Published : 27 Aug 2024 02:48 PM
Last Updated : 27 Aug 2024 02:48 PM

குன்னூரில் 22 ஆண்டுகளாக தெரு நாய்களுக்கு பசியாற்றும் பெண்!

குன்னூர்: குன்னூரில் 22 ஆண்டுகளாக சாலை ஓரங்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு காலை, மாலை நேரங்களில் உணவு வழங்கி வருகிறார் ஓய்வுப்பெற்ற ராணுவ பெண் பணியாளரான நயனா.

மனிதனின் உற்ற தோழனாக வலம் வருபவை வளர்ப்பு பிராணிகள். இதில், நாய்களுக்கு தனி இடம் உண்டு. இவை காவலிலும் ஈடுபட்டு மனிதனின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க நாய்களை கொண்டாடும் முகத்தான் நேற்று (ஆக.26) சர்வதேச நாய்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 22 ஆண்டுகளாக சாலை ஓரங்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் உணவு வழங்கி வருகிறார் ஓய்வுப்பெற்ற ராணுவ பெண் பணியாளரான நயனா.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ மையம் பேரக்ஸ் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் நயனா (60). இவர் எம்ஆர்சி ராணுவத்தில் ஸ்டெனோகிராபராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாய்கள் மீது அலாதி பிரியம் கொண்ட இவர், சாலை ஓரங்களில் சுற்றித் திரியும் சுமார் 200-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் உணவு வழங்கி வருகிறார்.

குறிப்பாக, இறைச்சி, பிஸ்கட். பால் என பல்வேறு வகையான உணவுகளை ஆங்காங்கே இருக்கும் நாய்களை தேடிச் சென்று இவர் வழங்கி வருகிறார். அதனால் இவர் உணவுடன் வரும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நாய்கள் ஆர்வத்துடன் துள்ளிக் குதித்து ஓடி வந்து இவரைச் சூழ்ந்து கொள்கின்றன.

ராணுவப் பணியிலிருந்து ஓய்வுப் பெற்றுள்ள நயனா, இன்னும் இரண்டு மாதத்தில் சொந்த ஊரான கேரளாவுக்குச் செல்லவிருக்கிறார். அப்படிச் சென்றால் இந்த நாய்களுக்கு இனிமேல் யார் உணவளிப்பார் என்பதே இப்போது இவரது கவலை. எனினும், கடந்த 22 ஆண்டுகளாக தனது ஊதியத்தின் ஒரு பகுதியை நாய்களுக்காக செலவு செய்து வந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது என்று நயனா கூறினார்.

ஆக.26 - சர்வதேச நாய்கள் தினம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x