Published : 26 Jul 2024 06:30 PM
Last Updated : 26 Jul 2024 06:30 PM

‘இதுவரை 83,000... இலக்கு 1 கோடி!’ - தண்ணீர் லாரி வாங்கி மரக்கன்று பராமரிக்கும் மதுரை பொறியாளர்

மதுரை: சொந்தமாக தண்ணீர் லாரி வாங்கி மரக்கன்றுகளை பராமரித்து வரும் மதுரையைச் சேர்ந்த பொறியாளர், ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்போவதாக தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைகள், பள்ளிகளில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து, அதற்காக சொந்தச் செலவில் இதுவரை 83,000 மரக்கன்றுகளை நட்டுள்ளார் மதுரை பொறியாளர் ஒருவர். அந்த மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி பராமரிப்பதற்காகவே, சொந்தமாக தண்ணீர் லாரியை விலைக்கு வாங்கி நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளார் இவர்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ''ஒவ்வொரு மனிதனும் 10 முதல் 15 மரக்கன்றுகளை தங்கள் வாழ்நாளில் நட வேண்டும். அப்போதுதான் இந்தியாவை பசுமை வல்லரசாக்க முடியும்'' என்றார். அவர் சொன்ன அந்த வார்த்தைகளை மதுரை அருகே அழகர்கோயில் காதக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த சோழன் குபேந்திரன் வேதவாக்காக எடுத்துக் கொண்டுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக மதுரை மாநகரின் முக்கிய நெடுஞ்சாலைகளில், அரசு பள்ளிகளில் தனது சொந்தச் செலவில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார் சோழன் குபேந்திரன். சிவில் இன்ஜினீயரான இவர், சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இதுவரை மதுரை மாவட்டத்தில் இவர் 83,000 மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறார். இதில், 47 மரக்கன்றுகளை அரசுப் பள்ளிகளில் நட்டு மாணவர்களுக்கு பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

ஆரம்பத்தில் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆர்வமாக மரக்கன்றுகளை நட்டு தன்னுடைய பசுமை பணியை தொடங்கச் சென்றுள்ளார் சோழன் குபேந்திரன். ஆனால், அங்கே மாணவர்களுக்கு குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத சூழலில் எப்படி மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது என்று ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சோழன் குபேந்திரன், அந்தப் பள்ளியில் தனது மரக்கன்று நடும் முதல் முயற்சியை கைவிடாமல் முதலில் மாணவர்கள் குடிப்பதற்கு ரூ.2.5 லட்சத்தில் ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளார். அதன்பிறகு மாணவர்களைக் கொண்டு பள்ளி வளாத்தில் மரக்கன்றுகளை நட்டுள்ளார். தற்போது அவர் வைத்த அந்த மரக்கன்றுகள் பெரும் மரங்களாக வளர்ந்து நிற்கின்றன.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சோழன் குபேந்திரன், ''மரக்கன்றுகளை நடுவதோடு என் பணி முடிந்துவிடுவதாக நான் நினைப்பதில்லை. வைத்த கன்றுகளை நானே மரமாக வளரும் வரை பராமரிக்கிறேன். மதுரையில் சர்வேயர் காலனி - அழகர் கோயில் சாலை, ஏர்போர்ட் ரிங் ரோடு, நத்தம் ரோடு, அய்யர் பங்களா போன்ற இடங்களில் நான் வைத்த மரங்களை நானே லாரிகளில் தண்ணீர் எடுத்துவந்து தண்ணீர்விட்டு பராமரிக்கிறேன். நான் 15 அடி உயர மரக்கன்றுகளாகவே நடுகிறேன். பொது இடங்களில் சிறிய கன்றுகளை நட்டு வளர்ப்பது சிரமம் என்பதால் அவற்றை நடுவதில்லை.

மரம் நடுவதில் நாட்டு மரக்கன்றுகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். வேம்பு, மருதம், புங்கை, ஆலம், அரசு, வாகை, மகிழம், மருதம், கடம்பம், மந்தாரை போன்ற 15 வகையான மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். மதுரைக்கு, முன்பு கடம்பவனம் என்ற பெயர் இருந்தது. அந்தப் பெயரை மீள் உருவாக்கும் செய்யும் வகையில், கடம்பம் மரங்களை அதிகளவு நடுகிறேன்.

சோழன் குபேந்திரன்

இந்த மரங்கள், தற்போது இந்தப் பகுதியில் பெரியளவில் கிடைக்காததால், ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து வாங்குகிறேன். அங்குதான் உயரமான மரக்கன்றுகள் கிடைக்கிறது. தற்போது அடுத்தகட்ட முயற்சியாக, ஊமச்சிகுளம் தாண்டி, நத்தம் சாலையில் கருவனூர் கிராமத்தில், சொந்தமாக 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் 1 கோடி மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.அங்கு உருவாக்கப்படும் மரக் கன்றுகள் இன்னும் 6 அல்லது 8 மாதத்தில் 7 அடி உயர மரக்கன்றுகளாக வளர்ந்துவிடும்.

நாங்கள் அந்த மரக்கன்றுகளை சாலையில் நடுவதோடு மட்டுமில்லாது யார் கேட்டாலும், இலவசமாகவும் வழங்க உள்ளோம். எங்கள் இலக்கு, மதுரையில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவது. அடுத்த தலைமுறையினருக்கு பசுமையான எதிர்காலத்தை, ஏற்படுத்திக் கொடுக்கவே இந்த சிறு முயற்சியை மேற்கொண்டுள்ளேன். ஒவ்வொருவரும் என்னைப்போல் மரக்கன்றுகள் நடுவதை ஒரு சமூக பணியாக மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. வாழ்வியல் சார்ந்த ஒவ்வொரு தருணங்களிலும் மரக்கன்றுகளை நட்டாலே போதுமானது.

புதிய பைக் வாங்கும்போது, பிறந்த நாள், திருமண நாள், முன்னோர்கள் நினைவு நாள் உள்ளிட்ட நாட்களில் மரக்கன்றுகளை நடலாம். இப்படி பொதுமக்களையும் எங்களுடன் இந்த பணியில் ஈடுபடுத்த ஊக்குவிக்கிறோம். எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. எனது வருவாயில் ஒரு பகுதியை இயற்கைக்காக ஒதுக்கி இந்த பணியை செய்கிறேன்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x