Last Updated : 12 Sep, 2024 06:20 PM

 

Published : 12 Sep 2024 06:20 PM
Last Updated : 12 Sep 2024 06:20 PM

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க கேரள ஹோட்டல்களின் மெனுவில் ‘ஓணம் சத்ய’ விருந்து!

படங்கள்:என்.கணேஷ்ராஜ்

குமுளி: கேரள சுற்றுலாத் தலங்களில் உள்ள ஹோட்டல்களில் ஓணம் பண்டிகைக்கான சிறப்பு விருந்து விற்பனை களைகட்டியுள்ளது.

கேரளாவில் ஓணம் பண்டிகை கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்.15ம் தேதி உச்ச நிகழ்வாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளால் இந்த ஆண்டு அரசு சார்ந்த ஓணம் கொண்டாட்டங்கள் கேரளாவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் சுற்றுலா சார்ந்த அமைப்புகள் சார்பில் எளிமையான முறையில் ஆங்காங்கே இவ்விழா நடைபெற்று வருகிறது.

வரும் 15ம் தேதி ஓணம் பண்டிகைக்கான விடுமுறை என்பதால் கேரள மக்கள் பலரும் சொந்த ஊர் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இவர்களைக் கவர ‘ஓணம் சத்ய’ எனப்படும் சிறப்பு விருந்தை பல ஹோட்டல்களும் தங்களது உணவுப் பட்டியலில் சேர்ந்துள்ளன. ரூ.280 முதல் ரூ.550 வரை இதற்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விலைக்கேற்ப புட்டுக் கிழங்கு, தோரன், பயறு, எரிசேரி, பரங்கிக் காய் குழம்பு, அப்பளம், செரிமானம் கொடுக்கும் இஞ்சிப் புளி, அடை, அவியல், அடை பிரதமன், மூன்று வகையான பாயாசம், சர்க்கரைப் புரட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட உணவுகள் இதில் இடம் பெற்றுள்ளன.

ஹோட்டல் மேலாளர் ஜெயராஜ்

இதுகுறித்து தேக்கடியில் உள்ள ஹோட்டல் மேலாளர் ஜெயராஜ் கூறுகையில்,"பொதுவாக ஓணம் பண்டிகைக்கு இங்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இருக்கும். இந்த ஆண்டு வயநாடு நிலச்சரிவினால் ஆர்ப்பாட்ட நிகழ்வு எதுவும் இல்லை. இருப்பினும் சுற்றுலா வருபவர்களுக்காக ‘ஓணம் சத்ய’ எனப்படும் பண்டிகை விருந்து இங்குள்ள அனைத்து ஹோட்டல்களிலும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது இங்கு வரும் வெளியூர் பயணிகளுக்கும் பண்டிகை மகிழ்வை ஏற்படுத்த இந்த சிறப்பு உணவு தயாரிக்கப்படுகிறது" என்று ஜெயராஜ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x