Published : 15 Aug 2024 06:34 PM
Last Updated : 15 Aug 2024 06:34 PM
தஞ்சாவூர்: 7 மாவட்டங்களில் 211 ஏரி, குளங்களை தூர்வாரிய விவசாயிகள் குழுவுக்கு சுதந்திர தின விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்து, ரூ.1 லட்சத்துக்கான நிதி உதவியும் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி பகுதியில், கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலின் போது, மின் கம்பங்கள் சாய்ந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்துடன் ஏரி,குளங்கள் முறையாக தூர்வாரததால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பை சந்தித்து. அப்போது, நீரின் தேவையை உணர்ந்த பேராவூரணி பகுதியை சேர்ந்த இளைஞர்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து, கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைஃபா) அமைப்பை, கடந்த 2019-ம் ஆண்டு துவங்கினர்.
முதற்கட்டமாக, பலரிடம் நிதி திரட்டி, சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட, பேராவூரணி பெரிய ஏரியை தூர்வாரி, குறுங்காடுகள் அமைத்தனர். இதனால் அந்தாண்டு பெய்த மழையால் ஏரியில் தண்ணீர் தேங்கி, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. இதையடுத்து, கைஃபா அமைப்பினர், பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். இதுவரை 211 ஏரி, குளங்களை தூர்வாரி சீரமைத்துள்ளனர். இந்த அமைப்பில் சுமார் 450 உறுப்பினர்களும், 75 வாழ்நாள் உறுப்பினர்களும் உள்ளனர்.
இவர்களின் சேவையை பாராட்டி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு துறையில் முன்மாதிரியான பங்களிப்பான பசுமை முதன்மையாளர் விருதை அறிவித்தது. இந்த விருதினை இன்று (ஆக.15) நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் பசுமை முதன்மையாளர் விருதுக்கான சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசசோலையை வழங்கினர்.இந்த விருதினை கைஃபா அமைப்பின் தலைவர் வி.கார்த்திக் வேலுச்சாமி, செயலாளர் பிரபாகரன், நிறுவனர் நவீன் ஆனந்த், பொருளாளர் தங்க.கண்ணன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
இதுகுறித்து கார்த்திக்வேலுசாமி கூறியதாவது: “பேராவூரணி பெரிய ஏரியை பலரிடம் நிதி திரட்டி வெற்றிகரமாக தூர்வாரி முடித்தோம். அந்த ஊக்கம் எங்களின் பணியை விரிவுப்படுத்தியது. எங்களின் பணியை பார்த்து ‘மில்கி மிஸ்ட்’ நிறுவனர் ஹிட்டாச்சி, பொக்லைன் இயந்திரங்களை வாங்கி கொடுத்தார்.எங்களது தூர்வாரும் பணியை நீதிபதிகள், அரசு அதிகாரிகள் என பலரும் பாராட்டி வருகின்றனர். தற்போது பசுமை முதன்மையாளர் விருது கிடைத்து இருப்பது மகிழச்சியளிக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில், இந்த ஐந்து ஆண்டுகளில் 211 நீர்நிலைகளை தூர்வாரியுள்ளோம்.
முதலில் ஆக்கிரமிப்புகளையும், நீர்வழிபாதைகளையும் கண்டறிந்து சீரமைத்து பின்னர் தூர்வாரியுள்ளோம். மேலும் 4.50 லட்சம் லட்சம் பனை விதைகள் விதைத்து, 3.80 லட்சம் மரங்கன்றுக்கள், 38 குறுங்காடுகளை அமைத்துள்ளோம். அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை விட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் எங்கள் பணிகள் தொடருகிறது,” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT