Published : 27 Aug 2024 08:35 PM
Last Updated : 27 Aug 2024 08:35 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்திக்காக ரசாயன கலப்பின்றி விதவிதமான விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. ஒரு சிலையின் விலை ரூ.50 ஆயிரம் வரை இருந்த போதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலான எண்ணிக்கையில் விநாயகர் சிலைகள் விற்பனையாகி வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா செப்.7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வீட்டில் வைத்து வணங்குவதற்கான சிறிய சிலைகள் தயாராவதுபோல் வீதிகளில் வைத்து வணங்க பெரிய சிலைகளும் தயாராகி வருகின்றன. புதுச்சேரியில் கூனிமுக்கு கிராமத்தில் நான்கு தலைமுறைகளாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள பல குடும்பங்கள் பாரம்பரியமாக விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதுபற்றி அங்குள்ள விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் கூறுகையில், "ரசாயனங்களின்றி மரவள்ளிக் கிழங்கு மாவு மற்றும் காகிதக் கூழ் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த விநாயகர் சிலைகள் ஒரு அடி முதல் 13 அடி உயரம் வரை தயாரிக்கப்படுகிறன.கடந்த 3 மாதங்களாக இந்த சிலை தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் 5 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறன.
இந்த ஆண்டு புதிய வரவாக சிவன் விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், சிங்க விநாயகர், பால விநாயகர் ஆகியவை வந்துள்ளன. வழக்கமான திருமூர்த்தி விநாயகர், பஞ்சமூர்த்தி விநாயகர், ராஜ விநாயகர் என 30-க்கும் மேற்பட்ட வகையில் விநாயகர் சிலைகளும் உள்ளது. இந்தச் சிலைகளுக்கு ரசாயன கலப்பு இல்லாத வண்ணங்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். வழக்கத்தை விட இந்த ஆண்டு விலைவாசி அதிகரித்துள்ளதால் சிலைகளின் விலையும் சற்று அதிகரித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு தயாரிக்கப்படும் இந்தச் சிலைகள் ஆந்திரம், கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. உள்ளூரிலும் விற்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தைப் போல பொம்மை தயாரிப்புக்கு அரசே இடம் ஒதுக்கி நிரந்தர ஷெட் அமைத்து தர வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கோரிக்கை. அரசு தான் மனது வைக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT