுதிகள் வழியாக செல்லவுள்ளனர். 8 மாதங்களுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் இந்தியா வந்தடைவர்.

இந்த இருவரின் பயணம் வெற்றி பெற்றால், தனியாக இரண்டு பெண்கள் கப்பலில் உலகச் சுற்றி வந்தவர்கள் என்ற பெருமையைப் பெறுவர். உலகைச் சுற்றி வருவதற்காக கடந்த 3 ஆண்டுகளாவே இவர்கள் பயிற்சி பெற்று வந்துள்ளனர். இவர்களது பயணமானது கோவாவிலுள்ள ஐஎன்எஸ் மண்டோவியில் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறும்போது,“தீவிரமான செயல்திறன், உடற்தகுதி, மன விழிப்புணர்வு தேவைப்படும் ஒரு கடினமான பயணமாக சாகர் பரிக்கிரமா-2 இருக்கும். இதற்காக 2 பெண் அதிகாரிகளும் கடுமையானபயிற்சியைப் பெற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான கடல் மைல்கள் தூரம் பயணம் செய்துள்ளனர். சுமார் 3 ஆண்டுகளாக அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்” என்றார்.

இவர்களது சாகச பயணம் வெற்றி பெற கடற்படை துணைத் தளபதி வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். லெப்டினன்ட் கமாண்டர் தில்னா 2014-ல்கடற்படையில் சேர்ந்தார். இவரது தந்தை தேவதாசன், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். அதைப் போல புதுச்சேரியைச் சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர் ரூபா 2017-ல் கடற்படையில் இணைந்தார். இவரது தந்தை அழகிரிசாமி, இந்திய விமானப்படையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x