Last Updated : 21 Aug, 2024 06:12 PM

 

Published : 21 Aug 2024 06:12 PM
Last Updated : 21 Aug 2024 06:12 PM

சென்னையில் ‘மினி வட மாநிலம்’ சவுகார்பேட்டை! - ஒரு ரவுண்டப் | Chennai Day

ஹோலி கொண்டாட்டத்தின்போது சவுகார்பேட்டை | கோப்புப் படம்: பிரவீண்

சென்னை'னா ஒரு பெரிய நம்பிக்கை... சென்னைக்குப் போயிட்டா போதும், அந்த ஊர் நம்மல கைவிடாது... எப்படியும் கரை சேர்த்திடும்ங்கிற `அசுர' நம்பிக்கை. இந்த நம்பிக்கைய பெட்டிப் படுக்கையோடு சேர்த்தே சுமந்துக்கிட்டு, நாள்தோறும் கோயம்பேடுலயும், எக்மோர்லயும், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்லேயும் வந்து இறங்குறவங்கள அரவணைச்சு, வளர வெச்சு அழகு பாக்குறதுதான் சென்னையோட சிறப்பே. ‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை’ன்னு சும்மாவா சொல்லிருக்காங்க!

மனசு பூரா நம்பிக்கையும், உழைக்குறதுக்கு தெம்பும் இருந்தா போதும் இந்தச் சென்னை, தன்னை நம்பி வர்றவங்கள மேல தூக்கி விட்டுடும். ராஜபாளையம் தொடங்கி ராஜஸ்தான் வரைக்கும்... பல ஊர், பல மாநில மக்களுக்கு சென்னை ஓர் உன்னதமான புகலிடம்ன்னு சொன்னா நிச்சயம் அது மிகையாகாது. பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல பண்பாடுகள் சங்கமிக்குற இந்தச் சிங்காரச் சென்னை... சொந்த பந்தங்கள விட்டுட்டு பிழைப்பு தேடி வர்றவங்களுக்கு இன்னொரு `தாய்மடி'.

சென்னையில நீங்க எதிர்ல சந்திக்கிற மனுஷங்கள்ல, ரேண்டமா ஒரு 50 பேர்கிட்ட `நீங்க எந்த ஊரு'னு கேட்டிங்கன்னா... 50-ல, 35 பேர் நிச்சயமா, `நாங்க சென்னை கிடையாது... திருச்சி, ஈரோடு, நெல்லை, மதுரை...'னு சொல்வாங்க. இவங்க ஒரு ரகம்னா இன்னொரு ரகம் இருக்காங்க. அவங்க தான் வடமாநிலத்தவங்க... சாயல வெச்சு வடமாநில மக்கள்னு நம்ம யூகிச்சாலும், அவங்க பேசுற சென்னைக்கே உரித்தான தமிழ் நடைல, நாமளே குழம்பிப் போயிருவோம். அந்த அளவுக்கு அச்சு பிசுராம நம்மள விடவும் `ழ'-வ அவ்ளோ அழகா உச்சரிப்பாங்க.

நம்ம தமிழ்நாட்டு மாவட்டங்களைத் தாண்டி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பிஹார், ராஜஸ்தான், ஹரியானா'ணு பல மாநில மக்கள், சென்னைய தங்களோட சொந்த ஊராவே நெனச்சு பிழைப்பை நடத்திக்கிட்டு இருக்காங்க. தென் இந்தியர்கள விடவும், வட இந்திய மக்கள்தான் நம்ம ஊர்ல அதிகமா வசிக்கிறாங்க.

இந்த மெட்ராஸ் நகரத்துல ஒரு நாளைக்கு 50 ரூபாவ வச்சு மூணு வேளையையும் கடத்துறவங்களும் இருக்காங்க, ஒரு லட்சத்த ஒரே நாளிலே செலவு பண்றவங்களும் இருக்காங்க. கையில கொஞ்சமும் காசு இல்லாம, வெறுங்கையோட நம்பிக்கையையும் சுமந்துக்கிட்டு இங்க வந்தவங்க... இன்னைக்கு எத்தனை உயரத்துல இருக்காங்க அப்டிங்கிறதுக்கு, சென்னைய பத்தின அனுபவ சாட்சியங்கள் சொல்ல இந்த ஊர்ல ஆயிரம் பேர் இருக்காங்க! பல வலிகளைக் கடந்து வாழ்க்கையில் முன்னேற வழி தேடுறவங்கள, இந்தச் சிங்கார சென்னைக்காரி என்னைக்குமே கைவிட்டது கிடையாது.

தமிழ்நாட்ல திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு போன்ற மாவட்டங்கள்ல வடமாநில மக்கள் அதிகம் பேர் பணி காரணமா வசிச்சாலும்... சென்னைல இந்த மக்களோட பங்கே வேறன்னு தான் சொல்லணும். இங்க இருக்கிற மக்கள்கிட்ட ரேஷன் கார்டும் ஆதார் கார்டும் மட்டும்தான் இல்ல, மத்தபடி `சென்னைதாங்க எங்க பூர்விகம்'னு சொல்லுற அளவுக்கு சென்னையோடு ஒன்றிப் போயிட்டாங்க. அதுலயும் சென்னையில இருக்குற `சவுகார்பேட்டை' தமிழ்நாட்டின் மினி வட மாநிலம்'னு தான் சொல்லணும்.

சென்னையோட மையப் பகுதியில அமைந்திருக்குற சவுகார்பேட்டைக்குள்ள நுழைஞ்சிட்டாலே, ஏதோ வட மாநிலத்துக்குள்ள காலடி எடுத்துவெச்ச மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும். பீடா கடைகள் தொடங்கி மொத்த ஏரியாவுமே வித்தியாசமா இருக்கும். `சென்னை - சவுகார்பேட்டை தான் எங்களுக்கு அட்ரஸ்' என வடமாநிலங்களிலிருந்து சென்னைக்கு வந்து தலைமுறை தலைமுறையாய் இங்கே வசிக்கும் அந்த வட இந்திய மக்கள், `ஊர்ப்பெருமை' பேசுவதெல்லாம் வேற ரகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சரி வாங்க... சென்னையின் மினி வட மாநிலம் - சவுகார்பேட்டையைப் பத்தி இன்னும் விவரமா பார்க்கலாம்!

மினி வட மாநிலம்: `சவுகார்பேட்டை' - சென்னையோட மிக முக்கிய வணிக பகுதிகள்ல இதுவும் ஒண்ணு. தி.நகர், புரசைவாக்கம், பாண்டி பஜார்'னு சென்னை மக்கள் படையெடுக்க கூடிய பகுதிகள்ல இந்த `சவுகார்பேட்டை' - டாப் மோஸ்ட் ஒன். குஜராத்திகள், ராஜஸ்தானிகள், தெலுங்கு மக்கள், மார்வாடிகள் தமிழ் மக்கள்'ன்னு பல மொழிகள் பேசுற இந்திய மக்கள இங்க பார்க்கலாம். தமிழும் இந்தியும் கலந்து அவங்க பேசுற மொழியே நமக்கு வியப்பா இருக்கும். ‘சவுகார்’ என்றால் Money lender என்று அர்த்தமாகுமாம். வணிகத்துக்காக பணப்பரிவர்த்தனை செய்த இந்த மக்கள் வசிக்கிற பகுதிதான் ‘சவுகார்பேட்டை’யா மாறியிருக்கிறதா சொல்லுறாங்க.

அங்க ஒரு வருஷத்துக்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்குனாவே போதும், பல மொழிகள நம்ம கத்துக்கிட்டு பேசலாம்னு சொல்லுவாங்க. சவுகார்பேட்டைன்னு சொன்னாவே ஓல்சேல் கடைகளும், ஜொலிக்கும் உடைகளும், வண்ண வண்ண பைகளும், பேன்ஸி நகைகளும்தான் முதல்ல ஞாபகத்துக்கு வரும். அங்க கிடைக்காத பொருளே இல்லன்னு சொல்லுற அளவுக்கு அந்த இடம் பிரபலமடைஞ்சிருச்சு. அதுமட்டுமா, சாயங்காலத்துலே.... சக்கரை தூக்கலா போட்டுத்தர லஸ்ஸி, வடமாநில சிக்னேச்சர் சாட் ஐட்டமான கச்சோரி, பாணி பூரி, பாவ் பாஜி , மசாலா மோர், பிரெட் பஜ்ஜி'ன்னு லிஸ்ட் பெருசா போகும். சாயங்கால நேரத்துல அந்த ரோடே மணமணக்கும்.

1840 காலகட்டத்துல கிழக்கு இந்திய கம்பெனி இங்க வந்தப்போ வணிகம் செய்யுறதுக்கு, நாணயங்களை தயாரிக்க சவுகார்பேட்டையிலதான் ஃபேக்டரி ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம்தான் இந்த இடத்துக்கு `மின்ட் தெரு’ அப்படிங்கிற பேரும் வந்ததா சொல்றாங்க. குறிப்பா, கலாச்சார மையமாவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதியாவும் இருக்குது சவுகார்பேட்டை - மின்ட் தெரு. அதோட... வட இந்திய இனிப்பு உணவுகள் எல்லாம் கிடைக்கிற இடமாவும் இருக்கு இந்தப் பகுதி. இந்தப் பகுதியில எப்பவுமே மக்கள் கூட்டம் அதிகமாவே இருக்கும். எப்போதுமே பைக், சைக்கிள், ரிக்‌ஷான்னு வாகன நெரிசலாத்தான் இருக்கும்.

பல மொழிகள் பேசுற மக்கள், கூட்ட நெரிசலான குறுகலான ரோடுகள், சுண்டி இழுக்கும் சேட் ஐட்டங்கள்'ன்னு குட்டி வட மாநிலமாவே நம்ம பீல் பண்ணுவோம். ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயிலும் இங்கதான் இருக்கு. மின்ட் தெருவுல இருக்கிற இந்தக் கோயில் 1680-ஆண்டுகள்ல பல்லவ மன்னன் மல்லிகார்ஜுனனால் கட்டப்பட்ட மிக பழமையான சிவன் கோயில்கள்ல ஒண்ணு. அதுக்கப்பறமா அந்த இடம் அரசாங்க அச்சகமாக மாற்றப்பட்டுச்சு.

இந்து போன்ற பிரபல பத்திரிகைகள் கூட அச்சடிக்கப்பட்டுள்ளது. சவுகார்பேட்டையில் 1960களில், தெலுங்கு பேசுற செட்டியார் சமூகத்த சார்ந்த அதிகப்படியான மக்கள் வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இப்போது சவுகார்பேட்டையில் ஜெயின்கள், மார்வாடிகள், ராஜபுத்திரர்கள், புரோகிதர்கள் மற்றும் அகர்வால் சமூகத்தினர்தான் பரவலாக இருக்கிறதாகவும் சொல்லப்படுகிறது. மின்ட் தெருவில் வருடந்தோறும் ஹோலி பண்டிகை வட மாநில மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சவுகார்பேட்டையில் இருக்கிற ஒவ்வொரு தெருவுமே ஒரு பொக்கிஷம் மாதிரிதான். அங்க இருக்கிற ஒவ்வொரு தெருவும் ஒவ்வொன்னுக்கு ஃபேமஸ். தேவராஜ் முதலி தெரு பல வண்ண கண்ணாடிகளுக்கு ஃபேமஸ் . கிஃப்ட் பொருள்களுக்கு காசி செட்டி (kasi chetty) தெரு ஃபேமஸ். கோவிந்தப்ப நாய்க்கன் தெரு எலக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கு ஃபேமஸ் , சல்வார் வாங்க மின்ட் தெரு ஃபேமஸ். பக்கத்து தெருவான குடோன் தெரு ஜவுளிகளுக்கு ஃபேமஸ். அண்ணா பிள்ளைதெரு மளிகை பொருள்களுக்கு ஃபேமஸ். அதுமட்டுமல்லாம மூலை, முடுக்கெல்லாம் வித விதமா சுடிதார், சேலைகள், கிஃப்ட் பொருள்கள்னு ஏதாச்சும் வித்துட்டுதான் இருப்பாங்க.

சவுகார்பேட்டையில இருக்கிற நோவல்டி டீ ஹவுஸ்-ங்கற கடை (Novelty Tea House) 1958-ஆம் ஆண்டுல இருந்து இருக்குது. அப்றம் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து சவுகார்பேட்டையோட அடையாளமாவே மாறிடுச்சு. இப்பவுமே அந்த ரெஸ்டார்ண்ட்லே கூட்டத்துக்கு பஞ்சமே இல்லன்னுதான் சொல்லுறாங்க. இந்த ஆண்டோட தொடக்கத்துல தான், ‘சவுகார்பேட்டை ஃபுட் கோர்ட்’னு ஒரு கடைய கொஞ்சம் பிரமாண்டமா ஆரம்பிச்சாங்க. அது பரபரப்பான மின்ட் தெருவோட எண்டுல அமஞ்சிருக்கு. இப்ப அந்த ஸ்பாட் நல்லாவே பாப்புலரும் ஆயிடுச்சு.

1958-ல ஸ்வீட்ஸ் கடையா ஆரம்பிச்ச காக்கடா ராமபிரசாத் (Kakada Ramprasad), இப்ப வரைக்கும் மக்கள் மனசுல நீங்காத இடம் புடிச்சிருக்கு. அந்த கடையில விக்கிற கச்சோரி, ஜிலேபி, லஸ்ஸி, சாட்ஸ், சமோசா, பாதாம் பாலே வாங்குறதுக்கு சுமார் 100 பேராச்சும் லைனில நிப்பாங்க. ஸ்ரீ சந்திரபிரபு மகாராஜ் ஜூனா ஜெயின் (Sri Chandraprabhu Maharaj Juna Jain Temple) கோயிலும் சவுகார்பேட்டையில் இருக்கிற பழமையான ஜெயின் கோயில்ல ஒண்ணு.

அதோட, மின்ட் தெருவுல இருக்கிற ஸ்ரீ சனாதன தர்மா மேல்நிலைப் பள்ளி 1919 நிறுவப்பட்டிருக்கு. அது பழமையான மற்றும் பிரபலமான பள்ளில ஒண்ணுன்னு சொல்லப்படுது. சவுகார்பேட்டையில இருக்கிற ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் மந்திர், 150 ஆண்டுகள் பழமையான ஜெயின் கோயில்ல ஒண்ணு. இத்தன பழமையான தொன்மைவாய்ந்த கோயில்களும், கடைகளும் சவுகார்பேட்டையில் இருக்கு.

தொன்மையான வரலாற்று கோயில்கள், வித விதமான உணவுகள் உழைக்கும் மக்கள்’னு சென்னையோட வரலாற்றுல நீக்கமுடியாத தடம் பதிச்சிருக்கிற ஒரு தெருதான் சவுகார்பேட்டையில இருக்கிற மின்ட் ஸ்ட்ரீட் -ன்னு சொல்லப்படுற தங்கச்சாலைத் தெரு. ஒரு நாள் டைம் கிடச்சா அங்க போயி விசிட் பண்ணுங்க.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x