Last Updated : 02 Sep, 2024 04:44 PM

 

Published : 02 Sep 2024 04:44 PM
Last Updated : 02 Sep 2024 04:44 PM

வன உரிமைச் சட்டத்தால் கல்வராயன்மலையில் தொழில் தொடங்குவதில் சிக்கல்

கல்வராயன்மலையின் அழகிய தோற்றம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையின் மொத்த நிலப்பரப்பு மொத்தம் 1,095 ச.கி.மீட்டர். இதில், 78,000 ஹெக்டர் நிலப்பரப்பில் 45,508 ஹெக்டர் வனத்துறைக்கு சொந்தமானதாக உள்ளது. 197 ஹெக்டேர் வறண்ட நிலமாகவும், 1,103 ஹெக்டேர் வறண்ட பயன்பாடற்ற நிலமாகவும், 916 ஹெக்டேர் தேவையற்ற நிலமாகவும் உள்ளது. இதுபோக மீதி உள்ள நிலங்கள் மலை வாழ் மக்களின் வசிப்பிடங்களாகவும், அவர்கள் விவசாயம் செய்யும் நிலங்களாகவும் உள்ளது.

நாடு சுதந்திரமடைந்த பிறகும் கூட, ஜாகீர்தார்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த கல்வராயன்மலை 1976-ல் தான் இந்தியாவோடு இணைந்தது. அதன் பின் நில அளவையர்கள் நியமிக்கப்பட்டு, நில வகைகள் பிரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள மற்ற மலைகளைப் போன்று, அரசு புறம்போக்கு நிலங்கள் மலைவாழ் மக்களுக்கு ஒப்படைப்பு (கண்டிஷன் பட்டா) அளிக்கப்பட்டன. அதன்படி, இதை மற்றவர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது. ஆனால், அவர்களது வாரிசுக்கு வழங்கிக் கொள்ளலாம்.

இந்நிலையில் 1979 -ல் வருவாய் துறை மூலம் நில நிர்வாக ஆணையர் வழியாக ஒரு அரசாணை வெளியீடு செய்யப்பட்டது. அந்த ஆணையில் கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள பல கிராமங்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள பல மலைவாழ் மக்கள் உள்ள கிராமங்கள் பட்டியலிடப்பட்டு, ஒப்படை நிலங்களை மலை வாழ் மக்கள் அல்லாதோருக்கு பட்டா மாறுதல் செய்யக் கூடாது என ஆணையிடப்பட்டது.

இதன்மூலம் வழிமுறையாக வரும் பரம்பரை நிலங்களை அதாவது ராயத்துவாரி நஞ்சை மற்றும் ராயத்துவாரி புஞ்சை உள்ளிட்ட பல்வேறு வகைப்பாட்டு நிலங்களை விற்பதற்கும், பட்டா மாறுதல் செய்வதற்கும் எந்த ஒரு தடையும் இல்லை. இப்படியாக பல லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலங்கள் உள்ளதாகக் கூறும் கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வராயன்மலை வாழ்மக்கள், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள பயன்பாடின்றி உள்ள நிலங்களை பட்டா மாறுதல் செய்ய வருவாய்த்துறையினர் மறுப்பதாகக் கூறுகின்றனர்.

கல்வராயன்மலையில் சாலை வசதியின்றி காணப்படும்
கரடுமுரடான பாதை.

அப்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த வருவாய்த் துறையினர் இந்த ஆணையை சரிவர புரிந்து கொள்ளாமல் மலைவாழ் மக்கள் சம்பந்தப்பட்ட எந்த நிலங்களையும் (ரயத்துவாரி நிலங்களையும் சேர்த்து) மற்றவர்கள் விற்கவோ வாங்கவோ கூடாது என்றும், அவ்வாறு வாங்கினால் அது செல்லாது என்றும், பட்டா மாறுதல் செய்ய முடியாது என்றும் ஒரு நிலைப்பாட்டினை மேற்கொண்டதால், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய்த் துறையினரும் அதே நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர். இதனாலேயே கல்வராயன்பகுதியில் முதலீடு செய்து தொழில்கள் தொடங்கி முன்னேற்றமடைய யாரும் முன் வருவதில்லை.

அருள்

இந்த நிலை கடந்த 40 ஆண்டுகளாக நீடித்து வருவதாகவும் கூறும் சேராப்பட்டு கிராமத்தைச சேர்ந்த அருள், “இதே கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்த கருமாந்துறை கிராமத்தில் பல தரப்பட்ட மக்கள் நிலங்களை வாங்கி பட்டா மாறுதல் செய்து கொண்டு பல்வேறு வகையான தொழில்கள் கடைகளில் முதலீடு செய்து அந்த வட்டாரத்தை மிகவும் முன்னேறிய ஒரு நகரமாக மாற்றியுள்ளனர். ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இதே கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள வெள்ளிமலை, இந்நாடு, சேராப்பட்டு,கிளாக் காடு, தொரடிப்பட்டு போன்ற பல மலைவாழ் கிராமங்கள் இன்றும் எந்த மாற்றமும் முன்னேற்றமும் இன்றி உள்ளது.

இப்படி தவறான ஒரு நடைமுறையை அரசு அதிகாரிகள் தொடர்ந்து காலம் காலமாக பின்பற்றி வருவதால் இந்தப் பகுதி வளர்ச்சி அடையாமல் கல்வராயன் மலையில் உள்ள மக்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, செம்மரக்கூலிகளாக வெளி மாநிலங்களுக்கு ஊர்களுக்கு சென்று பிழைப்பு நடத்துவது என்று மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்” என்று தெரிவிக்கிறார்.

தொரடிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு இதுபற்றி கூறும்போது, “இந்த விஷயத்தில் தமிழக அரசு நேரடியாக தலையிட்டு விசாரணை நடத்தி, நடைமுறை சிக்கல்களை நீக்கினால்தான், பிற மலை கிராமங்களில் தொழில் வளர்ச்சி முன்னேறியது போல் கல்வராயன் மலையிலும் முன்னேற்றம் அடைய செய்யமுடியும்” என்கிறார்.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டபழங்குடியினர் திட்ட அலுவலர் குமரனிடம் கேட்டபோது, “வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கல்வராயன்மலையில் பெரும்பகுதி காப்புக் காடுகள். இவற்றை பட்டா மாறுதல் செய்ய வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. மற்ற மாவட்டங்களில் உள்ளதைப் போன்று, இங்கு மாற்றம் செய்ய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இருப்பினும் தொழில் தொடங்க முன்வருவோர், திட்டத் தயாரிப்போடு வெள்ளிமலையில் உள்ள எங்கள் அலுவலகத்தை அணுகினால் ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவிக்கிறார்.

மேற்கண்ட சீரமைப்பு நடவடிக்கைகள் காலத்தின் கட்டாயத் தேவை. இதை கள்ளக்குறிச்சி வருவாய்த் துறையினர் உணர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் கல்வராயன்மலைப் பகுதி வளர்ச்சியை நோக்கிச் செல்லும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x