Published : 27 Aug 2024 04:22 AM
Last Updated : 27 Aug 2024 04:22 AM

7,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங்: 102 வயதில் இங்கிலாந்து மூதாட்டி சாதனை

லண்டன்: பிரிட்டனில் பிறந்தவர் மான்டி பெய்லி. இவருக்கு வயது 102. ஆக.25-ம் தேதியான தனதுபிறந்தநாளில் 7,000 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து சாதனை படைக்க வேண்டும் என்பது இவரது ஆசை. இதன் மூலம் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்டவும் ஏற்பாடு செய்திருந்தார்.

இதையடுத்து, கிழக்கு அங்லியாவில் உள்ள பெக்கிள் ஏர்பீல்டிலிருந்து 7,000 அடி உயரத்தில் பறந்து ஸ்கை டைவிங் செய்தார் பெய்லி. 30,000 பவுண்ட் நிதி திரட்டஇலக்கு நிர்ணயித்து இதுவரை 10,000 பவுண்ட் திரட்டியுள்ளார்.

இதுகுறித்து பெய்லி கூறுகையில், “7,000 அடி உயரத்தில் பறந்தபோது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்பட்டது. நான் என் கண்களை மிகவும் இறுக்கமாக மூடிக் கொண்டேன். ஒரு சிலருக்கு80-90 வயதில் மூட்டு வலி வந்து அவர்களது வாழ்க்கையை முடக்கிவிடுகிறது. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஆரோக்கியமாகவும், நன்றாகவும் இருக்கிறேன். அதனால்தான் இதுபோன்ற சாதனைகளை நிகழ்த்த முடிகிறது’’ என்றார்.

பெய்லி ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் ஏதேனும் ஒரு சாகசத்தை தேர்வு செய்து அதனை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறார். தனது 100-வது பிறந்தநாளின்போது பெராரி காரை மணிக்கு 130 மைல் வேகத்தில் ஓட்டி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெய்லியின் துணிச்சலை இளவரசர் வில்லியமும் மனப்பூர்வமாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து இளவரசர் கூறுகையில், “102 வது பிறந்த நாளை முன்னிட்டு பாராசூட் மூலம் குதித்து நீங்கள் சாகசம் செய்யப்பேவதாக நானும், எனது மனைவி கேத்தரினும் கேள்விப்பட்டோம். பெராரி காரை 100 மைல் வேகத்தில் ஓட்டிய உங்கள் சாதனை வரலாற்றை கருத்தில் கொண்டால் இது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை" என்று பாராட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x