Last Updated : 21 Aug, 2024 07:18 PM

 

Published : 21 Aug 2024 07:18 PM
Last Updated : 21 Aug 2024 07:18 PM

91-வது ஆண்டில் அடி எடுத்து வைத்தது தமிழகத்தின் முக்கிய பாசன ஆதாரமான மேட்டூர் அணை! 

மேட்டூர் அணை நீர்மட்டம் 119.76 அடியாக உள்ள நிலையில், கடல்போல் காட்சியளிக்கிறது.

மேட்டூர்: தமிழகத்தின் முக்கியமான பாசன ஆதாரமான மேட்டூர் அணை 90 ஆண்டுகள் நிறைவு செய்து 91-வது ஆண்டில் புதன்கிழமை (ஆக.21) அடி எடுத்து வைத்தது.

கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழகம் வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது. கர்நாடக மாநிலத்தில் குறைந்த அளவு பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. தமிழகத்தின் வழியாக சுமார் 700 கிலோ மீட்டர் தூரம் காவிரி ஆறு செல்கிறது. பருவமழை வரும்போது, காவிரியில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தை தேக்கி வைத்து பயன்படுத்துவதற்கு வழியின்றி, விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு அன்றைய ஆங்கிலேய அரசு நீர்தேக்கத்திற்காக மேட்டூரில் அணை கட்டுவதற்கு கடந்த 1925 ஆம் ஆண்டு முடிவு செய்து, கட்டுமான பணிகளைத் தொடங்கியது.

வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு இன்ஜினியராக கர்னல் எல்லீஸ் தலைமையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அணை கட்டத் தொடங்கினர். கட்டுமான பணி சுமார் 9 ஆண்டுகள் நடைபெற்றது. பின்னர், 1934 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி மேட்டூர் அணை கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. மேட்டூர் அணை கட்டுவதற்கான செலவு தொகை ரூ. 4.80 கோடி. தொடர்ந்து 1934-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி அப்போதைய ஆங்கில ஆட்சியில் சென்னை கவர்னராக இருந்த ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி அணையைத் திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்பட 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பயன்படுத்தப்படுகிறது. மேட்டூர் அணை நீளம் 5,300 அடி, அணையின் நீர்த்தேக்க பகுதி 59.25 சதுர மைல்கள் கொண்டது. அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் உச்சபட்சமாக 120 அடி வரை நீர் சேமித்து வைக்கலாம்.

பாசனத்துக்குத் தண்ணீரை திறந்து விடுவதற்கு அணையின் நீர்மட்ட அளவை பொறுத்து மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகு மற்றும் மின் நிலையங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்றுவதற்கு, 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதகுகள் 20 அடி உயரமும் 60 அடி அகலமும் கொண்டுள்ளன. உபரி நீர் திறக்கும் 16 கண் மதகிற்கு மேட்டூர் அணை கட்டுவதற்கு கண்காணிப்பு இன்ஜினியராக கர்னல் எல்லீஸ் கால்வாய் என பெயரிடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934 ஆம் ஆண்டு தொடங்கி உரிய தேதியான ஜூன் 12 அன்று பாசத்துக்கு 19 முறை அணை திறக்கப்பட்டுள்ளது. உரிய தேதிக்கு முன்னதாக 11 முறை திறக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக 61 ஆண்டுகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையை சென்றடையும். தண்ணீர் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய மூன்று ஆறுகள், 36 கிளை ஆறுகள் மற்றும் 26 ஆயிரம் கால்வாய்கள் வாயிலாக டெல்டா மாவட்டங்களை சென்றடைகின்றன.

மேட்டூர் அணை 1934-ம் ஆண்டு கட்டப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு ஆகஸ்ட் 21-ம் தேதியன்று, பாசனத்திற்காக முதன்முதலாக நீர் திறந்து விடப்பட்டதன், 90 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. கடுமையான வெள்ளத்தை தாங்கியும், விவசாயிகளின் உயிர்நாடியாகவும் விளங்கும் மேட்டூர் அணை தனது 91-வது ஆண்டில் புதன்கிழமை அடி எடுத்து வைத்துள்ளது.

நீர்வரத்து சரிவு: மேட்டூர் அணைக்கு செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 12,500 கன அடியாக இருந்த நீர்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 8,563 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 12,000 கன அடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து 119.76 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியில் இருந்து 93.08 டிஎம்சியாகவும் சரிந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x