Published : 10 Aug 2024 11:33 PM
Last Updated : 10 Aug 2024 11:33 PM
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் ராம்பச்சோதவரம் தொகுதியின் எம்எல்ஏ மிரியாலா சிரிஷா தேவி, தனது 9 சீட்டர் காரினை பழங்குடி மக்கள் பயன்பாட்டுக்காக ஆம்புலன்ஸாக மாற்றி உள்ளார். அல்லூரி சீதாராம ராஜு (ஏடிஆர்) மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர்களுக்கு இந்த ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு இதன் சேவை வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. “முறையான மருத்துவ சிகிச்சைக்காக அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் காக்கிநாடா மற்றும் ராஜமகேந்திரவரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகின்றனர்.
அது மாதிரியான சூழலில் தனியார் ஆம்புலன்ஸ் சேவையை பெற பழங்குடி மக்கள் அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது. சமயங்களில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழப்பு ஏற்பட்டால் அந்த உடலை கொண்டு வர கூடுதலாக பணம் செலவு செய்ய வேண்டி உள்ளது.
இது இந்த பகுதியில் அதிகம் அரங்கேறுகிறது. இந்த நிலையில் மக்களுக்கு உதவும் வகையில் எனது இரண்டு கார்களில் ஒன்றை ஆம்புலன்ஸாக மாற்ற முடிவு செய்தேன். அதனை செய்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளேன்” என எம்எல்ஏ மிரியாலா சிரிஷா தேவி தெரிவித்துள்ளார். இவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT