Last Updated : 18 Sep, 2024 04:03 PM

 

Published : 18 Sep 2024 04:03 PM
Last Updated : 18 Sep 2024 04:03 PM

‘நக ஓவியம்’ அழகானதே..! - ஆர்வம் காட்டும் இளம்பெண்கள்

கிளிட்டர் நக ஓவியம்.

இல்ல நிகழ்ச்சிகள் என்றாலும் சரி, பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வது என்றாலும் சரி, பெண்கள் முதலில் தேடுவது அழகு நிலையங்களைத்தான். அழகை மேம்படுத்திக் கொள்வதில் பெண்களுக்கு எப்போதுமே அலாதி பிரியம்தான். அந்த வகையில், முகம், தலைமுடி ஆகியவற்றை அழகுபடுத்தி வந்த பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது, நக ஓவியம்.

தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நக ஓவிய பார்லர்கள் அதிகரித்து வருகின்றன. இளம்பெண்கள் மட்டுமின்றி, இல்லத்தரசிகள், வயது மூத்த பெண்கள் என அனைவரிடமும் நக ஓவியம் பிரபலமடைந்து வருகிறது. முன்பெல்லாம் மருதாணி இட்டு நகங்களை சிவப்பு நிறமாக்கி மட்டும் அழகு பார்த்தனர். தற்போது நகங்களை வைத்து கலைக்கூடமே நடத்தி வருகின்றனர் என்றால் அது மிகையல்ல.

இதுகுறித்து கோவை பி.என்.பாளையத்தை சேர்ந்த நக ஓவியக் கலைஞர் பிரியங்கா கூறியதாவது: நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி, எப்போதும் சுத்தமாகவும், அழகாகவும் நகங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பெண்கள் தனிகவனம் செலுத்தி வருகின்றனர். நகங்களுக்கு மருதாணி, நெயில்பாலிஷ் வைத்து அழகுபடுத்திக் கொள்வதில் பெண்களுக்கு அலாதி பிரியம்தான்.

தற்போது, நகத்தில் ஓவியம் வரைவது, நகக்கிரீடங்களை வண்ணம் தீட்டி அழகுபடுத்திக் கொள்ள பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கைவிரல்களிலும், கை மத்தியிலும் மெகந்தியால் ஓவியம் வரைவதைப்போல, நகங்களிலும் ஓவியம் வரையலாம், வண்ணங்கள் தீ்ட்டலாம்.

நெயில் ஆர்ட்: நகங்களின் நுனிப்பகுதியில் பலவிதமான வண்ணங்களில் பல டிசைன்களில் நெயில் ஆர்ட் செய்யலாம். நெயில் பாலிஷ் போடுவதற்கு முன்பு நகங்களின் ஓரங்களை வெட்டி உராய்வு சாதனங்களைப்பயன்படுத்தி அழகு படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் ‘பேஸ்ட் கோட்’ எனப்படும் நிறமில்லாத நெயில்பாலிஷை நகங்களில் பூசி அதன் மேல் கான்ட்ராஸ்ட் கலரில் நெயில் பாலிஷ் போடலாம்.

புள்ளிகள், கோடுகள் வைத்தே எளிமையான டிசைன்களை வரையலாம். பார்ப்பதற்கு அழகாகவும் எளிமையானதாகவும் இருக்கும். நெயில் ஆர்ட்டுக்கென தனி டிசைன்களும் குறைந்த விலையில் கடைகளில் கிடைக்கின்றன. நெயில் ஆர்ட்டுக்கான கிட் அழகு சாதன கடைகளில் வாங்கி அழகான டிசைன் களை வடிவமைக்கலாம்.

பி.காம்.வரை படித்த நான், ‘நெயில் டெக்னீசியன்’ என்ற இக்கலையை 5 நாட்களில் கற்றுக் கொண்டேன். இளம்பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் நான் இக்கலையை கற்றுத்தருகிறேன். கிளிட்டர் எனப்படும் ஜிகினா ஆர்ட்‘2டி’, ‘3டி’ நெயில் ஆர்ட், போட்டோ ஆர்ட், ஸ்டோன்ஸ் ஆர்ட், புளோரல் ஆர்ட் என50-க்கும் மேற்பட்ட நக ஓவியங்கள் உள்ளன.

‘2டி’, ‘3டி’ நெயில் ஆர்ட்: ஃபிரெஞ்ச் மெனிக்குயர் அல்லது நெயில் ஆர்ட் செய்யப்பட்ட நகங்கள் மீது அக்ரிலிக் பசையைக் கொண்டு மலர்கள், கொடி போன்ற டிசைன்களில் அலங்காரம் செய்து கொள்வதுதான் ‘3டி’ ‘2டி’ ஸ்டைல் நெயில் ஆர்ட். குட்டிப் பூக்கள், இலைகள் போன்றவற்றை நகங்களின் மீது அழகாக ஒட்டிக் கொள்ளலாம். மிளிரும் கற்கள், பல வண்ண மணிகள், சில்வர் டஸ்ட் போன்றவற்றை பயன்படுத்தி நகங்களின் அழகுகூடி ஆடம்பரமான தோற்றம் கிடைக்கும். |இந்த வகை ஓவியங்களை இளம்பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.

போட்டோ ஆர்ட்: இது பெரும்பாலும் புதுமணத் தம்பதிகள் விரும்பும் ஓவியமாகும். தன் மனம் கவர்ந்தவர்களின் புகைப்படங்களையோ, தம்பதியின் புகைப்படத்தையோ நகத்தின் அளவுக்கேற்ப சிறிதாக்கி, அதை நகத்தில் ஒட்டிவிடுவோம். இவ்வகை போட்டோ ஆர்ட் பெரும்பாலானவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்டிக்கர் டிசைன் நெயில் ஆர்ட்டுகள் அவசரத்துக்கு பயன்படுத்தப்படுவது. இரண்டே நிமிடங்களில் நகங்களை அழகாக்கிக் கொள்ளலாம். பல வடிவங்கள் கொண்ட நெயில் ஆர்ட் ஸ்டிக்கர்களை கொண்டு, உடனுக்குடன் நகங்களை மெருகேற்றிக் கொள்ளலாம்.

புளோரல் நக ஓவியம்

செயற்கை நகங்கள்: பெண்களில் சிலருக்கு நகங்கள் போதிய வலிமை இல்லாமல் இருக்கும். குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும் அது தானாகவே உடைந்துவிடும். நகங்களை அழகாக வளர்க்க முடியவில்லை என ஆதங்கப்படுவார்கள். அவர்களின் கவலையை விரட்டவே, செயற்கை நகங்கள் வந்துள்ளன. பாதாம் ஷேப், ஸ்கொயர் மற்றும் ரெளண்ட் ஷேப், ‘காபின்’ ஷேப் என 10-க்கும் மேற்பட்ட ஸ்டைல்களில் செயற்கை நகங்கள் கிடைக்கின்றன.

செயற்கை நகங்களை முறையாக பராமரித்தால், ஒரு மாதம் வரை உடையாமல் பார்த்துக் கொள்ளலாம். செயற்கை நகங்கள் ஆன்லைனிலேயே தற்போது அதிகளவில் விற்கப்படுகின்றன. மேற்காணும் நக ஓவியங்களில் ஒருசில ஓவியங்களை மட்டுமே உண்மையான நகங்களில் செய்ய முடியும். மற்ற ஓவியங்களை செயற்கை நகங்களை பொருத்தி, அதில் மட்டுமே வரைய முடியும்.

ஃபிரெஞ்சு நக ஓவியம்.

நகங்களை பராமரியுங்கள்: பெரும்பாலான பெண்கள் நகம் பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. நகத்துக்கு தினமும் இரவு நேரத்தில் ஆலிவ் ஆயில் பூசலாம். மேலும், நன்னீரில் உப்பு போட்டு, கொதிக்க வைத்து இளம்சூட்டில் சிறிது நேரம் கை நகங்களை ஊறவைத்தால், கிருமிகள் அழியும். நகம் கூடுதல் வலிமை பெறும். முகம், தலைமுடி போன்றவை அழகாக இருக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள், நகத்தையும் அழகாக பேணிக்காக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x