Published : 29 Jun 2018 10:14 AM
Last Updated : 29 Jun 2018 10:14 AM

வால்டருக்குப் போகட்டும் அந்தக் கோப்பை!

 

ங்கிலாந்து கால்பந்து வரலாற்றில், 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் ஒரு கறுப்புச் சூரியன் உதயமானது. தனது கால்களின் திறமையால், இளமையில் அது ஒளிவீசியது. நாட்டுக்காக, விளையாட்டைத் துறந்து போரில் ஈடுபட்டது. இளமையிலேயே அஸ்தமித்தது. அந்தச் சூரியன்… வால்டர் டல்!

‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்’ என்று பெருமைகொள்வார்கள் இங்கிலாந்துக்காரர்கள். ஆனால், இங்கிலாந்து நாட்டின் இந்த முதல் கறுப்பினக் கால்பந்துச் சூரியனை இன்றுவரையில் இங்கிலாந்து அங்கீகரிக்காமல் இருக்கிறது.

‘கிராஃபிக்’ வடிவத்தில் காமெடி

அந்தச் சூரியன் விட்டுச் சென்ற தகிப்பை, ‘தி இல்லஸ்ட்ரேட்டட் ஹிஸ்டரி ஆஃப் ஃபுட்பால்: ஹால் ஆஃப் ஃபேம்’ எனும் புத்தகத்தில் கார்ட்டூன் போட்டுச் சொல்கிறார் டேவிட் ஸ்குவிர்ஸ். ‘தி கார்டியன்’ இதழின் கார்ட்டூனிஸ்ட்டான இவர், எழுதி வரைந்துள்ள இந்தப் புத்தகம் சமீபத்தில் வெளியானது.

டீகோ மரடோனா, பீலே, ரொனால்டோ, மெஸ்ஸியைப் போன்று இந்தத் தலைமுறைக்குத் தெரிந்த வீரர்களை மட்டுமல்லாது, சாக்ரடீஸ், ஆண்ட்ரியா பிர்லோ, மரியோ சகால்லோ போன்ற கடந்த தலைமுறை வீரர்களைப் பற்றியும், அலெக்ஸ் ஃபெர்கூஸன் போன்ற கிளப் நிர்வாகிகளைப் பற்றியும் காமெடியாக, கறுப்பு வெள்ளையில் ‘கிராஃபிக்’ புத்தக வடிவத்தில் சொல்லியிருக்கிறார் டேவிட்.

அதிகம் கோல் போடும் அல்லது அதிகம் ரசிகர்களைக் கொண்ட வீரர்களைப் பற்றிப் பேசும் வழக்கமான விளையாட்டு வரலாற்றுப் புத்தகங்கள்போல் அல்லாமல், கோல் கீப்பர்கள், மிட்ஃபீல்ட் ஆட்டக்காரர்கள், டிஃபெண்டர்கள், ஃபார்வேர்டு ஆட்டக்காரர்கள் எனப் பல நிலை வீரர்களைப் பற்றியும் இந்தப் புத்தகம் சுவாரசியமாகப் பேசுகிறது.

முதல் கறுப்பின வீரர்

பார்படாஸ் நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும் இங்கிலாந்தின் உள்ள கெண்ட் நகரத்தைச் சேர்ந்த தாய்க்கும் மகனாக 1888 ஏப்ரல் 28 அன்று பிறந்தார் வால்டர் டல். இப்படி, வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர்களை மேற்கத்திய நாடுகளில் ‘கலப்பினத்தவர்கள்’ என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. இங்கிலாந்து கால்பந்து அணியில் இடம்பிடித்த முதல் கறுப்பர், கலப்பினத்தவர் வால்டர் டல்!

தனது 9 வயதில் பெற்றோர்களைப் பறிகொடுத்த வால்டர், லண்டனில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குக் கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அவரது திறமையைப் பார்த்து ‘டோட்டென்ஹாம் ஹாட்ஸ்பர்’ எனும் கால்பந்து கிளப், வால்டரைத் தங்கள் அணியில் சேர்த்துக்கொண்டது. அந்த கிளப்பில் சில காலம் விளையாடிய பிறகு 1911-ல் ‘நார்த்தாம்ப்டன் டவுன்’ கிளப்பில் சேர்ந்து விளையாடத் தொடங்கினார். அங்கிருந்தபோது சுமார் 110 போட்டிகளில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

முதல் உலகப் போர் தொடங்கியபோது, கால்பந்தை விட்டுவிட்டு இங்கிலாந்து ராணுவத்தின் ‘மிடில்செக்ஸ் ரெஜிமெண்ட் 17-வது பட்டாலியன்’ படைப் பிரிவில் சேர்ந்தார் வால்டர். அங்கு அவரது தலைமைப் பண்பைப் பார்த்த வெள்ளை அதிகாரிகள், அவரை ‘சர்ஜெண்ட்’ நிலைக்கு உயர்த்தினார்கள். இவ்வாறு, இங்கிலாந்து ராணுவத்தில் அதிகாரியான முதல் கறுப்பினத்தவரும் வால்டர் டல்தான்!

சூரியன் அஸ்தமித்த நூற்றாண்டு

முதல் உலகப் போரில், தனது தலைமையில் 26 வீரர்கள் கொண்ட குழுவை வழிநடத்தி, ஜெர்மனி ராணுவ முகாம்களுக்குச் சென்று போரிட்டு, 1918-ம் ஆண்டு, மார்ச் 25-ம் தேதி வீர மரணமடைந்தார் வால்டர் டல். ஆனால், எவ்வளவோ தேடியும் அவரது உடலை மீட்க முடியவில்லை. முதல் உலகப் போர் முடிந்த நூறாவது ஆண்டு மட்டுமல்ல, வால்டர் டல் எனும் அந்தக் கால்பந்துச் சூரியன் மறைந்த நூறாவது ஆண்டும் இதுதான்!

போரில் காட்டிய அவரது வீரத்தை அங்கீகரிக்கும் விதமாக, ராணுவத்தின் மூலம் அவருக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், ‘இறந்தவர்களுக்கு அவ்வாறு விருது வழங்கும் வழக்கமில்லை’ என்று இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் மறுத்து வந்தது.

ஆனால் 2016-ல், வால்டர் டல்லின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஃபில் வஸிலி எனும் வரலாற்றாசிரியர், ‘வால்டர் டல் போன்ற கறுப்பர்களுக்கு விருது வழங்கக் கூடாது’ என்று அன்றைய வெள்ளை அதிகாரி ஒருவர் கொடுத்த ரகசிய ‘மெமோ’வைக் கண்டு பிடித்தார். அதைச் சாட்சியமாக வைத்து, ‘நிறவெறி காரணமாக, வால்டருக்கு அன்று விருது வழங்கப்படவில்லை’ என்று நிரூபித்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே, வால்டருக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கேற்றபடி சட்டத்தைத் திருத்த, இங்கிலாந்து அரசு முன் வருவதாக இல்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பங்கேற்றிருக்கும் இங்கிலாந்து அணி, ஒரு விஷயம் செய்யலாம். அதாவது, இந்த முறை ‘ஃபிஃபா’ கோப்பையை இங்கிலாந்து வென்றால், அணி வீரர்கள் அதை வால்டருக்குச் சமர்ப்பிக்கலாம். ஏனென்றால், விருது கொடுப்பதைவிட, வால்டருக்குச் செய்யும் மிகச் சிறந்த மரியாதை அதுவே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x