Published : 13 Aug 2024 02:54 PM
Last Updated : 13 Aug 2024 02:54 PM
மதுரை: மதுரை புதுமண்டபத்தில் உள்ள கலைச் சிற்பங்களை கோட்டோவியமாக வரைந்து பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் கவனத்தை ஈர்த்தவர் மதுரை ஓவியர் மு.ரத்தினபாஸ்கர்.
இவர் அதே புதுமண்டபத்திலுள்ள 744 புடைப்புச் சிற்பங்களை கோட்டோவியங்களாக வரைந்து ‘உளி ஓவியங்கள் 2’ என்ற இரண்டாம் பாகமாக தமிழ், ஆங்கில பதிப்புகளில் வெளியிட்டு மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். தொன்மை நகரான மதுரையின் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோயில், புதுமண்டபம், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் தெப்பக்குளம் உள்ளிட்டவை திகழ்கின்றன. மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர், தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவை மீனாட்சி அம்மனே வந்து குணமாக்கினார் என்ற நம்பிக்கையால் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஏராளமான மானியங்களை வழங்கினார்.
அதன்படி மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு கோபுரத்துக்கு எதிரில் கருங்கல்லால் ஆன வசந்த மண்டபத்தை கி.பி.1626 முதல் கி.பி.1645-ம் வரையிலான 19 ஆண்டுகளில் கட்டி முடித்தார். தலைமை சிற்பி சுமந்திரமூர்த்தி தலைமையிலான சிற்பிகள் இந்த மண்டபத்தை உருவாக்கினர். இந்த வசந்த மண்டபம் கிழக்கு மேற்காக 322 அடி நீளம்மு, தெற்கு வடக்காக 90 அடி அகலமும், 25 அடி உயரமும் உடையது.
இந்த மண்டபத்தில் அழகிய சிற்ப வேலைப்பாடுடைய 124 தூண்கள், 5 சிறு தூண்கள் அழகுற காட்சி அளிக்கின்றன. இம்மண்டபத்தில் 22 தெய்வ உருவச் சிலைகள், 2 முனிவர்கள், 4 சேடிப் பெண்கள், 10 யாழி சிலைகள், 6 குதிரை வீரர்கள், உட்கூரையில் 5 சக்கரங்கள், ஆட்சிபுரிந்த நாயக்க வம்சத்தினரின் 10 சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிற்பங்கள் அனைத்தையும் கோட்டோவியங்களாக வரைந்து ‘உளி ஓவியங்கள்’ என்ற நூலை உருவாக்கினார் மதுரையைச் சேர்ந்த ஓவியர் மு.ரத்தின பாஸ்கர் (51). இவரது நூலை பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க சென்னைக்கு வருகை தந்தபோது கலைப் பொக்கிஷ பரிசாக வழங்கினார்.
இதன் மூலம் அனைவரின் கவனத்துக்கும் உளி ஓவியங்கள் நூல் வந்தது. பின்னர் முதல்வரை நேரில் சந்தித்து ஓவியர் மு.ரத்தினபாஸ்கர் அன்பளிப்பாக தனது நூலை வழங்கினார். தற்போது புதுமண்டபத்திலுள்ள புடைப்புச் சிற்பங்களை கோட்டோவியமாக வரைந்து ‘உளி ஓவியங்கள் 2’ என்று தமிழ், ஆங்கில பதிப்பதாக வெளியிட்டு மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஓவியர்.
இது குறித்து ஓவியர் மு.ரத்தினபாஸ்கர் கூறுகையில், "சிற்பங்களின் கருவூலமாக, கலைக் கூடமாகத் திகழும் புதுமண்டபத்திலுள்ள சிற்பங்களை கண்டு வியந்தேன். அதிலுள்ள சிற்பங்களை வெளிநாடுகளைச் சேர்ந்த 2 பேர் கோட்டோவியமாக வரைந்து புத்தகமாக ஆவணப்படுத்தியுள்ளனர். அதேபோல் மதுரையைச் சேர்ந்த நாமும் மதுரைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிலுள்ள சிற்பங்களை 2015 முதல் கோட்டோவியமாக கையடக்க கணினி மூலம் வரையத் தொடங்கினேன்.
புதுமண்டபத்தில் 60 ஒற்றைக்கல் சிற்பங்கள், 744 புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதில் 60 சிற்பங்களை நேர் பார்வை, இடப்பார்வை, வலப்பார்வை என முப்பரிமாண பார்வையில் 180 கோட்டோவியங்களாக வரைந்து நூலாக (தமிழ், ஆங்கிலப் பதிப்பு) 2023ல் மதுரை தியாகராசர் கல்லூரியில் வெளியிட்டேன். தற்போது அடுத்த கட்ட நூலாக 744 புடைப்புச் சிற்பங்களையும் கோட்டோவியமாக வரைந்து, ’உளி ஓவியங்கள் 2’ என்ற நூலின் இரண்டாம் பாகத்தை தியாகராசர் கல்லூரியில் வெளியிட்டுள்ளேன்.
தமிழ் பதிப்பை பேராசிரியர் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா வெளியிட மாநகராட்சி பள்ளிகளின் புரவலர் ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார். அதேபோல் ஆங்கிலப் பதிப்பை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி வெளியிட தியாகராஜர் கல்லூரி தாளாளர் தியாகராஜன், ரத்தினகுமாரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மூன்றாவது படைப்பாக, பாண்டிய நாட்டில் திருவிளையாடல்கள் நிகழ்ந்த கோயில்களின் சிற்பங்களை கோட்டோவியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்” என்று ஓவியர் ரத்தினபாஸ்கர் கூறினார்.
புதுமண்டபத்திலுள்ள சிற்பங்களை நேரில் வந்து பார்க்க இயலாதவர்களுக்கு புதுமண்டபத்தையே பார்க்கும் அனுபவத்தை இந்த நூல்கள் மூலம் சாத்தியமாக்கியுள்ளார் கோட்டோவியர் மு.ரத்தினபாஸ்கர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT